மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்” – தாயகன்!! (கட்டுரை)

Read Time:23 Minute, 45 Second

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 11 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு சுறுசுறுப்படைந்துள்ள நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான யோசனை, பொதுநிர்வாக ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனால் முன்வைக்கப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன்போது கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதன்படி கூடிய விரைவில் கட்சித் தலைவர்களை கூட்டி அவர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.இதற்கமைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலை நடத்தி அவர்களின் இணக்கப்பாடுகளை பெற்ற பின்னர், மீண்டும் அது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் கோத்தபாய ராஜபக்ச அரசு திடீரென ஒருபுறம் அக்கறை காட்டிவரும் நிலையில் மறுபுறம் மாகாண சபைகளுக்கான மூலாதாரமான 13 ஆவது திருத்தம் ஒழிக்கப்படவேண்டும், மாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாதென்ற இனவாதக் குரல்களும் அரசு தரப்பில் அதிகரித்துள்ளன. கோத்தபாய ராஜபக்ச அரசினால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என்ற எதிர்வுகூறல்களும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, மாகாண சபைகள் வெள்ளை யானைகளாக இருப்பதாக அரச தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஜனாதிபதியும், மாகாண சபையின் 68 சதவீதமான நிதியானது மக்களை நேரடியாக சென்றடையவில்லை என்று கருத்தினை கொண்டிருப்பதாக அவருடைய சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க அரசின் எம்.பி.யான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடனான கலந்துரையாடலொன்றில் கூறியிருக்கின்றார்.

பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்றிட்ட உடன்படிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் போது காணி அதிகாரங்கள் மாகாண சபையிடத்தில் காணப்படுமாயின் அதன் அனுமதியைப் பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கொண்டிருக்கின்றார். அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தமிழ்த் தரப்பொன்றுடனான கலந்துரையாடலொன்றில், பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்கினால் அநுராதபுரம் புனித நகருக்குச் சென்று போதி வழிபாடுகளைச் செய்வதாயினும் மாகாணத்தின் அனுமதியை பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியிருக்கின்றார்.

இன்னொருபக்கத்தில், 13ஆவது திருத்தச்சட்டமானது, இந்தியா, இலங்கையின் இறைமையில் தலையீடு செய்வதற்கு காரணமாக இருக்கின்றது. ஆகவே இலங்கையின் ஆட்புல எல்லை சுயாதீனத்தினை உறுதிப்படுத்துவதற்காக அதனை புதிய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருக்கின்றார். தற்போது அவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பதோடு தேசிய பொலிஸ் கட்டமைப்பும் அவருடைய அமைச்சின் கீழ் காணப்படுகின்றநிலையில் பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடந்த அமைச்சரவைக்கூட்டத்திலும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கலை நடத்த கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் மாகாணசபை முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோம், மாகாணசபை முறைமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றோம்.எனவே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி [சிங்கள]மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நாம் மீறக்கூடாது எனவும் அவர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேபோன்றே மாகாணசபை களுக்கான தேர்தல்களை நடத்த அமைச்சர்கள் சிலர் இனவாத ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச அரசின் உருவாக்கத்துக்கு பெரும் பங்களிப்பு செய்த சிங்கலே அமைப்பை சேர்ந்த எல்லே குணவன்ச தேரரும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், புதிய அரசியலமைப்பிலிருந்து 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒழிக்கப்பட முயற்சிக்கும் நிலையிலும் இலங்கையில் உள்ள 9 மாகாணசபைகளும் கலைக்கப்பட்டு வருடக்கணக்காகின்றபோதும் அவற்றுக்கான தேர்தலை நடத்துவதில் கடந்த நல்லாட்சி அரசோ அல்லது கோத்தபாய ராஜபக்ச அரசோ அக்கறை காட்டிடாத நிலையில் தற்போது கொரோனா வைரஸ் முழு நாட்டையும் ஆக்கிரமித்து செயலிழக்க வைத்துக்கொண்டிருக்கும் நிலையிலும் உயிர்ப்பலிகளும் தொற்றாளர் எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் அதிகரித்த செல்லும் நிலையிலும் 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த கோத்தபாய ராஜபக்ச அரசு காட்டும் திடீர் அக்கறைக்கு பின்னால் ”கொரோனா இராஜதந்திரம்”தான் உள்ளதென்றே கருத வேண்டியுள்ளது.

முதலில் இலங்கையில் மாகாண சபைகள் உருவான சூழல் தொடர்பிலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்ட காலங்கள் தொடர்பிலும் சுருக்கமாகப் பார்ப்போம்

இலங்கையில் தமிழர்களின் தனி நாடு கோரிய ஆயுதப் போராட்டமே மாகாண சபை ஆட்சி முறைக்கு வித்திட்டது. இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகவே இருந்தது. இதன் படி 1987 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ஆ வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. 1988 பெப்ரவரி 3 ஆம் திகதி இலங்கையில் மத்திய மாகாணம் , கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், வடக்கு மாகாணம்,வடமேற்கு மாகாணம்,சப்ரகமுவ மாகாணம்,தென் மாகாணம்,ஊவா மாகாணம்,மேல் மாகாணம் என ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.

மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல் 1988 ஏப்ரல் 28 ஆம் திகதி வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக 1988 ஜூன் 2 ஆம் திகதி மத்திய, தென், மற்றும் மேல் மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 1988 நவம்பர் 19 ஆம் திகதி நடத்தப்பட்டது. மாகாண சபையின் பதவிக் காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 1993 ஆம் ஆண்டில் இரண்டாவது மாகாண சபைத்தேர்தலும் 2004 ஆம் ஆண்டில் மூன்றாவது மாகாணசபைத் தேர்தலும் முதலில் ஒரே தடவையில் நடத்தப்பட்ட நிலையில் பின்னர் தேர்தல்கள் பிரித்து பிரித்து நடத்தப்பட்டதால் 2008 -2009 ஆம் ஆண்டுகளில் நான்காவது மாகாணசபைத் தேர்தலும் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த மாகாண சபைத்தேர்தல்களும் இடம்பெற்றன . தற்போது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த மாகாண சபைத்தேர்தல் இடம்பெறுமென எதிர்வு கூறப்படுகின்றது. இதுவும் ஒன்றாக நடக்குமா அல்லது பிரித்து பிரித்துதான் நடக்குமா என்பது இன்னும் தெரியவரவில்லை.

இறுதியாக இடம்பெற்ற மாகாணசபைக்கான தேர்தல்களை பார்ப்போமானால் 27-06-2012 இல் கிழக்கு, சப்ரகமுவ, மற்றும் வடமத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளும் கலைக்கப்பட்ட நிலையில் 08-09-2012 இல் இவற்றுக்கு தேர்தல் நடைபெற்றது . மூன்று மாகாணங்களிலும் 108 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலில் மூன்று மாகாணங்களில் சப்ரகமுவ, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கிழக்கு மாகாணத்தில் மொத்தமுள்ள 37 உறுப்பினர்களில் இம்முன்னணி 14 உறுப்பினர்களுடன் முதலாவதாக வந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 உறுப்பினர்களுடன் இரண்டாவதாக வந்தது. எனினும் கிழக்கு மாகாணத்தில் 7 இடங்களைக் கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரஸ் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

மத்திய, மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைகளும் 2012 ஜூலை மாதத்தில் கலைக்கப்பட்ட நிலையில் 21-09 2013இல் தேர்தல் நடைபெற்றது. வடக்கு மாகாண சபைக்கும் இதே தினத்தில் முதற் தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது. 3 மாகாண சபைகளுக்கும் 148 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் வடக்கிலிருந்து 38 உறுப்பினர்களும், மத்திய மாகாணத்திலிருந்து 58 பேரும், வடமேல் மாகாணத்திலிருந்து 52 பேரும் தெரிவாகினர். வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. மத்திய, வடமேல்மாகாண சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கைப்பற்றியது.

மேற்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு மாகாண சபைகளும் 2014 ஜனவரி மாதத்தில் கலைக்கப்பட்ட நிலையில் 2014 மார்ச் 29 இல் தேர்தல் நடைபெற்றது. 159 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெற்கு, மற்றும் மேற்கு மாகாண சபைகளைக் கைப்பற்றியது. ஊவா மாகாணசபை 2014 ஜூலை 11 இல் கலைக்கப்பட்டநிலையில் 2014 செப்டம்பர் 20 இல் தேர்தல் நடைபெற்றது. 34 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 19 ஆசனங்களை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இவ்வாறான நிலையில் மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்த போதும் இதுவரையில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின் 154 ஈ உறுப்புரை ஆகியனவற்றின்படி, மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும். ஆனால், மாகாண சபைகள் கலைந்து, சில வருடங்களாகியும் இன்றுவரை மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்தான் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத சூழலை ஏற்படுத்தியிருக்கின்றதென காரணங்கள் கூறப்பட் டு வந்த நிலையிலேயே தற்போது எதிர்வரும் மார்ச் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமென்ற எதிர்வு கூறல்களை அரச தரப்பு அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாகாணசபைகளுக்கான திடீர் தேர்தல் அறிவிப்பின் பின்னணியில் உள்ள ”அரசியல்”, ” கொரோனா இராஜதந்திரம்” தொடர்பில் பார்ப்போம்.

நாட்டிலுள்ள சிங்கள மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோத்தபாய ராஜபக்ச -மஹிந்த ராஜபக்ச அரசின் தற்போதைய இறங்கு முகம், எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடர், அரசுக்கு எதிராக ஒன்றிணையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகள், பொருளாதார நெருக்கடிகள், வாழ்வாதார சுமைகளினால் வெறுப்பில் இருக்கும் மக்கள், கொரோனாவினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் அரசின் நிலைப்பாட்டால் கொதிப்படைந்துள்ள முஸ்லிம் மக்கள், முஸ்லிம் தலைவர்கள், இனிவரவுள்ள சில நீதிமன்ற தீர்ப்புக்கள், விடுவிக்கப்படவுள்ள குற்றவாளிகள் என பல விடயங்களில் மக்களின் கவன சிதறடிப்புக்களுக்கான கணக்குகளைப் போட்டே இந்த மாகாண சபைகளுக்கான திடீர் தேர்தல் அறிவிப்பு வெளிப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரை வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் முன் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதே மாதப்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தினால் ஆட்சி, அதிகாரத்துக்காக தமிழ் தேசியக் கட்சிகள் தமக்குள் முட்டிக்கொள்ளும். அதனால் ஜெனீவாவில் தமிழர்களின் குரலை பலமிழக்க செய்ய முடியும். அதே போன்றே கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இலங்கை தகனம் செய்யும் விடயம் சர்வதேசத்தின் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. அவ்விடயமும் ஜெனீவா கூட்டத் தொடரில் பேசு பொருளாகலாம். அதற்கான முயற்சிகளின் முஸ்லிம் தலைவர்கள் ஈடுபடலாம். எனவே அதே காலப்பகுதியில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தினால் முஸ்லிம் தலைவர்களின் கவனம் தேர்தலில்தான் இருக்கும் என்பதும் அரசின் கணக்கு.

அதே போன்று பாராளுமன்றத்துக்கான தேர்தலில் செய்ததைப்போன்றே கொரோனா அச்சுறுத்தலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களை தடைசெய்து,எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் கொரோனா சுகாதார விதிமுறைகளை அமுல்படுத்தி அடக்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதுபோல் தற்போதும் இலங்கையை கடந்த முறையை விடவும் மிக மோசமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவை பயன்படுத்தி மாகாண சபை தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களை தடைசெய்து, எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் கொரோனா சுகாதார விதிமுறைகளை அமுல்படுத்தி அடக்கி ஒடுக்கி மாகாண சபைகளையும் பெருமளவில் கைப்பற்றி விட வேண்டுமென்பதும் அரசின் மாகாண சபைகளுக்கான திடீர் தேர்தல் அறிவிப்பின் முக்கிய காரணிகளால் ஒன்றாகவே உள்ளது.

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த பாராளுமன்றத்துக்கான தேர்தல், அதன்பின்னரான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் , புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள், அரசு சார்பு முக்கியஸ்தர்களின் சிறை விடுவிப்பு, வழக்குகளிலிருந்து விடுவிப்பு, அரசின் வரவு செலவுத்திட்ட நிறைவேற்றம் இன,மத ரீதியான பழி தீர்த்தல்கள் என பல விடயங்கள் கொரோனா அச்சுறுத்தலை முன்னிலைப்படுத்தி கோத்தபாய ராஜபக்ச அரசினால் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் நடத்தி வெற்றி பெற்று விட்டால் அதன் பின்னர் எதனைப்பற்றியும் கவலைப்படாது சில வருடங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நினைத்ததையெல்லாம் செய்து விடலாமென்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்த திடீர் மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு.

அத்துடன் புதிய அரசியலமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தத்தை நீக்க அரசு முயற்சித்தாலும் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா அதற்கு அனுமதிக்காது, மாகாண சபைகளையும் இல்லாதொழிக்க விடாது என்பதனால் எப்படியும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். மக்கள் மத்தியில் அரசு செல்வாக்கு இழந்துவரும் நிலையில் காலம் தாழ்த்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி சபைகளை இழப்பதனைவிட ”பாராளுமன்ற தேர்தல் பாணி”யில் மீண்டும் கிடைத்துள்ள கொரோனா அச்சறுத்தலைப் பயன்படுத்தி மாகாண சபைகளையம் கைப்பற்றிவிட வேண்டுமென்பதே கோத்தபாய ராஜபக்ச அரசின் திட்டமாகவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியுடன் கூட்டணி என்றால் முதல்வர் வேட்பாளர் யார்? – கமல்ஹாசன் பதில்!! (வீடியோ)
Next post உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!! (அவ்வப்போது கிளாமர்)