பழம் மட்டுமல்ல தோலும் அழகுக்கு தான்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 32 Second

இயற்கை ஓர் அற்புதம்; அதன் கொடை மகத்தானது. அந்த வகையில், இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடியவை பழங்களும் காய்கறிகளும். பழத்தைவிட, தோலில் அதிகச் சத்து உள்ளது என்பது பொதுவான கருத்து. மாதுளை, பலா உள்ளிட்ட பல பழங்களின் தோல்கள் கடினமானவையாக இருக்கும்; பயன்படுத்த முடியாது. ஆனால், கொய்யா, மாம்பழம், ஆப்பிள் போன்ற சில பழங்களைத் தோலுடன் சாப்பிட முடியும். இங்கே சில பழத் தோல்களும் அவற்றின் பயன்களும்…

மாம்பழம்

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது. இரும்புச்சத்து நிறைந்த மாம்பழம் கர்ப்பிணிகளுக்குச் சிறந்தது. மாம்பழத்தில் உள்ள அளவுக்கு, அதன் தோலிலும் வைட்டமின் சி சத்து அடங்கி உள்ளது. மாம்பழத்தோலைக் கூழாக்கி, அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால், கருவளையம் மெள்ள நீங்கும்.இதனுடன் சிறிது தேன் கலந்து, கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வாழை

வாழைப்பழத்தில், வைட்டமின் சி, மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம் உள்பட ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதன் தோலைத் தவிர மற்ற அனைத்துப் பாகங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். தோலும்கூட பயன் தரக்கூடியதுதான். வாழைப்பழத் தோலை வெயிலில் நன்கு உலரவைத்து, அதைப் பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில், மாவுச்சத்து, புரதச்சத்து நிறைவாக உள்ளது. இதை, பாலில் கலந்து பயன்படுத்தினால், அது முழு உணவாகச் செயல்படும்; பாலின் சுவையையும் கூட்டும். வாழைப்பழத்தோலின் உட்பகுதியைப் பற்களில் தேய்த்துவர, பல்லின் மஞ்சள் தன்மை நீங்கி, பளிச் வெண்மை பெறும்.

ஆரஞ்சு

வைட்டமின் சி அதிகம் உள்ள இந்தப் பழம், புற்றுநோய் தடுப்பானாகச் செயல்படுகிறது. ‘ஆரஞ்சு’ போன்ற சிட்ரஸ் பழங்கள், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வல்லமை கொண்டவை. ஆரஞ்சு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. பாத வெடிப்புகளில் தோலைப் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஆரஞ்சுப்பழத் தோலை சேகரித்து, ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன்படுத்தலாம். ஆரஞ்சுப்பழத் தோலுடன் சிறிது உப்பு சேர்த்து, வாஷ்பேஸின், கிச்சன் மேடை போன்றவற்றைச் சுத்தப்படுத்த ஸ்க்ரப்பர் போலப் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சுப்பழத் தோலைப் பொடி செய்து, டீத்தூளுடன் சிறிதளவு சேர்த்துப் பயன்படுத்த, டீயின் சுவை கூடும். தொடர்ந்து எடுத்துவந்தால், புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும். மேலும், இந்தப் பொடியுடன் சிறிதளவு பால், தயிர் சேர்த்து, ஃபேஸ்பேக் போல பயன்படுத்த, பொலிவிழந்த முகம் களைகட்டும். ஆரஞ்சுப்பழத் தோல் பொடிக்கு, பற்கூச்சத்தை நீக்கும் வல்லமை உண்டு. இதனை, வீட்டுத் தோட்டத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். இதன் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.

மாதுளை

மாதுளம்பழத்தைப் போலவே, இதன் தோலும் அதிகப் பலன் கொண்டது. பெரும்பாலும் இதைச் சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம். மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இந்தப் பொடியை நீருடன் கலந்து கொப்பளிக்க, வாய்துர்நாற்றம் நீங்கும். மாதுளம்பழத் தோலின் பொடியுடன், பால், ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம். ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன் படுத்தலாம்.

மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும். மாதுளம்பழத் தோலைச் சாப்பிட்டால், இதய நோய்கள் வராமல் காக்கும். எலும்பை வலுவாக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளன. தாகம் தணிக்கும்; தலைவலி நீக்கும்; ஸ்கர்வியைத் தடுக்கும்… என நல்ல பல பலன்களைத் தரும் எலுமிச்சைத் தோலை பல வழிகளில் பயன்படுத்தலாம். எலுமிச்சைத் தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது.

எலுமிச்சைப்பழத் தோலில் உள்ள எண்ணெய், நறுமணத் தைலங்கள் தயாரிக்க உதவும். எறும்பு போன்ற பூச்சிகளைத் தடுக்கும் சாக்பீஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எலுமிச்சைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும். சில குளிர்சாதனப் பெட்டிகளைத் திறந்தாலே துர்நாற்றம் வீசும். இதைக் கட்டுப்படுத்த, எலுமிச்சைப்பழத் தோலை அதில் போட்டு வைக்கலாம். மைக்ரோவேவ் ஓவனைத் தூய்மைப்படுத்த, எலுமிச்சைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம்.எலுமிச்சைப்பழத் தோலை நகங்கள் மீது தேய்க்க பளபளப்புக் கிடைக்கும்.

சப்போட்டா

தித்தித்திக்கும் சுவை படைத்த சப்போட்டா, வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. அதிக ஆற்றல் தரும்; எளிதில் ஜீரணம் அடையக்கூடியது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவையும் உள்ளன. பொட்டாசியம், இரும்பு, தாமிரம் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன.

சப்போட்டா பழத்தின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதைவிட, அப்படியே சாப்பிடுவதே சிறந்தது. இந்தப் பழத்தைத் தோலுடன் சாப்பிட, வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படும். சப்போட்டா தோல் வயிறு, குடல் புற்றுநோயைத் தடுக்கும் வல்லமை கொண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலை காக்கும் கேடயம் வெங்காயம்!! (மருத்துவம்)
Next post ஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் !! (வீடியோ)