மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!! (மருத்துவம்)
இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக் குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மனிதனின் நீண்ட ஆயுளுக்கு சாதகமாக இருக்கும் காரணிகளை, 85 வயதுக்குமேல் ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களிடம் இந்த ஆய்வுகளை அறிவியலாளர்கள் செய்து வருகிறார்கள். இதில் மகிழ்ச்சி தரும் ஆய்வின் முடிவு ஒன்று Jama network இதழில் வெளியாகியிருக்கிறது. மகிழ்ச்சிக்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக ஆராய்ச்சியில் இறங்கினார் டாக்டர் ஆலன் ரோசான்ஸ்கி. இவர் நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் செயின்ட் லூக் மருத்துவமனையின் இதயநோய் நிபுணர்.
இந்த முயற்சிகளின் ஒரு கட்டமாக நல்ல ஆரோக்கியத்தோடு கூடிய நீண்ட ஆயுளுக்கும், நேர்மறை அணுகுமுறைக்கும் உள்ள தொடர்பை கண்டறியும் முயற்சியில் ஆய்வுக்குழு இறங்கியது. ஒருவரின் மகிழ்ச்சியானது ஆரோக்கியத்தில் நேரடி விளைவை ஏற்படுத்துமா என்று தேடியதற்கு, உயிரியல் சான்றுகள் இந்த ஆய்வுகள் மூலம் வலுவாகவே கிடைத்திருக்கின்றன. இதன்படி உறுதியான நம்பிக்கை, மகிழ்ச்சி உள்ளவர்களுக்கு மாரடைப்பு அல்லது பிற இதய நிகழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்ததையும், ஆய்வுகளில் அவநம்பிக்கையான பங்கேற்பாளர்களைக்காட்டிலும் நம்பிக்கையானவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருந்ததையும் ரோசான்ஸ்கி மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் தன் சக மருத்துவர்கள் மற்றும் நண்பர்களுடன் ஆய்வை நடத்தினார். இந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட 15 முக்கிய பகுப்பாய்வுகளின் முடிவுகளே, ஜாமா நெட்வொர்க் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ஆலன் ரோசான்ஸ்கியின் கூற்றுப்படி, ‘இளம் வயதினராக இருந்தாலும் சரி… 90 வயது வயது முதிர்ந்தவராக இருந்தாலும் சரி… ஒருவருக்கு நம்பிக்கையின் அவசியம் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இளம் வயதில் நம்பிக்கை என்பது இருக்கலாம். ஆனால், 90 வயதில் எங்கே இருக்கப்போகிறது என்ற கேள்வி எழலாம். ஆனால், 90 வயது முதியவருக்கும் நம்பிக்கையை வளர்ப்பதென்பது தாமதமான காலம் கிடையாது. பதின்ம வயதினர் முதல் 90 வயதிற்குட்பட்டவர்கள் வரை அனைவருமே நம்பிக்கையுடன் இருந்தால் அவர்களுக்கும் நம்பிக்கையின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்’ என்பதே இந்த ஆராய்ச்சியில் நாங்கள் கண்டோம்’ என்கிறார்.
இத்தகைய ஆய்வை மேற்கொள்ளும் விருப்பத்துக்கு ஆலன் ரோசான்ஸ்கியின் ஆரம்ப கால மருத்துவ வாழ்க்கையும் முக்கிய காரணம். மருத்துவத்தொழிலின் ஆரம்ப காலத்தில் Cardiac rehabilitation Program-ல் பணிபுரிந்தார் ஆலன். ‘Cardiac rehabilitation திட்டத்தில் பலர் கலந்து கொண்டார்கள். நீண்ட காலமாக எதுவும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருந்த பல மாரடைப்பு நோயாளிகள், ‘என்னால் அதைச் செய்ய முடியாது, இதைச் செய்ய முடியாது’ என்று சொல்வார்கள். ஆனால், நான் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து டிரெட்மில்லில் வலுக்கட்டாயமாக ஏற வைப்பேன். மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக அவர்களை நடக்கவும் வைப்பேன். அதன் பிறகே அவர்களின் அணுகுமுறை மேம்பட்டது. அவர்கள் அதிக நம்பிக்கையுடையவர்களாக மாறினார்கள். அதில் 70 வயது உள்ள மாரடைப்பு ஏற்பட்ட ஒரு பெண்மணி கூட, ‘தன்னால் முடியும்’ என்ற நம்பிக்கையோடு செய்ய ஆரம்பித்து, நடத்தியும் காட்டினார்’ என்று தன் பழைய அனுபவங்களையும் மேற்கோள் காட்டுகிறார். இந்த ஆய்வின் தரவுகள் மிகவும் சீரானது என்கிற ரோசான்ஸ்கி இதுபற்றி இன்னும் கூறுகிறார்.
‘ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையுடனும் நோய்க்கான குறைந்த ஆபத்துக்கும் இடையே ஒரு வலுவான உறவு இருந்தது. நம்பிக்கையாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்கிறார்கள். நம்பிக்கையுடன் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், நன்றாக சாப்பிடுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதற்கான வாய்ப்புகளும் குறைவு. ஆனால், அவநம்பிக்கையாளர்கள் Cortisol, Norepinephrine போன்ற மன அழுத்த ஹார்மோன்களில் தங்களை மூழ்கடிக்கிறார்கள். தீய பழக்கங்களுக்கும் ஆளாகிறார்கள். இதனால் இவர்களின் உடலில் அழற்சி, நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற எதிர்விளைவுகளை அதிகரிக்கிறது’ என்றும் உறுதியாகச் சொல்கிறார்.
Average Rating