மாகாண சபைத் தேர்தலும் இந்தியாவும்!! (கட்டுரை)
நாட்டில் மாகாண சபைத் தேர்தல், நீண்டகாலமாக இழுபறியாக உள்ள நிலையில், மாகாண சபை முறைமையே இல்லாதொழிக்கப்பட்டு விடுமோ என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்தியா அதிகப்படியான அழுத்தம் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ‘இப்போதைக்கு தேர்தலொன்றை நடத்துவதில்லை’ என்று அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய நிலையிலேயே, முதலாவதும் இரண்டாவதும் அலைகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை கவனிப்புக்குரியது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, எந்த எல்லை வரைக்கும் அமுல்படுத்துவது, மாகாண சபை முறைமையைத் தொடர்ந்து பேணுவதா, இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிவதா, அதைச் சீனா எப்படிப் பார்க்கும்? போன்ற கேள்விக்கெல்லாம் விடை காணாமல், ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே தென்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்பாட்டுக்கு வரும் வரைக்கும், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில்லை என்று அரசாங்கம் கூறி வருவதை, தேர்தலை நடத்துவதற்குச் சாதகமான காலம் வரை, வைரஸை காரணமாகக் காட்டி, இக் காலப்பகுதிக்குள் மேற்குறித்த தலையிடிகளுக்கு முடிவு காண்பதற்கு, அரசாங்கம் நேரம் எடுத்துக் கொள்கின்றது என்றும் கூறலாம்.
சில கடும்போக்கு அமைப்புகளின் அழுத்தமும் இவ்வாறு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரைக்கும், தேர்தலை இழுத்தடிப்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான அதிகாரப் போருக்குள், இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இவ்விரு நாடுகளும் இலங்கையில் உதவிகள், கரிசனை, செயற்றிட்டங்கள் என்ற தோரணைகளில், தமது அரசியல், பொருளாதார, இராணுவ நலன்களை ஏட்டிக்குப் போட்டியாக உரசிப்பார்க்கின்றன. இதில் அமெரிக்கா, நாட்டாண்மை வேலை பார்க்கின்றது என்பது இரகசியமல்ல.
ஆகவே, தமது அரசியல் நகர்வுகளைச் செய்கின்ற சமகாலத்தில், செல்வாக்குள்ள வெளிநாடுகளின் கரிசனைகளையும் புறந்தள்ள முடியாத ஒரு சூழலிலேயே இவ்வரசாங்கமும் இருக்கின்றது. ஏனென்றால், ஏதோ ஒரு வகையில், சீனாவையும் இந்தியாவையும் திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.
இவ்வாறிருக்க, ஒன்பது மாகாண சபைகளின் ஆட்சிக்காலமும் முடிவுக்கு வந்து விட்டது. கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் 2017 இல் முடிவடைந்தது. வடக்கு, மத்திய மாகாணங்களின் ஆயுட்காலம் 2018 இல் நிறைவடைந்தது.
மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மூன்று மாகாண சபைகளின் ஆட்சிக் காலம், முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை எந்த மாகாண சபைத் தேர்தல்களும் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்த அச்சப்படாதவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் ராஜபக்ஷ அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் மாத்திரம் சற்று பின்னடிக்கின்றது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப் பிறகு, அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
உண்மையில், வடக்கு, கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களுக்காகவே இந்தியா இவ்வாறான ஓர் ஏற்பாட்டை மேற்கொண்டது. எவ்வாறிருப்பினும், மாகாண சபை அதிகாரம் என்கின்ற வரப்பிரசாதம் கேட்காமலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலுள்ள சிங்கள மக்களுக்கும் கொடுக்கப்பட்டதால் நிலைமை சமாளிக்கப்பட்டது.
மத்தியில் குவிந்து கிடக்கின்ற அதிகாரங்களை, மாகாண ரீதியாகப் பகிர்ந்து கொடுப்பதற்கே, இந்த முறைமை கொண்டு வரப்பட்டது. என்றாலும், முக்கியமான அதிகாரங்களை மாகாண சபைகளுக்குக் கொடுத்தால், மூக்கணாங்கயிற்றை அறுத்துக் கொண்டு, மாகாணங்கள் தம்பாட்டில் ஓடிவிடுமோ எனப் பயந்த அரசாங்கங்கள், பல முக்கிய அதிகாரங்களை, மாகாண சபைகளுக்கு வழங்கியிருக்கவில்லை.
அதேநேரம், ஆரம்பம் தொட்டு இன்று வரையும், மாகாண சபை முறைமை என்பது ஒரு ‘வெள்ளை யானை’ என்று வர்ணிக்கப்பட்டு வருகின்றது. 13 பிளஸ் அல்லது 13 இனை முழுமையாக நடைமுறைப்படுத்தல், 13 இற்கும் அப்பாலான தீர்வு என்பதெல்லாம் வெறும் பிரசார உத்திகளாகவே இன்றுவரை இருந்து வருகின்றன. ஆனால், தமிழ்த் தேசியம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதான ஓர் அதிகாரப் பகிர்வைத் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றது. குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களையாவது தரவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர். இந்தியாவும் இதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. 13ஆவது திருத்தத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்துவதன் உள்ளர்த்தம் இதுதான்.
மாகாண சபை முறைமைகள், தமிழர்களுக்கு மட்டுமன்றி நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள், சிங்களவர்களுக்கும் அனுகூலமானது. ஆனாலும் வடக்கு, கிழக்கில் அவ்வாறான அதிகாரம் வழங்கப்படுவது குறித்த அச்சத்தை முஸ்லிம்களுக்கும் சிங்கள தேசியத்துக்கும் கடந்தகால அனுபவங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
அதேவேளை, பொலிஸ், காணி போன்ற அதிகாரங்களை வழங்குவது தமக்கு நீண்டகால அடிப்படையில் ஆபத்தானது என்றே எல்லா ஆட்சியாளர்களும் கருதுகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், 13 பற்றிய அழுத்தங்கள் ஏற்படலாம்; மத்திய அரசாங்கத்தின் பிடி சறுக்கிப் போகலாம் என்பதாலேயே அரசாங்கங்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றன.
தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருந்த கடந்த நல்லாட்சி அரசாங்கம் கூட, தேர்தலை ஒத்திப் போடுவதற்கான உள்நோக்கத்துடன், ‘ஒரேநாளில் தேர்தலை நடத்தும்’ பாணியிலான திருத்த முன்மொழிவு ஒன்றை முன்வைத்தமை இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது. ஆனால், கடந்த அரசாங்கத்தை விட, நடப்பு அரசாங்கம் வெள்ளை யானையைக் கண்டு கடுமையாகப் அச்சப்படுகின்றது.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர உள்ளடங்கலாக, ஆளும் கட்சியிலுள்ள பலர், மாகாண சபை முறைமையையே முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே வெளியிட்டு வருகின்றனர். அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தம், அதிகாரங்கள் குவிக்கப்படுவதை நோக்காகக் கொண்டுந்தது என்றால், அதிகாரங்கள் பகிரப்படும் மாகாண சபை முறைமையை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும்.
இவ்வாறிருக்கையில், மாகாண சபை முறைமை இலங்கைக்கு அவசியமற்றது என்ற தொனியில் அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் கருத்துகளை வெளியிட்டதும், தேர்தலைத் தாமதிப்பதற்கு எடுக்கும் எத்தனங்களையும், இந்தியா நல்ல சமிக்ஞைகளாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதன் ஒரு கட்டமாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். சிவஷங்கர், கடந்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்து பல தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளார். கிழக்கு முனையம், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் இதில் முதன்மை பேசுபொருட்களாக இருந்தன எனலாம்.
புதுடெல்லி திரும்பும் தறுவாயில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்து, இலங்கை இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறிச் சென்றுள்ளார். ஜெய்ஷங்கர் போன பிறகு, வழக்கம்போல ஆளும் தரப்பினர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். “இந்தியா 13 இனை வலியுறுத்துவது இது முதற்றடவை அல்ல” என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
கடந்த தேர்தல்களில் பொதுஜனப் பெரமுனவின் வெற்றிக்கு, இந்தியாவின் மறைமுக ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக சில வேளைகளில் ஏதாவது வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் இருந்தது. இந்நிலையில் தமிழர்கள் உட்பட அனைவரதும் எதிர்பார்ப்புகள் உணர்ந்து செயற்படுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மோடிக்கு உறுதியளித்ததாக அமைச்சர் சிவஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் கருத்துத் தெரிவிக்கும் போது, “மாகாண சபை முறைமைமை நீக்கும் முயற்சி, நெருப்புடன் விளையாடுவதற்கு ஒப்பானது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், இந்தியாவைப் பகைக்காமலும் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்குப் பாதகமில்லாமலும் இவ்விடயத்தைக் கையாளவே இலங்கை அரசாங்கம் விரும்புவதாகத் தெரிகின்றது. அதுதான் ராஜதந்திரமும் கூட.
மாகாண சபைத் தேர்தல்களை, நீண்டகாலத்துக்கு இழுத்தடிக்க முடியுமா என்பது இப்போதைக்கு சந்தேகமே. ஆனால், அதற்கான ‘நல்ல நேரம்’ வரைக்கும் எந்த விமர்சனத்தையும் அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எதையாவது பராக்குக் காட்டி, மக்களை திசை திருப்பிக் கொண்டு காலம் இழுத்தடிக்கப்படலாம்.
மாகாண சபை முறைமையைத் தொடர்வது பற்றித் தமக்குள் ஓர் உறுதியான நிலைப்பாட்டுக்கு வருவதே, அந்த நல்ல நேரமாக இருக்கும்.
Average Rating