ஆர்ஜென்டீனாவின் கடவுள் !! (கட்டுரை)
ஆர்ஜென்டீனாவில் ‘எல் டியோஸ்’ – கடவுள் எனப் போற்றப்படுகின்ற கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரரான டியகோ மரடோனா நேற்று முன்தினம் காலமானார்.
தற்கால கால்பந்தாட்ட நட்சத்திரங்களான லியனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மரடோனாவின் காலப்பகுதிக்கு முன்னர் காணப்பட்டிருந்த பீலே ஆகியோரும் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களாகக் காணப்பட்டாலும் அவர் அடைந்த புகழை எவராவது அடைந்தார்களா என்பது சந்தேகமே.
நாட்டுக்காகவும், கழகங்களிலும் சாதித்த மரடோனா போதைப்பொருள், மதுவுக்கு அடிமையானமை, அதீத எடையைக் கொண்டிருந்தமை என களத்துக்கு வெளியேயான சிக்கல்களைக் கொண்டிருந்தபோதும் களத்தில் மந்திரவாதியொருவராகவே நோக்கப்பட்ட மரடோனா அவர் சார்ந்த இடங்களில் கடவுளாகவே நோக்கப்பட்டிருந்தார்.
1960 – ஆர்ஜென்டீனத் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸின் ஏழ்மையான புறநகர்ப்பகுதியொன்றிலேயே ஒக்டோபர் 30ஆம் திகதி 1976ஆம் ஆண்டு ஏழைக் குடும்பமொன்றிலேயே மரடோனா பிறந்திருந்தார்.
1972 – தனது 12ஆவது வயதிலேயே பந்தைக் கட்டுப்படுத்தும் திறமை காரணமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
1976 – தனது 16ஆவது வயதில் ஆர்ஜென்டீனக் கழகமான ஆர்ஜென்டினோஸ் ஜூனியர்ஸுக்காக தனது தொழில்முறையிலான அறிமுகத்தை 1976ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி மரடோனா மேற்கொண்டார்.
தனது முதலாவது கோலை 1976ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி மரடோனா பெற்றிருந்தார்.
1977 – தனது 17ஆவது வயதில் ஆர்ஜென்டீனாவுக்காக தனது 17ஆவது வயதில் 1977ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
1979 – ஆர்ஜென்டீனாவுக்கான முதலாவது கோலை, தனது 19ஆவது வயதில் ஸ்கொட்லாந்துக்கெதிராக 1979ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் திகதி மரடோனா பெற்றார்.
1981 – ஆர்ஜென்டினோஸ் ஜூனியர்ஸுக்காக ஐந்தாண்டுகளில் 167 போட்டிகளில் விளையாடி 116 கோல்களைப் பெற்ற பின்னர் இன்னொரு ஆர்ஜென்டீனக் கழகமான பொக்கா ஜூனியர்ஸால் மரடோனா 1981ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
1982 – தனது முதலாவது உலகக் கிண்ணத்தில் மரடோனா விளையாடினார்.
பொக்கா ஜூனியர்ஸுக்காக இரண்டாண்டுகளில் 40 போட்டிகளில் 28 கோல்களைப் பெற்ற நிலையில் அப்போதைய உலக சாதனையாக ஐந்து மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவால் மரடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
1983 – பார்சிலோனாவில் இருக்கும்போது 1983ஆம் ஆண்டு கொக்கேய்னைப் பயன்படுத்த மரடோனா ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
1984 – பார்சிலோனாவில் இரண்டாண்டுகளில் 36 போட்டிகளில் 22 கோல்களைப் பெற்ற நிலையில் மீண்டும் அப்போதைய உலக சாதனைத் தொகையான 7 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு இத்தாலியக் கழகமான நாப்போலியால் மரடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
1986 – மெக்ஸிக்கோவில் நடைபெற்ற 1986ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனாவுக்குத் தலைமை தாங்கி கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார். இத்தொடர் முழுவதும் சிறப்பாகச் செயற்பட்டிருந்த மரடோனா, ஐந்து கோல்களைப் பெற்றதுடன், ஐந்து கோல்களைப் பெற உதவியிருந்தார்.
இந்த உலகக் கிண்ணத்தின் இங்கிலாந்துக்கெதிரான காலிறுதிப் போட்டியில் மரடோனா பெற்ற இரண்டு நேரெதிரான கோல்களாலேயே மரடோனா இன்றும் நினைவுகூரப்படுகிறார் என்றால் அது மிகையாகாது.
முதலாவது கோலானது மரடோனா கையால் தட்டி விட கோல் கம்பத்துக்குள் சென்றிருந்த நிலையில் அதை மத்தியஸ்தர் கவனிக்காமல் விட்ட நிலையில் அது கோலாகப் பதிவாகியிருந்தது. இதை கடவுளின் கையால் பெறப்பட்ட கோல் என மரடோனா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அடுத்த நான்காவது நிமிடத்தில் தனது அரைப்பகுதியிலிருந்து பந்தைக் கொண்டு சென்ற இங்கிலாந்து கோல் காப்பாளர், பின்களவீரர்கள் ஐவரைத் தாண்டி தனித்து கோலொன்றை மரடோனா பெற்றிருந்தார். உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரையிலும் பெறப்பட்ட சிறந்த கோலொன்றாக இது கருதப்படுகிறது.
1987 – நாப்போலிக்கு முதலாவது சீரி ஏ பட்டத்தை மரடோனா பெற்றுக் கொடுத்திருந்தார்.
1990 – 1990ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் ஆர்ஜென்டீனாவுக்கு மரடோனா தலைமை தாங்கியிருந்த நிலையில், அவரால் 1986ஆம் ஆண்டு பெறுபேறுகளை கணுக்கால் காயமொன்று காரணமாக வெளிப்படுத்த முடியாமல் போனபோதும் ஆர்ஜென்டீனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
1991 – நாப்போலிக்காக ஏழு ஆண்டுகள் விளையாடி 188 போட்டிகளில் 81 கோல்களை மரடோனா பெற்றிருந்தார். நாப்போலிக்காக விளையாடும்போது கொக்கேய்னுக்கு தொடர்ச்சியாக மரடோனா அடிமையாகிய நிலையில், அது அவரது விளையாட்டில் தாக்கம் செலுத்தியிருந்தது.
1992 – கொக்கெய்னால் போதைப்பொருள் சோதனையொன்றில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 15 மாத தடையை எதிர்கொண்ட மரடோனா, 1992ஆம் ஆண்டு இன்னொரு ஸ்பானிய கழகமான செவில்லாவுடன் கைச்சாத்திட்டிருந்தார்.
1993 – செவில்லாவில் ஓராண்டு இருந்து 26 போட்டிகளில் ஐந்து கோல்களைப் பெற்றதைத் தொடர்ந்து, 1993ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினக் கழகமான நீவெல்ஸ் ஓல்ட் போய்ஸுக்காக விளையாடியிருந்தார்.
1994 – 1994ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளையடுத்து ஆர்ஜென்டீனாவுக்கு மரடோனா அனுபப்பட்டிருந்தார்.
இத்தொடரில் கிரேக்கத்துக்கெதிரான போட்டியில் மரடோனா பெற்ற கோலே, ஆர்ஜென்டீனாவுக்காக அவர் பெற்ற இறுதிக் கோலாக அமைந்தது. 34 கோல்களை ஆர்ஜென்டீனாவுக்காக மரடோனா பெற்றிருந்தார்.
தவிர, குறித்த தொடரில் நைஜீரியாவுக்கெதிராக ஆர்ஜென்டீனா விளையாடிய போட்டியே, மரடோனாவின் ஆர்ஜென்டீனாவுக்கான கடைசிப் போட்டியாக அமைந்தது. ஆர்ஜென்டீனாவுக்காக 17 ஆண்டுகளில் 91 போட்டிகளில் மரடோனா விளையாடியிருந்தார்.
1995 – 1995ஆம் ஆண்டு பொக்கா ஜூனியர்ஸுக்கு மரடோனா திரும்பியிருந்தார்.
1997 – பொக்கா ஜூனியர்ஸுக்கா 30 போட்டிகளில் ஏழு கோல்களை இரண்டாண்டுகளில் பெற்றதைத் தொடர்ந்து மரடோனா ஒய்வு பெற்றிருந்தார். மொத்தமாக 491 போட்டிகளில் 259 கோல்களை மரடோனா பெற்றிருந்தார்.
2008 – ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளராக மரடோனா பதவி வகித்திருந்தார்.
2010 – 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனாவை காலிறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற மரடோனா, இத்தொடர் முடிவுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
2011 – ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் அல்-வஸால் கழகத்தின் பயிற்சியாளராக மரடோனா 2011ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரையில் காணப்பட்டிருந்தார்.
2017 – ஐ. அமீரகத்தின் புஜைராவின் பயிற்சியாளராக 2017ஆம் ஆண்டு காணப்பட்டார்.
2018 – மெக்ஸிக்க கழகமான டொரடொஸ் டீ சினலோவா கழகத்தின் பயிற்சியாளராக இருந்தார்.
2020 – ஆர்ஜென்டீனக் கழகமான ஜிம்னஸியா டீ லா பிளாட்டாவின் பயிற்சியாளராக இருந்தார்.
Average Rating