ஜெனீவா குறித்து தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு வருமா? சுமந்திரனின் யோசனையை ஆராயும் விக்கியும், கஜனும்!! (கட்டுரை)
கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் குறித்து இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனம் திரும்பியிருக்கின்றது.
பிரதான தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்று திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதும் இதற்குக் காரணம்.
இதன் ஓரு அங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இரு தரப்பினருமே இதனை இப்போது பரிசீலித்து வருவதாகத் தெரியவருகின்றது.
வழமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இதில் தனித்த நிலைப்பாட்டை எடுப்பது வழமையாக இருந்த போதிலும், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்கினேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகியிருக்கும் நிலையில் அவர்களுடைய கருத்துக்களை அறிவதிலும் சர்வதேச சமூகம் ஆர்வம்காட்டிவருகின்றது. அதனைவிட, அவர்களும் இம்முறை ஜெனீவாவை அணுகுவதற்கான புதிய வியூகங்களை அமைத்துவருகின்றார்கள்.
இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் மார்ச் மாதம் முடிவுக்கு வருவதால், வரப்போகும் கூட்டத் தொடர் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றமும், இலங்கைப் பொதுத் தேர்தலில் தீவிர தேசியவாதப் போக்கைக்கொண்ட இரு கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருப்பதும் இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றது.
தமிழ்த் தரப்பிலிருந்து ஒருமித்த குரலில் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என புலம்பெயர்ந்த அமைப்புக்களும் அழுத்தம் கொடுக்கும் நிலையில், தமிழ் அரசியல் கட்சிகளின் அணுகுமுறையிலும் சில மாற்றங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஜெனீவா குறித்த யோசனைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பது குறித்தும், அதனை கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் ஆகியோரிடம் கையளித்திருப்பது குறித்தும் ‘தினக்குரல்’ இணயத்தின் சார்பில் சுமந்திரனிடம் இன்று காலை கேட்ட போது, அதனை அவர் உறுதிப்படுத்தினார்.
“ஜெனீவா விவகாரத்தை அணுகுவது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டை எடுக்கலாமா என்பதையிட்டு அந்தக் கட்சிகளிடம் கேட்டிருக்கின்றோம். அதற்கான யோசனைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றையும் அவர்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான பதில் கிடைத்த பின்னர் மேற்கொண்டு என்ன செய்வது என்பதையிட்டு ஆராய்வோம்” எனவும் சுமந்திரன் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
அதேவேளையில் அந்த ஆவணத்தின் உள்ளடக்கத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.
மூன்று பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளும் இவ்விடயத்தில் இணைந்து செயற்பட முனைந்திருப்பது முக்கியமான முன்னேற்றமாக இருந்தாலும், இதில் இணக்கப்பாட்டுடனான அணுகுமுறை தொடருமா என்பது கேள்விக்குறியாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முக்கியமாக கஜேந்திரகுமார் இந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்ட போது தெளிவாக ஒரு விடயத்தை சுமந்திரனிடம் கூறியிருக்கின்றார்.
“இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயனில்லை. அதற்குள்ளாகத்தான் பிரச்சினையைத் தேட வேண்டும் என்றால் எமக்கு அதில் உடன்பாடில்லை” என கஜேந்திரகுமார் இதன்போது உறுதியாகக் கூறியதாகத் தெரிகின்றது.
இருந்தபோதிலும், “அந்த யோசனைகளைப் பரிசீலனை செய்து திருத்தங்கள் இருந்தால் அதனையும் முன்வையுங்கள். அதனையிட்டு ஆராயலாம்” என சுமந்திரன் பதிலளித்ததாகத் தெரிகின்றது. இவ்விடயத்தில் கஜேந்திரகுமாருடைய அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கும் என்பது சுமந்திரனுக்குத் தெரிந்தேயிருக்க வேண்டும்.
“இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்தும் பேரவையில் வைத்திருப்பதென்பது உண்மையில் விசாரணை நடத்தப்பட வேண்டிய இடத்துக்கு இதனைக் கொண்டு செல்வதைத் தடுப்பதாகவே இருக்கும்” என்பதுதான் தமது நிலைப்பாடு என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இது தொடர்பில் தமது தரப்பினருடன் ஆராய்ந்த பின்னர் தமது நிலைப்பாட்டை சுமந்திரனுக்குத் தெரியப்படுத்தவிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
குறிப்பிட்ட யோசனைகள் அடங்கிய ஆவணம் சி.வி.விக்கினேஸ்வரனிடமும் சுமந்திரனால் கையளிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுடைய தரப்பும் அதனை ஆராய்ந்துகொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்களித்த நேர்காணலில் விக்கினேஸ்வரன் பின்வரும் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
“ப ல நிபுணர்க ள் இ து பற்றிச் சிந்தித்து எம்முடன் தொடர்பில் இருக்கின்றார்கள். அவர்களை இப்பொழுது அடையாளப்படுத்தத் தேவையில்லை. எம்முடைய தற்போதைய சிந்தனைப்படி சட்ட ரீதியாக மூன்று விதமான நீதிமன்றங்களை நாம் நாடலாம்.
i. சர்வதேச குற்றவியல் மன்றம் International Criminal Court (ICC)
ii. சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்; International Criminal Tribunal (ICT)
iii. சர்வதேச நீதிமன்றம் International Court of Justice (ICJ)
இதில் சர்வதேச நீதிமன்றமே (ICJ) எமக்கு உகந்த மன்றமாகத் தெரிகின்றது” என விக்கினேஸ்வரன் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருக்கின்றார். அவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் பிரச்சினையை வைத்திருப்பதை விரும்பவில்லை என்பது இதன் மூலம் புலனாகின்றது.
ஆக, தேசியத்துக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்க் கட்சிகள் ஜெனீவா தொடர்பில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பது ஆரோக்கியமான ஒரு முன்னேற்றமாக இருந்தாலும் கூட, தாண்டிச் செல்ல வேண்டிய தடைகள் மேலும் இருப்பதாகவே தெரிகின்றது. முக்கியமான விடயங்களில் இணக்கமில்லாத நிலை தொடர்கின்றது.
குறிப்பாக தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவைக்குள்தான் சுற்றிக்கொண்டிருக்க வேண்டுமா என்பதில் சுமந்திரனின் கருத்துடன் மற்ற இருவரின் கருத்துக்களும் முரண்படுகின்றது.
இது தொடர்பில் ஆரோக்கியமான ஒரு பேச்சுவார்த்தை, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு உதவுவதாக அமையலாம்.
Average Rating