கூந்தல்!! (மகளிர் பக்கம்)
பயோடின்’…சமீப காலமாக இந்த வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். கூந்தல் உதிர்வுக்கும் மெலிவுக்கும் மருந்தாக அழகுக்கலை நிபுணர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் பயோடின் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். எந்த மருந்தையும் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுக்கக்கூடாது என்பதற்கு பயோடினும் விதிவிலக்கல்ல. அது யாருக்குத் தேவை? எந்தளவு எடுத்துக் கொள்ள வேண்டும்? அளவுக்கு மிஞ்சினால் அது உண்டாக்கும் பாதக விளைவுகள் என்னென்ன? எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்…
வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் H
வைட்டமின் ஹெச்சை பயோடின் என்கிறோம். கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுவதுடன், கூந்தல் ஆரோக்கியத்துக்கும், நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கும் பயோடின் உதவுகிறது. பயோடின் என்பது பி வைட்டமினுடன் சேர்ந்து மல்ட்டி வைட்டமினாகவும், தனி சப்ளிமென்ட்டாகவும் கிடைக்கிறது.
கர்ப்பத்தின் போது ஏற்படும் பயோடின் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, அளவுக்கதிகமான எடை இழப்பு போன்றவற்றுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து இது. தவிர, கூந்தல் உதிர்வு, நகங்கள் உடைதல், குழந்தைகளின் சருமப் பிரச்னை, நீரிழிவு மற்றும் மிதமான மன அழுத்தம் போன்றவற்றுக்கும் உதவுகிறது.குறைபாடைக் கண்டுபிடியுங்கள் கூந்தல் உதிர்வா, நகங்கள் உடைகிறதா? உடனே யாரையும் கேட்காமல் பயோடின் மாத்திரைகளையோ, சப்ளிமென்ட்டுகளையோ வாங்கி விழுங்கக்கூடாது.
உங்கள் பிரச்னைகளுக்கு பயோடின் சத்துக் குறைபாடுதான் காரணமா என்பதை பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். கூந்தல் உதிர்வது, மெலிவது, கூந்தலின் நிறம் மாறுவது, கண்களை, மூக்கை, வாயைச் சுற்றி சிவந்த தடிப்புகள் போன்றவை பயோடின் குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம். மன அழுத்தம், களைப்பு, பிரமை, கை, கால்களில் கூச்சம் போன்றவையும் இதன் கூடுதல் அறிகுறிகள். பயோடின் குறைபாட்டின் காரணமாக, நீரிழிவு வரலாம் என்பது லேட்டஸ்ட் ஆய்வுத் தகவல்.
கூந்தல் வளர்ச்சியும் பயோடினும் உடலுக்கு அவசியமான தாதுச்சத்துகளும், வைட்டமின்களும் குறைகிற போது கூந்தல் உதிர்வுப் பிரச்னை இருக்கும். பயோடினுக்கு கூந்தலைப் பலப்படுத்தும் தன்மை உண்டு. சராசரியாக ஒரு மனிதருக்கு 5 மி.கி. அளவு பயோடின் தினமும் அவசியம். பயோடினுடன் துத்தநாகம் உள்ளிட்ட வேறு சில ஊட்டங்களையும் சேர்த்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படுகிற வழுக்கைப் பிரச்னைக்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படும்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து சில மாதங்களுக்கு பயோடின் எடுத்துக் கொண்டால் கூந்தல் அடர்த்தியாக, நீளமாக வளரத் தொடங்கும். பயோடின் என்பது மயிர்க்கால்கள் மற்றும் வேர் பகுதிகளைப் பலப்படுத்துவதன் விளைவாக கூந்தலின் நிறமும் மேம்படும்.எவ்வளவு தேவை? பொதுவாக 1000 mcg அளவு பயோடின் பரிந்துரைக்கப்படும். பயோடின் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த அளவே மிகப் பெரிய மாயங்களைச் செய்வதாக சொல்வார்கள்.
ஒருவருக்கு பரிந்துரைக்கப்படுகிற அளவானது எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்ல முடியாது. அது அவர்களது உணவுப்பழக்கம், தினசரி எடுத்துக் கொள்கிற தண்ணீரின் அளவு, மதுப்பழக்கம் உள்ளவரா, வேறு ஏதேனும் மருத்துவ சிகிச்சை எடுப்பவரா, வயது மற்றும் உடல்நலம் எனப் பல்வேறு காரணிகளைப் பொறுத்து வேறுபடும்.ஆல்கஹாலும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் பயோடினின் வீரியத்தைக் குறைக்கக்கூடியவை. பயோடின் எடுத்துக் கொள்ளும்போது அதன் முழுப்பலனையும் அடைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். எப்போதுமே பயோடினை குறைந்த டோஸில் ஆரம்பித்து பிறகு அதன் அளவை அதிகரிப்பது சிறந்தது.
பயோடினால் பாதகங்கள் உண்டா?
இந்த உலகத்தில் யாருமே 100 சதவிகிதம் நல்லவரில்லை என்பதைப் போல எந்த விஷயத்தையும் கண்மூடித்தனமாக 100 சதவிகிதம் சிறந்தது என நம்ப முடியாது. பயோடின் என்பது வைட்டமின் பி குடும்பத்தைச் சேர்ந்தது. அதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அல்லது வைட்டமின் பி 7 உள்ளது. அதுதான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால், மருத்து வரின் ஆலோசனையின்றியோ, அளவுக்கு மீறியோ எடுத்துக் கொள்ளும் போது பயோடின் பெரிய ஆபத்துகளைத் தரும். அவை…
முகத்தில் திடீரென பருக்கள் தோன்றலாம். பலரும் பயோடின் இயற்கையான உணவுகளில் கிடைப்பது தெரியாமல் தேவையின்றி சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொண்டிருப்பார்கள். தவிர, ஒருவர் வேறு பிரச்னைகளுக்காக எடுத்துக் கொண்டிருக்கிற மருந்துகளில் கொஞ்சம் பயோடின் இருக்கக்கூடும். அது தெரியாமல் தனியே வேறு பயோடின் எடுத்துக் கொண்டிருப்பார்கள். எனவே அதன் அளவு அதிகமாகக்கூடும். பயோடின் என்பது தண்ணீரில் கரையக்கூடியது என்பதால் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் அதன் பக்க விளைவுகளில் இருந்து ஓரளவுக்குத் தப்பிக்கலாம்.
ஏற்கனவே சொன்னது போல பயோடின் விஷயத்தில் சுய பரிசோதனை கூடாது. ஒருவருக்கான பயோடின் தேவை என்பது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டியது. ஒரு நாளைக்கு அதன் அதிகபட்ச அளவு 5 மி.கிராமை தாண்டக்கூடாது.
‘கூந்தல் வளர்கிறது… அழகாகிறது’ என்கிற காரணத்துக்காக காலத்துக்கும் பயோடின் எடுத்துக் கொண்டிருக்கக்கூடாது. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் 2 முதல் இரண்டரை மாதங்கள் வரை மட்டுமே எடுக்கலாம். பிறகு நிறுத்தியாக வேண்டும்.
குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பயோடின் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.இத்தனை பக்க விளைவுகள் இருந்தாலும் பயோடின் ஆபத்தானது அல்ல. அதனால் எந்தவித மோசமான பாதிப்புகளும் ஏற்படுவதில்லை என்பது ஆறுதலான விஷயம்.உணவிலேயே கிடைக்கும்!
காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி, நட்ஸ் போன்றவற்றில் இயற்கையிலேயே பயோடின் சத்து இருக்கிறது. முட்டை மற்றும் ஈரலில் அதிகமுள்ளது. வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர், முட்டைகோஸ், சோயாபீன்ஸ், பால், வேர்க்கடலை, பாதாம், ஸ்ட்ராபெர்ரி, ஓட்ஸ், Halibut எனப்படுகிற மீன் போன்றவற்றிலும் அபரிமிதமான அளவு பயோடின் நிறைந்திருக்கிறது. தவிர, இந்த உணவுகளில் கூந்தல் வளர்ச்சிக்கு அவசியமான வைட்டமின் ஏ மற்றும் பி6ம் அதிகம் உண்டு.
Average Rating