இயற்கை தரும் இதமான அழகு!! (மகளிர் பக்கம்)
நம்மைச் சுற்றி உள்ள சில மூலிகைகளும் சரும நோய்க்கான சிறந்த மருந்தாக விளங்குவதை அறிந்திருக்கிறோமா? செயற்கையான வாசனைத் திரவியங்கள், வேதியல் பொருட்களைப் போல் அல்லாமல் இவற்றில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்று பட்டியலிட்டார் ஆராய்ச்சியாளர் டாக்டர் நவீன் ஷர்மா.
வெள்ளரிக்காய்
வெள்ளரி விதை, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவற்றைச் சருமத்தின் மீது பூசிக்கொள்ளச் சிகப்பழகு பெறுவதுடன் பட்டுப் போன்ற மென்மையும் தரும். இதன் மருத்துவக் குணம் தீப்புண், வெயில் ஆகியவற்றால் ஏற்படும் சரும எரிச்சலைக் குளிரவைக்கும். இதன் சாறு உடலைக் குளிரவைப்பதுடன் சருமத்தை அழகுபடுத்தும். சருமத்துக்கு இதமானது என்பதுடன் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். வெப்பக் காற்றுப்பட்டு வறண்டுபோகும் சருமத்தைக் குளிர்விப்பதால்தான், விஷயம் அறிந்த பெண்கள் வெள்ளரி சோப்பைப் பயன்படுத்துகின்றனர்.
கற்றாழை
ஆரோக்கியம், புத்துணர்ச்சி ஆகியவற்றுடன் முதுமையைத் தடுக்கும் ஆற்றலும்கொண்டது கற்றாழை. சருமப் பிரச்னைகளுக்காகவே கற்றாழை பெரும்பாலும் பயன்படுகிறது. தோல் அலர்ஜி, அக்கி, அம்மை, அரிப்பு, வெட்டு, சிராய்ப்பு, தீக்காயம் ஆகியவற்றுக்குச் சிறந்த மருந்து கற்றாழை.
கற்றாழையின் தண்டில் சிறப்பான கூட்டுப் பொருட்கள் இருக்கின்றன. இதில் உள்ள வீக்க எதிர்ப்புச் சத்துக்கள் வலியைக் குறைப்பதுடன், தீப்புண், எரிச்சல் மற்றும் அரிப்பைக் குறைக்கின்றன. மிக முக்கியமாக இதில் உள்ள முதுமை எதிர்ப்பிகள் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன், சருமத்துக்குப் பட்டுப் போன்ற மென்மை, ஈரத் தன்மை, பாதுகாப்பு, புத்துணர்ச்சி ஆகியவற்றையும் தருகின்றன. கற்றாழை ஜெல் உயிரணுக்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன் சேதமடைந்த சருமத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் குளிர்ச்சியைத் தருகிறது.
வல்லாரை
வல்லாரையிலும் முதுமை எதிர்ப்பிகள் அதிகம் இருப்பதால் காஸ்மெடிக்ஸ் தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. சீழ்ப்புரை, குழந்தை பிறந்த பிறகு வயிறு சுருங்குவதால் ஏற்படும் கோடுகளையும் தீர்க்கவல்லது. எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை நீக்கிச் சருமத்தைச் சுத்தப்படுத்தி மிருதுவாக வைத்திருக்கும்.
துளசி
ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த மருந்து துளசி. குறிப்பாக முகப்பரு, முதுமை, பேன், பொடுகு, பூச்சிக் கடி ஆகியவற்றுக்குச் சிறந்த நிவாரணி. கொசுவை விரட்டும் தன்மை இருப்பதால் கொசு விரட்டிகளில் இது பயன்படுத்துகிறது.
மஞ்சள்
ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன், சருமத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, ஆரோக்கியத்துடன் இயற்கையாக ஒளிரவைக்கும். வீக்கம், பாக்டீரியா மற்றும் முதுமை எதிர்ப்பிகள் இருப்பதால் முகப்பரு, தடிப்பு, கருந்திட்டுகள் மற்றும் சரும நோய்களுக்கான சிறந்த மருந்தாகும். உலர் சருமத்தை மென்மையாக்கிச் சருமம் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கிறது.
சந்தனம்
ஆயுர்வேத மருத்துவத்தில் சந்தனத்தின் பயன்பாடு மிக அதிகம். அரிப்பு, சிராய்ப்பு, வறட்சி, சொறி, முகப்பரு உள்ளிட்ட பெரும்பாலான சருமப் பிரசினைகளுக்குத் தீர்வாகும். வெளிப்புறப் பயன்பாட்டில் எண்ணெய்யாகவும், பேஸ்டாகவும், லோஷனாகவும், சோப்பாகவும் பயன்படுத்தலாம். கடுமையான வெயிலில்கூட உடலைச் சில்லெனக் குளிர்விக்கும்.
Average Rating