சீன மருத்துவத்தில் என்ன சிறப்பு?! (மருத்துவம்)
உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாயகமாகக் கருதப்படும் சீனா, அந்நோயின் கொடிய கரங்களில் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிட்டது. இதற்கு அந்நாட்டு மக்களின் கூட்டு முயற்சி ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களுடைய மருத்துவப் பாரம்பரியமும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அத்தகைய தனித்துவம் வாய்ந்த சீன மருத்துவத்தின் தனித்தன்மைகள் என்னவென்று நாமும் தெரிந்துகொள்வோம்!
* Traditional Chinese Medicine என சிறப்பிக்கப்படுகிற சீன மருத்துவம், ஏறக்குறைய 3,500 வருடத்துக்கும் முந்தைய வரலாற்றினைப் பின்புலமாக கொண்டது.
* உலகின் பழமையான மருத்துவ முறை என கருதப்படுவனவற்றுள் சீன மருத்துவமும் முதன்மையானதாக திகழ்கிறது. இதற்கு அம்மொழியில் இயற்றப்பட்ட மருத்துவத் தொழில் சார்ந்த பல நூல்கள் சிறந்த சான்றாக இருக்கின்றன.
உதாரணத்துக்கு ஒருசில நூல்கள் பற்றி காண்போம். 1340-களில் யுவான் வம்சத்தினர் சீனாவை அரசாண்டபோது, ஹூ ஷு(Hua Shou) என்பவர், அக்குபங்சர் தொடர்பாக அட்டவணை ஒன்றை வெளியிட்டார்.
மிங் அரச பரம்பரையினர் 1518 முதல் 1593 வரை, சீனாவை ஆட்சி செய்த காலத்தில் லீ ஷிஜென்(Li Shizhen) என்பவர் மருந்துப்பொருட்களின் தொகுப்பு மற்றும் அத்தொழில் பற்றி Materia Medica என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார்.
பின்னர் 1593-ம் ஆண்டில் அந்நூல் புத்தகமாக வெளிவந்தது. நாளடைவில், சீன மருத்துவம் பற்றிய கோட்பாடுகள், மஞ்சள் பேரரசரின் இன்னர் கேனான் மற்றும் சளி பாதிப்பு தொடர்பான கட்டுரை மற்றும் அண்டவியல் தொடர்பான கருத்து(இன்-யாங் மற்றும் ஐந்து நிலை) ஆகியவற்றை வேராக கொண்டு வளர்ச்சி பெற்றன. பின்னர் சீனா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நிலையில் இக்கட்டளைகள், உடற்கூறியல்(Anatomy) மற்றும் நோயியல்(Pathology) பற்றிய நவீன கருத்துக்கள் தரப்படுத்தப்பட்டன.
* 1950-ம் ஆண்டில் சீனா தன்னுடைய பாரம்பரிய மருத்துவமுறையை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்தது.மருத்துவ கூட ஆய்வுகள், அறிவியல் நோக்கில் மீண்டும்மீண்டும் பலவிதமான பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்ட சீன மருத்துவம் அக்குபங்சர்(Acupuncture), மாக்சிபஸ்டின்(Moxibustion), துய் நா மசாஜ்(Tui na Massage), கிண்ண வடிவிலான கோப்பை மற்றும் உரசி தேய்த்தல் மூலம் தரப்படும் சிகிச்சைகள்(Cupping and Scraping), சீன மூலிகைகள்(Chinese Herbs), சீன ஊட்டச்சத்து(Chinese Nutrition) என ஆறு பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது.
அக்குபங்சர்
பாரம்பரிய சீன மருத்துவத்தின்படி மனித உடலில் 2000 அக்குபங்சர் பாயிண்ட் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இவை 12 முக்கிய ரேகைகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ரேகைகள் நமது உடலின் மேற்பகுதி மற்றும் உள்ளுறுப்புகள் ஆகியவற்றிற்கு இடையே ஆற்றலை இணைக்கின்றது. இந்த சிகிச்சை முறையில் தோலின் மேற்பகுதி, தோலின் கீழே உள்ள திசுக்கள் மற்றும் சதைப்பகுதி ஆகியவற்றில், ஏராளமான ஊசிகள் செலுத்தப்படுகின்றன. அதன் மூலம், உடல் பாதிப்புகள் குணப்படுத்தப்படுகின்றன.
மாக்சிபஸ்டின்
நமது உடலில் ஓடுகிற ரத்தத்தை வெதுவெதுப்பாகவும், பலம் உள்ளதாகவும் வைத்துக்கொள்ளவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சிறுநீரகங்களை வலிமை உள்ளதாகவும் பாதுகாத்திட இச்சிகிச்சை பயன்படுகிறது. மாக்சிபஸ்டின் என்ற இந்த தெரபியில், மாசிபத்திரி(Mugwort) மூலிகையின் வேரை எரிப்பதன் காரணமாக உடல் ஆரோக்கியத்தை நலிவடைய செய்யும் காரணிகள் குணப்
படுத்தப்படுகிறது.
துய் நா மசாஜ்
ஆசியக் கண்டத்தின் உடலியக்க தெரபியாக கருதப்படும் இந்த சிகிச்சை சீன நாட்டில் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்துள்ளது. மசாஜ், ஊசி மூலம் அழுத்துதல் மற்றும் உடலைக் கையாள்கிற பிற முறைகள் ஆகியவற்றின் கலவையாகக் கருதப்படும் இந்த டிரீட்மென்ட்டில் நோயாளி ஆடை உடுத்தப்பட்டு நாற்காலியால் உட்கார வைக்கப்படுவார். பல கேள்விகளைக் கேட்டவாறு சிகிச்சையை ஆரம்பிக்கும் பயிற்சி மருத்துவர், மூலிகை ஒத்தடம், ஆயின்மென்ட் போன்றவற்றை உபயோகிப்பார். துய் நா மசாஜ் பல நாட்களாக நீடிக்கும் வலி, தசை இணைப்புக்களைச் சீரமைக்க பயன்படுகிறது.
கிண்ண வடிவிலான கோப்பை மற்றும் உரசி தேய்த்தல் மூலம் தரப்படும் சிகிச்சைகள், கிண்ண வடிவிலான கோப்பை(Cupping)யைப் பயன்படுத்தி செய்யப்படும் மசாஜ் சீனாவில் வழக்கத்தில் உள்ள மசாஜ் வகையாகும்.
பாரம்பரிய முறையில் சிகிச்சை தரும் பயிற்சி
மருத்துவர் தன்னை நாடி வரும் நபரின் உடலில், ஏராளமான டம்ளர் அல்லது பிளாஸ்டிக் கப்புகளை ஆங்காங்கே வைப்பார். முன்னதாக அவற்றை காட்டன் பந்து அல்லது நெருப்பால் வெதுவெதுப்பாக்குவார். இதன்மூலம் டம்ளர் அல்லது பிளாஸ்டிக் கப்புகளில் தீ நிரப்பி, அவற்றில் உள்ள ஆக்சிஜனை வெளியேற்றுவார். பின்னர், அப்பாத்திரங்களைத் தோலின் மீது வைப்பார். அவற்றில் உள்ளே இருக்கும் காற்று குளிர்ந்து, குறைந்த அழுத்தம் மற்றும் வெற்றிடத்தை உருவாகி தோற்பகுதியில் ஒட்டிக்கொள்ளும்.
சீன மூலிகைகள்
பயிற்சி மருத்துவர்கள் லவங்கப்பட்டை, இஞ்சி, ஜின்செங், ருபார்ப்(ஒரு வகை கிழங்கு) போன்ற மூலிகைகளின் இலை, வேர், தண்டு, பூ மற்றும் விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் சிகிச்சை தருகின்றனர். இவற்றில், ஜின்செங் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால், பழமையான இம்மூலிகைகளின் பயன்கள் குறைந்த அளவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
சீன ஊட்டச்சத்து
சீன மக்கள் பின்பற்றுகிற ஊட்டச்சத்துக்களில், காரம், புளிப்பு, கசப்பு, இனிப்பு மற்றும் உப்பு ஆகிய ஐந்து சுவைகளும் சரிவிகிதத்தில் காணப்படும். மேலும் மனித இனத்தின் உணவுப்பழக்க வழக்கங்களில் திட்டமிட்ட உணவு முறை என்பதனைப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த ஊட்டச்சத்து இருக்கும். தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் எதுவும் இந்த நாட்டினரின் ஊட்டச்சத்தில் இடம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating