கூந்தல் !! (மகளிர் பக்கம்)
நரைத் தலையுடன் மனிதர்களைப் பார்ப்பதே இன்று அரிதாகி விட்டது. அந்தளவுக்கு யாரைப் பார்த்தாலும் கருகரு கூந்தலுடன்தான் வலம் வருகிறார்கள்.கூந்தல் சாயம் என்பது இன்று தவிர்க்க முடியாத ஓர் அழகு சாதனமாக மாறிவிட்டது. ஹேர் டை உபயோகிக்கும் போது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது
முக்கியம்.ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
கூந்தலுக்கு சாயம் ஏற்றுவது என்பது அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில் படிகாரம், தாவரங்களின் எசென்ஸ், சாம்பல் போன்றவற்றிலிருந்தே கூந்தலுக்கான சாயத்தைத் தயாரித்தார்கள். ரோமானியர்கள் தயாரித்த ஹேர் டைகளில் குங்குமப்பூ, மஞ்சள், Myrhh எனப்படும் ஒருவகையான மரப்பிசின், மரப்பட்டை போன்றவற்றின் கலப்பே இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இன்று நாம் உபயோகிக்கிற ஹேர் டை வகைகளில் கெமிக்கல்களின் கலப்பே அதிகம். சோப்பு, அமோனியா போன்ற முக்கிய பொருட்கள் தவிர, அந்த டை நிரந்தர கலரை தரப் போகிறதா, தற்காலிக கலரை தரப் போகிறதா எனத் தீர்மானிக்கிற கெமிக்கல், வாசனைக்கு, கூந்தலை மென்மையாக்க என ஒவ்வொன்றுக்கும் ஒரு கெமிக்கல் சேர்க்கப்பட்டே தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் பாக்கெட்டுகளில் 4-amino-2-hydroxytoluene, m-Aminophenol, titanium dioxide and iron oxide – எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
கெமிக்கல் ஹேர் டை உபயோகிப்பதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. ஹேர் டை போடும் போது, அது கியூட்டிகிள் என்கிற பகுதியை முதலில் பாதிக்கும். ஒரு மரத்துக்கு அதற்குக் கவசம்போல மூடியிருக்கும் பட்டை போன்று கூந்தலுக்குப் பாதுகாப்பு தரக்கூடியது கியூட்டிகிள். கூந்தலில் சாயம் ஒட்ட வேண்டும் என்றால் அது கியூட்டிகிளின் உள்ளே போக வேண்டும். அதற்கு அது தூண்டப்பட வேண்டும்.
எல்லாவிதமான கெமிக்கல் ஹேர் டையிலும் அமோனியா என்கிற கெமிக்கல் பிரதானமாக இருக்கும். அது கூந்தலின் பி.ஹெச் அளவை அதிகரிக்கச் செய்யக்கூடியது. கியூட்டிகிள் பகுதியானது தொந்தரவு செய்யப்படக்கூடாதது. ஆனால், ஹேர் டை உபயோகிப்பதன் மூலம் அது தொந்தரவுக்கு உள்ளாவதால், கூந்தலின் பாதிப்பு ஆரம்பமாகிறது. அமோனியாவானது கூந்தலின் நிறத்தை மாற்றுவது மட்டுமின்றி கூந்தலை வறண்டு போகச் செய்து, நார் மாதிரி மாறச் செய்கிறது.
யாருக்கு எந்த டை?
நிரந்தரமானது, பாதி நிரந்தரமானது, தற்காலிகமானது, இயற்கையானது என ஹேர் டையில் பல வகைகள் உள்ளன.
பர்மனன்ட்
நிரந்தர ஹேர் டையில் அமோனியா இருக்கும். அதை டெவலப்பர் அல்லது ஆக்சிடைசிங் ஏஜென்ட் உடன் கலந்து உபயோகித்தால்தான் கூந்தலின் நிறத்தை நிரந்தரமாக மாற்றும். இந்த அமோனியாவானது கியூட்டிகிள் பகுதியைத் திறக்கச் செய்வதால்தான் ஹேர் கலரானது கார்டெக்ஸ் என்கிற பகுதிக்குள் ஊடுருவி நிறம் மாறுகிறது. டெவலப்பர் அல்லது ஆக்சிடைசிங் ஏஜென்ட்டானது வேறு வேறு வால்யூம் அளவுகளில் கிடைக்கும்.
ரொம்பவும் கருப்பான கூந்தல் உள்ள ஒருவர், தனது கூந்தலை லைட்டான ஷேடுக்கு மாற்ற நினைத்தால் அதிக வால்யூம் உள்ள டெவலப்பரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே லைட்டான கலர் கூந்தல் உள்ளவர்கள் டார்க் நிறக் கூந்தலைப் பெற அதிக வால்யூம் உள்ளதைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. நிரந்தர ஹேர் டை உபயோகிக்கிறவர்கள் 30 முதல் 45 நிமிடங்கள் காத்திருந்தால்தான் நினைத்த நிறம் கிடைக்கும்.
செமி பர்மனன்ட்
தற்காலிக டையில் உள்ளதைவிட சிறிய மூலக்கூறுகள் கொண்டவை இவை. இவை பகுதியாகத்தான் கூந்தலின் உள்ளே ஊடுருவும். நான்கைந்து முறைகள் தலைக்குக் குளிக்கிற வரைதான் நிறம் நீடிக்கும். இவற்றில் மிகக் குறைந்த அளவே அமோனியா, டெவலப்பர் போன்றவை இருப்பதால் கூந்தலை பாதிக்காதவை. இதை உபயோகித்ததும் நிரந்தர டை உபயோகித்தது போன்ற கருகரு நிறம் கிடைக்காது. ஆனாலும் இயற்கையான தோற்றம் கிடைக்கும். ஆரம்பக் கட்ட நரையை மறைக்க செமி பர்மனன்ட் ஹேர் கலர்கள் சரியான சாய்ஸ். நரையின் அளவு மிகவும் அதிகரித்தால் இந்த வகை ஹேர் கலரால் அதை முழுமையாக மறைக்க முடியாது. அப்போது நிரந்தர கலரிங் தான் செய்ய வேண்டியிருக்கும்.
தற்காலிக கலர்
இவை ஸ்பிரே, ஷாம்பு, ஜெல், ஃபோம் என பல வடிவங்களில் கிடைக்கின்றன. ஃபேஷன் விரும்பிகளுக்கானது. பார்ட்டி போன்ற இடங்களுக்குச் செல்லும் போது கண்ணைக் கவரும் கலர்களில் இந்த தற்காலிக டை உபயோகிப்பது அவர்களது வழக்கம். இந்த வகையான கலர் கூந்தலின் உள்ளே ஊடுருவாது. கலரானது கூந்தலின் மேற்பரப்பில் மட்டுமே நிற்கும். ஒரு முறை ஷாம்பு வாஷ் செய்தாலே கலர் மறைந்துவிடும்.
இயற்கையான கலர்
பாரம்பரியமான இயற்கையான ஹேர் கலர்களில் முதலிடம் வகிப்பது ஹென்னா. இது ஒருவித ஆரஞ்சு ஷேடு அல்லது சிவப்பு கலரை கொடுப்பதால் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. அவுரி விதைப் பொடியையும் ஹென்னாவுடன் சேர்த்து உபயோகிப்பதன் மூலம் டார்க் பிரவுன் அல்லது கருப்பு நிறக் கூந்தலைப் பெற முடியும். சாமந்திப்பூவின் சாரம் அன்றிலிருந்து இன்று வரை கூந்தல் நிறத்தை மாற்றப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரேசில் மரப்பட்டைகளில் இருந்தும், வால்நட் இலைகளில் இருந்தும் டை தயாரிக்கப்படுவதுண்டு. இது போன்ற தயாரிப்புகளில் இருந்து இரும்பு மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களையும் கலப்பதுண்டு. அதன் மூலம் தயாரிக்கப்படும் டை அதிக நிறமுள்ளதாகவும் நீண்ட நாள் நீடிப்பதாகவும் அறியப்படுகிறது.
ஹேர் டைக்கும் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. அடிக்கடி ஹேர் டை உபயோகிக்கிறவர்களுக்கு இந்த அபாயம் அதிகம் என்பதே உண்மை. அடிக்கடி ஹேர் டை உபயோகித்த பெண்களுக்கு சிறுநீர் பை புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் சில ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் முடி திருத்துகிறவர்களுக்குக் கூட இந்தப் புற்றுநோய் அபாயம் அதிகம் என்கின்றன ஆய்வுகள். அவர்கள் எப்போதும் கெமிக்கல் கலந்த டையை கையாள்வதே காரணம்.
வீட்டிலேயே செய்யக்கூடிய ஹேர் கலர்கள் பிளாட்டினம் பிளான்ட் ஷேடு
ஸ்ட்ராங்கான Chamomile டீ 3 கப் உடன் ஒரு கப் ஃப்ரெஷ் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் தடவவும். சூரிய வெளிச்சம் தலையில் படும்படி காய விடவும். பிறகு நன்கு அலசி கண்டிஷன் செய்யவும். வாரத்தில் 2 – 3 முறை செய்யலாம்.
சிவப்பு ஷேடு
2 கப் தண்ணீரில் 3 செம்பருத்தி டீ பைகள் போட்டுக் கொதிக்க வைக்கவும். அதை நன்கு ஆற வைத்து தலையில் தடவி அப்படியே விடவும். இது கூந்தலுக்கு இயற்கையான டை போன்று நிறத்தைத் தரும்.
அடர் சிவப்பு ஷேடு
2 கப் தண்ணீர், அரை கப் ஃப்ரெஷ்ஷான சாமந்திப்பூவின் இதழ்கள், 2 டேபிள்ஸ்பூன் செம்பருத்திப்பூ இதழ்கள் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து சாமந்தியையும் செம்பருத்தியையும் சேர்த்து குறைந்த தணலில் அரை மணி நேரம் வைத்திருக்கவும். ஆறியதும் வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒவ்வொரு முறை தலைக்குக் குளிக்கும் போதும் இதை கடைசியாக அலசப் பயன்படுத்தவும். வெயிலில் தலைமுடியை உலர்த்தவும். நீங்கள் விரும்பிய நிறம் கிடைக்கும்வரை தினமுமேகூட இதைச் செய்யலாம்.
இன்னும் கொஞ்சம் டிப்ஸ்…
கூந்தலுக்கு ஷாம்பு வாஷ் செய்யவும். பிறகு காபி டிகாக்ஷனை தலையில் விட்டு 20 நிமிடங்கள் அப்படியே விடவும். ஆப்பிள் சிடர் வினிகர் உபயோகித்து அந்த காபியை அலசி எடுத்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கடைசியாக ஒருமுறை அலசவும். நீங்கள் எதிர்பார்த்த கலர் வரும் வரை இந்த சிகிச்சையை தொடரவும்.
ஹேர் கலரிங் செய்யப்பட்ட கூந்தலை வாரம் 2 அல்லது 3 முறை அலசவும். தினமுமோ, ஒருநாள் விட்டு ஒருநாளோ தலைக்குக் குளிக்க வேண்டாம். இது உங்கள் கூந்தலுக்குத் தடவப்பட்ட கலரை இன்னும் சில நாட்கள் நீடிக்கச் செய்யும்.
ஹேர் கலர் செய்கிற போது வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதே சிறந்தது. ஆவி பறக்கிற வெந்நீரில் குளித்தால் அது உள்ளே சென்ற ஹேர் கலரில் உள்ள மூலக்கூறுகளை வெளியேறச் செய்து, சீக்கிரமே நிறத்தையும் மறையச் செய்துவிடும்.
கலரிங் செய்த கூந்தலுக்கென்றே கலர் புரொடெக்ட்டிங் ஷாம்பு என கிடைக்கிறது. அவற்றில் தரமான தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிப்பது உங்கள் கூந்தலின் நிறத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
Average Rating