மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன்!! (கட்டுரை)

Read Time:19 Minute, 36 Second

தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை தவிர்க்க முடியாதுள்ளது. அதன் விகிதாசரத்துக்கேற்ப சமூகம் சிந்தனைத் திறனுடன் செயல்படும் ஆற்றலையும் இழந்துவிடும் நிலையேற்படும்.

நாட்டில் காணப்படும் இந்த படுமோசமான நிலைக்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசு எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? இந்த அரசு எவ்வித நடைமுறை சாத்தியமான இலக்கும் இன்றியே செயல்படுகிறது.

தற்போது இந்த அரசு பாதுகாப்பு படையினதும் அதி உயர் பௌதிக சக்திகளினதும் தயவை நாடிக்கொண்டு, மிகவும் பலவீனமான நிலையில்தான் உள்ளது. நாட்டிலிருந்த சில தனவந்தர்கள் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்த கடுமையாக உழைத்தனர். அவ்வாறு பணத்தை வாரி வீசியவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வீசவில்லை. மாறாக அவர்கள் தமது இழந்த பணத்தை பல மடங்காக மீளப்பெற்றுக்கொள்ளும் வகையில் அரச அங்கீகாரத்துடன் நாட்டை கொள்ளையடித்துக்கொண்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

தலைவரின் தலையிடி

ஆட்சி மாற்றத்தின் பின் இலகுவாக ஆட்சியை நடத்திச்செல்லக்கூடிய ஒரு நாடாக இலங்கை காணப்படவில்லை மிகச்சிறந்ததோர் ஆட்சியாளருக்கும் கூட கட்டுப்படுத்த இயலாத படு பாதாளத்தில் விழுந்திருந்த நாடாகவே இலங்கை அவ்வேளையில் காணப்பட்டது.

எனினும் அக்காலகட்டத்தில் கோட்டாபய அவரது கடுமையான பிரச்சாரப்பணிகள் காரணமாக மக்கள் மத்தியில் செயற்கையாகவே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு தலைவராக அவர் காணப்பட்டார். முறையாக ஆராய்ந்து முடிவெடுக்கத்தெரியாத இலங்கை மக்கள் கோட்டாபயவின் பேச்சில் மயங்கி இமையமலை அளவுக்கு அவர் மீது நம்பிக்கை வைத்து தமது பெறுமதிமிக்க வாக்குகளை அவருக்கு அள்ளிக் கொடுத்தனர். (இலவசக் கல்வி மூலம் இலங்கை மக்களில் 100% ஆனோர் எழுதவும், வாசிக்கவும், கையொப்பமிடவுமே தெரிந்துள்ளனர் ஆனால் ஒரு விடயத்தை சரியாக அறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் 5% ஆவது நாட்டில் இல்லை – மொழிபெயர்ப்பாளர்).

அதன்படி மக்களில் பெரும்பாண்மையினர் கோட்டாபயவிற்கு தமது வாக்குகளை அளித்து அவரை முறுங்கை மரத்தின் உச்சிக்கே ஏற்றி விட்டனர். அவ்வாறு அவரது புகழ் எந்த அளவுக்கு ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் அவர் ஜனாதிபதியாகி வெற்றியடைந்தார்.

அதன் பின் அவரது புகழ் காற்று இறக்கப்பட்ட பலூன் ஒன்றைப் போல் கீழே தள்ளப்பட்டது. கோட்டாபய பாதுகாப்புப் படையின் அதிகாரியாக செயல்பட்ட காலத்தில் அவர் தமது முழுத்திறமையையும் வெளிக்காட்டிய ஒரு திறமையான பாதுகாப்புப் படை அதிகாரியாக இருந்திருக்கலாம். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் விவாதத்திற்குட்பட்டிருந்த போதிலும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் யுத்தத்தின் இணைப்பாளராக மிக முக்கியமான நடவடிக்கைகளில் அவர் மிகத்திறமையாக ஈடுபட்டார்.

எனினும் நாட்டின் தற்கால அரசியல் நிலை பற்றி எவ்வித ஆய்விலும் ஈடுபடாமலும் எந்த அனுபவமும் இல்லாமல் தான் அவர் ஆட்சித் தலைமைத்துவத்திற்கு வந்தார். 19 ஆவது அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றிய அறிவு அவருக்கு இருக்கவில்லை. நாடு எந்த அளவிளான ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய ஆழமான அறிவும் அவருக்கு இருக்கவில்லை.

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் ஆட்சியாளர்களை சோதனைக்குட்படுத்துவதற்காக நடைமுறையில் காணப்பட்ட அமைப்பு முறையை ‘கழுத்தை நெருக்கிக் கொன்றுவிடும்’ ஒரு முறையைத்தான் அவர் பின்பற்றி வருகிறார.; அரசியல் வித்தகர் ஐவர் ஜெனின்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். “கட்டுப்படுத்த முடியாத அதிகாரத்தைக்கொண்டு தமது அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக மோசடிக்குள்ளாக்கப்படுவார்கள்”.

இராணுவ மயப்படுத்தல்

தாம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாரதூரமான பிரச்சினைகளைப் பற்றி அறியாதவராகவே ஜனாதிபதி இருக்கிறார். சிவில் நிர்வாகம் ஒன்றை விட இராணுவ நிர்வாகமொன்றினால் அப்பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று அவர் நினைக்கின்றார். நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான குழப்ப நிலையைத் தீர்ப்பதற்கு அது ஒரு தீர்வாகாது. மேலும் அது பாதுகாப்புப் படையினருக்கு நன்மையாகவோ, கௌரவமாகவோ அமையாது. நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர்களே பாதுகாப்புப் படையினர் மாறாக அவர்கள் நாட்டை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது. பாதுகாப்புப் படைக்காக ஆட்களை சேர்க்கும்போது, அவர்களுக்கு நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படையான விடயங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி வழங்கப்படுகின்றதேயன்றி அந்நாட்டின் நிர்வாகம் பற்றி அடிப்படையான விடயங்களையோ அதற்கான தொழில்நுட்பம் பற்றிய பயிற்சியோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

உலகில் பல நாடுகளில் இராணுவ ஆட்சிகள் ஏற்கனவே இருந்தன. ஆனால் தற்போது ஆபிரிக்காவில் சூடான் நாட்டில் மட்டுமே இராணுவ ஆட்சி காணப்படுகிறது. அதுவும் பொது மக்களின் போராட்டத்தின் விளைவாக சிவில் நிர்வாகமொன்றுக்கு மாறுவதற்கான ஒப்பந்தமொன்றை செய்து கொண்ட பின்பு தான் அந்நிலை ஏற்பட்டது. இறுதியாக ஆசியாவில் இராணுவ ஆட்சி நடைமுறையிலிருந்த நாடு தாய்லாந்தே எனினும் 2019 ஜூலை 16ம் திகதி அந்த இராணுவ ஆட்சியும் முற்றுப் பெற்றது.

இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு உலகில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமையாகத் தோல்வி கண்டுள்ளது. காலத்துக்கொவ்வாத அந்தக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபயவும் பரீட்சித்துக் கொண்டிருக்கிறார் போலும். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புப் படைக்கு மட்டுமன்றி நாட்டை நிர்வகிப்பவர்களுக்கும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்படும். பாதுகாப்புப் படையினர் இந்த பொறியில் அகப்படாது தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் அரசியலமைப்பு நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்புடையதாகும்.

எதிர்கட்சிகளின் காலத்துக்கொவ்வாத முன்னெடுப்புக்கள்

தற்கால இலங்கை முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு ஆளும்கட்சி மட்டுமன்றி எதிர்கட்சிகளும் ஐம்பது வீதம் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளது. நாடு முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு ராஜபக்ஷாக்கள் மட்டும் பொறுப்புக்கூற முடியாது. நாட்டு நிர்வாகத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள பாரளுமன்ற பிரதிநிதிகள் அனைவருமே நாட்டின் இன்றைய பரிதாப நிலைக்கு பதில் கூற வேண்டும்.

நாட்டின் இன, மத, குலம் என்ற வகையில் காணப்படும் பிரிவுகள் காரணமாகவே நாட்டில் மோதல்களும் இரத்தம் சிந்தலும் ஏற்பட்டது. நாடு இந்த அளவில் சிதைந்து போவதற்கு அது ஒரு முக்கிய காரணியாகும். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கும் அதற்கு பாலூட்டி வளர்ப்பதற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த நாடு இந்த அளவில் குட்டிச்சுவராவதற்கான மற்றுமொரு காரணி நாட்டில் பரந்த அளவில் காணப்படும் தில்லுமுல்லுகளும் மோசடிகளும் ஆகும். நாட்டில் ஒவ்வொரு தடவையும் ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும் நாட்டின் ஜனாதிபதியுடன் கைகோர்த்துக்கொண்டு நாட்டின் சொத்துக்களை சூரையாடுவது இந்த நாடு மோசடிகளால் துர்நாற்றமடிப்பதற்கான பிரதான காரணியென்று துணிச்சலாகக் கூற முடியும்.

ஆனால் தற்போது எதிர்கட்சிகளின் தான்தோன்றித்தனமான நிலை எவ்வாறாக உள்ளது? அதற்குள் நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரிவிணை எனும் நோய்க்கு முதலில் சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாது எவ்வாறாயினும் “தலைமைப்பதவியை” தான் அடைந்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து கையிறிழுப்பில் ஈடுபட்டு வருவதை நாம் கானக்கூடியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினது இது போன்ற ‘தாளத்துக்கு’ பொது மக்கள் ‘நடனமாடாது’ கவனமாக இருத்தல் அவசியமாகும்.

நாம் என்ன செய்யலாம்?

இந்த துரதிஷ்டவசமான நிலையிலிருந்து நாட்டைத் தூக்கியெடுப்பதற்கு நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைக்கோர்த்துக்கொண்டு முன்வர வேண்டும். இவ்வாறான ஒற்றுமை ஒவ்வொரு நாட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டும். பல்வேறு மட்டத்திலான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலமே அவ்வாறான நிலையை நாட்டில் தோற்றுவிக்க முடியும்.

ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவெனில் நாட்டிலுல்ல அரசியல் கட்சிகள் தமது குறுகிய வட்டத்திலுள்ள சிந்தனைக்கேற்பவே மேற்படி கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டுமென்று நினைப்பதாகும். எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள படு மோசமான குழப்பநிலை பற்றி மிக விரிவாகவும் சரியாகவும் புரிந்து கொண்டுள்ள தனி மனிதர்களும் அமைப்புக்களும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களில் ஒரு சிலராவது இணைந்து ஒரு அமைப்பாக மாறி ஒரே குரலில் மிக ஆணித்தரமாக பேச முன்வருவார்களாயின் தற்போதைய அரசு மேற்கொண்டுள்ள மிகத் தவறான பயணத்தில் கணிசமாண அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இந்த நாடு தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்குமானால் நாடு அதள பாதாளத்தில் விழுவதை எவராலும் தடுக்க முடியாது போய்விடும். நாட்டுக்கு அந்த நிலை ஏற்படின் அதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இலகுவான விடயமல்ல.

தென்னாபிரிக்காவின் வெள்ளை ஆட்சியினருக்கு இது போன்றதொரு நிலைதான் ஏற்பட்டது. கறுப்பு – வெள்ளை இனப்பிரச்சினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு அவர்கள் மிருகத்தனமாக ஆட்சி செய்தனர். அந்த நாட்டில் ‘நிற’ வேறுபாட்டுப் பிரச்சினை உச்ச கட்டத்திற்குச் சென்ற பின்னரே ஆட்சியாளர்கள் தமது குரூரமான போக்கைக் கைவிட்டனர். அதன் பெறுபேராக நாட்டு மக்களினது பங்களிப்புடன் புதிய அரசியலமைப்புப்பொன்றை அமைப்பதற்கான கதவு திறக்கப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தேசத்தைப் புணர்நிர்மாணம் செய்வதற்குமான பணி அதன் பின்பே அங்கு ஆரம்பமானது.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கும் தேவைப் படுவதெல்லாம்; அவ்வாறான மாற்று நடவடிக்கைகளே. இலங்கையிலும் பொது மக்களது பங்களிப்புடனான அரசியலைப்புப்பொன்றை உருவாக்குவதற்கு பொது மக்களும் நாட்டிலுள்ள புத்தி ஜீவிகளும் முன் வரவேண்டும். அந்த அரசியலமைப்பு 21ம் நூற்றாண்டுகளுக்குப் பொருத்தமான ஒரு அரசியலமைப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்புப்பொன்றை உருவாக்குவதற்கு ரணிலோ எமது நாட்டின் தலைவர்களோ தெரிந்திருக்கவில்லை. அவர்கள் மட்டுமன்றி இலங்கையில் அரசியல் விஞ்ஞானம் பற்றி பாடம் கற்பிக்கும் எமது பேராசிரியர்களில் பலருக்கு அது பற்றி தெளிவான விளக்கமில்லை.

நாம் புதிய அரசியலமைப்பொன்றின் மாதிரிப் படத்தை வரைந்தால் (எழுதினால்) மட்டும் அப்பணி முழுமையடைந்து விடாது. மாறாக நாட்டிலுள்ள அனைத்து வகையான பிரச்சினைகளைப் பற்றியும் அலசி ஆராயப்படல் வேண்டும். அது மட்டுமின்றி நாட்டின் மறு சீரமைப்பு விடயங்கள் பற்றியும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் ஈடுபடும் குழுவினருக்கு மேற்படி இரண்டு விடயங்கள் பற்றி ஆய்வில் ஈடுபடுத்துவதற்கான உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அந்த மாதிரி அரசியலமைப்புக்கு சிவில் மற்றும் அரசியல் உரிமைப்பற்றிய சாசனமொன்றுக்கு முன்வைக்கப்படும் விளக்கத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மேலும் அது சர்வதேச சட்டத்திற்கேற்பவும் 21ம் நூற்றாண்டில் அரசியலமைப்பின் முன்மாதிரியாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அந்த மாதிரியை தயாரிப்பதற்கான ஆய்வுப் பணியில் நாமும் ஈடுபட வேண்டும்.

இது போன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலமே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ‘வங்குரோத்து’ நிலை உட்பட அரச நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சிகளிலிருந்தும் அவற்றை காப்பாற்றி கரை சேர்க்க முடியும். அது மட்டுமன்றி நவீன தேசமொன்றையும் எம்மால் கட்டியெழுப்ப முடியும். அது போன்றதொரு மறுசீரமைப்பை நாட்டில் உருவாக்கிய பின்பே நாம் தேர்தலொன்றிற்குச் செல்ல முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியம் தரும் அமைதி!! (மருத்துவம்)
Next post இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை ! (வீடியோ)