முகவாதத்துக்கு முற்றுப் புள்ளி!! (மகளிர் பக்கம்)
கார்த்திகை, மார்கழி மாதங்கள் மழையோடு குளிரையும் அள்ளி வந்து நம் உயிரில் நிரப்புகின்றன. சில்லிடும் அந்த தருணங்கள் இன்னும் கொஞ்ச நேரம் இழுத்துப் போர்த்தித் தூங்கலாமே என போர்வைக்குள் புரளச் செய்கின்றன. கடிகாரத்தின் தலையில் தட்டி அலாரத்தை நிறுத்தினாலும் நொடி முட்கள் தனது வேலையைத் ெதாடர்கின்றன. குளிரும் மழையும் அள்ளித்தரும் அவஸ்தைகளைத் தாண்டி நாமும் நமது பணிகளை எப்போதும் போல் தொடர்ந்தாக வேண்டும்.அலுவலகத்திலும் வீட்டிலும் பரபரப்பாக இயங்கும் பெண்கள் அதிகாலை நேர குளிர், தண்ணீர் என வேலைகளைத் தொடர்கின்றனர். முகவலி, முகவாதம், பாதம் மற்றும் உள்ளங்கை எரிச்சல், முடக்குவாத வலி என பல்வேறு வலிகள் தாக்குகின்றன. இவற்றில் இருந்து உடல் நலத்தை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் சேலம் இயன்முறை மருத்துவர் ரம்யா.
‘‘முதலில் முகவலி பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்வோம். மூளை நரம்புகளில் 5வதாகக் காணக் கிடைப்பது ட்ரைஜெமினல் நரம்பு. இந்த நரம்பு மூளையின் கீழ் தண்டுவடப் பகுதியிலிருந்து மேல் கழுத்து, தாடை, பற்கள், ஈறுகள், மூக்கு, கண் குழிவு, நெற்றி, புருவம் வரை செல்கிறது. இந்த நரம்பில் ஏற்படக் கூடிய அழுத்தத்தால் மின்னல் தாக்கியது போல வலி உண்டாகும். இந்த வலி மற்ற இடங்களுக்கும் பரவத் துவங்கும். சில நொடி முதல் 2 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதனை ‘சூசைட் டிஸ் ஆர்டர்’ என்றும் அழைக்கின்றனர்.அடுத்தடுத்து வலிப்பதும், ஓர் இடத்திலிருந்து பரவுவதுமாக ஒரு பயத்தைக் கொடுக்கும். நாள்பட்ட தொந்தரவுகள் தொடர்ச்சியாக ஊசியால் குத்துவது போல் இருக்கும். காற்று பட்டாலோ, ஆடை பட்டாலோ அல்லது முகத்தை அசைக்கும் போதோ கூட வலிக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேச, சிரிக்க, பல் துலக்க, சாப்பிட, தண்ணீர் குடிக்க என முகத்தோடு தொடர்புள்ள அத்தனை விஷயங்களுக்கும் அவஸ்தைப்பட நேரிடும்.
முகவலியை பல்வலியோடு சம்பந்தப்படுத்தி மருத்துவம் பார்ப்பதால் இந்தத் தொந்தரவு சரியாக மாதக்கணக்கில் ஆகலாம். ஆண்களை விட பெண்களையே இந்நோய் அதிகளவில் பாதிக்கிறது. இதை எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியாது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனினும் அதற்கான அவசியம் ஏற்படுவதில்லை.வலி நிவாரணி மாத்திரைகள் மூலம் வலி குறைப்புக்கு முயற்சிக்கலாம். இயன்முறை மருத்துவத்தில் (பிசியோதெரபி) டென்ஸ் எனப்படும் செரிவூட்டப்பட்ட மின்சாரத்தை கொண்டு வலி உணரப்படுவது குறைக்கப்படுகிறது. ரிலாக்சேஷன் டெக்னிக், கழுத்து தோள்பட்டை தசைகளுக்கு சுடுநீர் ஒத்தடம் தசை வலியைக் குறைக்கும். மன அமைதியைத் தரும். நம் உடலில் உள்ள 12 ஜோடி மூளை நரம்புகளில் 7வது நரம்பு முக நரம்பு (facial nerve).
இந்த நரம்பு மண்டை ஓட்டிலிருந்து காதின் பின் வழியாக வந்து முகத்தில் உள்ள தசைகளுக்கு சென்றடைகிறது. காதுகளின் பின்புறத்தில் இந்த நரம்புகள் மேலோட்டமாக உள்ளதால் எளிதாக அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. இதனால் ஒரு பக்கம் இழுத்தவாறு காணப்படுவதே முகவாதம் ஆகும். அதிகப்படியான குளிர், ஜன்னலோரப் பயணம், காது ெதாற்று, தாடை சீரமைப்பு, பல் பிடுங்குதல் ஆகியவற்றால் முகவாதம் ஏற்படுகிறது.முகவாதத்தில் முகம் ஒரு புறம் கோணலாக இருப்பதால் கண் இமையை மூட முடியாத நிலை ஏற்படும். கண்களிலிருந்து கண்ணீர் வழியும். வெறித்த பார்வை, சாப்பிடும்போது ஒரு பக்கம் உணவு தேங்குதல், எச்சில் வடிதல், பேசுவதற்காக வார்த்தைகள் உச்சரிக்க முடியாமல் சிரமப்படுதல், பல் துலக்குதல், தண்ணீர் அருந்தும் போதும் நீர் சிந்துதல், சுவை மாற்றங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.நரம்பில் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள், இயன்முறை மருத்துவத்தில் மின் தூண்டுதல் மூலம் பாதிக்கப்பட்ட நரம்பு மற்றும் முக தசைகளை பழையபடி வேலை செய்யத் தூண்டுதல், மசாஜ் தெரபி மற்றும் ஸ்ட்ரேப்பிங் மூலம் முக தசைகளின் தன்மையை சரி செய்தல், முக தசை பயிற்சிகள், பலூன் ஊதுதல், வாயில் தண்ணீர் தேக்கி வைத்தல், சூயிங்கம் மெல்லுதல், விசில் ஊதுதல் போன்ற பயிற்சிகள் வழியாக இதற்கு தீர்வு காணப்படும்.
முகவாதம் வராமல் தடுக்க ஜன்னலோர இருக்கை பயணத்தின் போது காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாம். தலைக்குக் குளித்த பின் ஈரத்துண்டை தலையில் கட்டக்கூடாது. ஏசி, ஃபேன் ஆகியவற்றுக்கு நேராகப் படுப்பதைத் தவிர்க்கலாம். கண் இமை மூடாமல் இருப்பதால் வெளியில் செல்லும்போது கண்ணாடி அணிய வேண்டும்’’ என்கிறார் ரம்யா.
Average Rating