வெயில் கால டிப்ஸ்…!! (மருத்துவம்)
* வெயில் தாங்கமுடிய வில்லையா..? தினசரி இரண்டு வெள்ளரிப் பிஞ்சு அல்லது பதநீர் கிடைத்தால் ஒரு கப் சாப்பிட்டால் உடல் வெம்மை தணிந்து குளிர்ச்சியாகும். அது மட்டுமின்றி உடலுக்கு சத்துக்களும் வைட்டமின்களும் கிடைக்கும்.
* தர்பூசணிப்பழம் கிடைத்தால் இப்பழத்தின் பழச்சதையை மிக்சியிலிட்டு அல்லது தக்காளிப்பழம் இரண்டை மிக்சியிலிட்டு அடித்து சிறிதளவு இனிப்பு, பால், ஏலக்காய் சேர்த்து அடித்து, தேவையான ஐஸ் துண்டுகளை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.
* வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து, இதோடு இனிப்பு அல்லது குளுக்கோஸ் சேர்த்து குடிக்க உடல் வெம்மை தணியும்.
* நுங்கை எடுத்து இதோடு சிறிதளவு சந்தனம் சேர்த்து அரைத்து உடலில் பூசி வர அரிப்பு, வேர்க்குரு ஏற்படாது.
* மின்விசிறிக்கு அடியில் சாக்கை நனைத்து கட்டினால் குளிர் காற்று கிடைக்கும்.
* வெட்டிவேர் தட்டி கிடைத்தால் வீட்டில் கட்டி தண்ணீரில் நனைக்க வெம்மை தணியும். குளிர்ச்சியான காற்று கிடைக்கும். அதோடு மணமான சூழ்நிலை ஏற்படும்.
* நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை இலைகள் அல்லது வேப்பம்பூக்களை போட்டு காய்த்து தலையில் தேய்த்து குளித்துவர பொடுகு, பேன் மாறும்.
* ரோஜா இதழ்களோடு தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தணியும். வயிற்றுப்புண் மாறும்.
* இரவில் அரை ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து காலையில் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். மட்டுமின்றி வயிற்றுக்கோளாறுகள் குறையும்.
* மோரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்க உடல் சோர்வு மாறும்.
* துளசி, சந்தனம், வேம்பு, மஞ்சள் ஆகியவற்றை அரைத்து உடலில் பூசி வர வேனல் கட்டிகள் மாறும். சருமம் மிருதுவாகும்.
* வெயிலில் வெளியே போய் வருவதால் முகம் கருத்து விடாமலிருக்க வெள்ளரிச்சாறு, எலுமிச்சைச்சாறு இவற்றோடு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து பசைபோல் செய்து முகத்தில் தடவி ஊறியபின் கழுவி வர முகம் புதுப் பொலிவுடன் விளங்கும்.
* வெயிலினால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை நீக்க முள்ளங்கிச்சாறு, வெள்ளரிச்சாறு, பன்னீர் இம்மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர கரும்புள்ளிகள் மட்டுமின்றி முகப்பருக்கள் மாறும்.
* நன்கு கனிந்த பூவன் பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் பூசி ஊறியபின் கழுவி வர வெயிலால் ஏற்பட்ட முகச்சுருக்கம் மறையும்.
* வெயில் காலத்தில் நீர் அதிக அளவு வெளியேறுவதால் உடம்பில் நீரிழப்பு ஏற்படும். எனவே இதை ஈடுகட்ட அதிக அளவில் திரவ பானங்களை அருந்தினால் நீரிழப்பு ஈடுகட்டுப்படும். மட்டுமின்றி, உடலும் குளிர்ச்சி பெறும்.
* அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் பருகி வந்தால் வெம்மை தணியும். வேர்க்குரு ஏற்படாது.
* காலையில் எழுந்ததும் இளநீரை முகத்தில் தேய்த்து வர முகம் பளபளக்கும். தோல் சுருக்கம் நீங்குவதோடு முகம் குளிர்ச்சி பெறும்.
* தர்பூசணிப் பழச்சதையை எடுத்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர முகம் பளிச்சென ஆகும்.
* குளித்து முடிந்ததும் உடனேயே பவுடர் அல்லது டியோரண்ட்களை போடக்கூடாது.
* கோடைகாலத்தில் அதிகமாக காரம் சேர்த்தல் மற்றும் சூடான உணவுகளை பயன்படுத்துதல் உடம்பின் சூட்டை மேலும் கூட்டி விடும்.
Average Rating