திடீர் பக்கவாதம்… தீர்வு காண என்ன வழி!! (மருத்துவம்)
‘நல்லாதான் இருந்தாரு… திடீர்னு ஒரு பக்கமா கை கால் இழுத்துக்குச்சு… ஹாஸ்பிட்டல்ல போய் பாத்தா பக்கவாதம்ன்னு சொல்றாங்க..’ என பலர் சொல்லக் கேட்டிருப்போம். சினிமா படங்களில் கூட கை கால் வராமல், வாய் கோணி, சரியாக பேச முடியாமல் இருப்பதுபோல் நடிக்கும் நடிகர்களைப் பார்த்திருப்போம்.
ஆனால் stroke என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த பக்கவாதம் ஒருவருக்கு ஏன் வருகிறது, எப்படி வருகிறது, வந்தால் என்ன செய்வது, பக்கவாதத்தில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பது பற்றி நம் அனைவருக்கும் தெரியுமா என்றால் இல்லை என்பதே பெரும்பாலும் பதிலாக இருக்கும்.
அதுவும் இன்றைய தொழில்நுட்ப உலகில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களுக்கு அடுத்தபடியாக பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களும், இறப்பவர்களும்தான் உள்ளனர் என்பதால் நாம் ஒவ்வொருவரும் இப்பக்கவாதம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்வது மிக அவசியமாகிறது.
ரத்த ஓட்டம் அவசியம்!
நாம் தினமும் செயல்பட இதயத்திற்கு ரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமானதோ அதுபோன்றுதான் மூளைக்கும் ரத்த ஓட்டம் அவசியமாகிறது. அதுவும் இதயத்திற்கு ரத்தம் செல்வதில் ஏதேனும் தடையிருந்தால் மாரடைப்பு ஏற்படுவது போன்று மூளைக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் இருந்தால் பக்கவாதம் வரும் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது, மூளைக்கு போதுமான அளவில் பிராணவாயு மற்றும் ரத்த ஓட்டம் இல்லையென்றால் மூளைச் செல்கள் செயலிழக்கத் தொடங்கும். மூளையின் எந்தப் பகுதியில் செல்கள் செயலிழக்கிறதோ அந்தப் பகுதிக்கான செயல்பாடு பாதிக்கப்படும்.உதாரணமாக, நாம் பேசுவதற்கு உண்டான பகுதி பாதிக்கப்பட்டால் நாம் பேசுவதில் சிரமங்கள் ஏற்படும்.
எனவே ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு செயல்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்ப அறிகுறிகளும் வேறுபடும். ஆனால் அதிகமானவர்களுக்கு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயலிழப்பதால் ஒரு பக்க கை கால் வராமல், வாய் கோணி பேச முடியாமல், நடக்க முடியாமல் போவதினால் ஏற்படுகிறது என்பதால் இதனை பக்கவாதம் என்கிறோம்.
ஏழு ஆண்களுக்கு ஒரு பெண்! கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 30 முதல் 50 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். அதுவும் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கையே அதிக அளவில் உள்ளது (ஏழு ஆண்களுக்கு ஒரு பெண்). அதிலும் குறிப்பாக 70 வயதைக் கடந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனினும் 30 வயதிலிருந்தே பலர் பாதிக்கப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியம்.
என்ன காரணம்?
*மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் கசிவது.
*ரத்தக் குழாய்களில் அடைப்பு (பெரும்பாலும் கொழுப்பு படிமன்களால்) ஏற்படுவது.
*ரத்தம் உறைந்து பின் அது ரத்த ஓட்டத்தில் கலந்து அடைப்பு உண்டாவது.
ஆபத்துக்கான காரணிகள்!
*போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது.
*மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கருத்தடை மாத்திரைகள் தொடர்ந்து பயன்படுத்துவது.
*மதுப்பழக்கம்.
*புகைப்பழக்கம்.
*உடற்பருமன்.
*தொடர் மனஅழுத்தம்.
*உயர் ரத்த அழுத்தம்.
*நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்).
*உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.
*உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது.
*அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்வு முறை.
என்னென்ன அறிகுறிகள்?
உடனடி அறிகுறிகளாக…
*கடுமையான திடீர் தலைவலி
*தலை சுற்றல்
*ஒரு பக்கமாக கை கால் தளர்ந்து பலவீனமாய் மாறுவது
*பாதிக்கப்பட்ட பக்கத்தில் உடல் அசைவுகள் செய்ய முடியாமல் போவது
*சரிவர நடக்க முடியாமல் தள்ளாடுவது
*பேச முடியாது
*சிலருக்கு சிறுநீர் கழிப்பதற்கான கட்டுப்படுத்தும் ஆற்றல் இழக்க நேரிடுவது
*இன்னும் சிலருக்கு கை கால் மரத்துப்போவதுகண்டறிவதற்கு…
*CT, MRI ஸ்கேன்கள் மூலம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது, அதற்கானக் காரணம் என்ன என்பதனை அறியலாம்.
*ரத்த பரிசோதனை மூலமாக கொழுப்பின் அளவு, தைராய்டு அளவு போன்றவற்றை அறியலாம்.
என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக…
*அறிகுறிகள் தெரிந்ததும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
*ஏனெனில், ரத்த ஓட்டம் தடைபட ஆரம்பித்ததும் வேகமாக மூளை செல்கள் செயலிழக்கத் தொடங்கும். அதனால் அதிக எண்ணிக்கையில் மூளை செல்கள் செயலிழக்கும் என்பதால் பாதிப்பும் அதிகமாய் இருக்கும்.
*மாத்திரை, மருந்துகள் மூலம் உடல் நிலையை மருத்துவர்கள் கட்டுக்குள் கொண்டு வருவார்கள்.
*பின் வாதம் ஏற்படக் காரணமாக இருக்கும் கோளாறுகளை மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்வார்கள்.
இயன்முறை மருத்துவத்தில்…
*பாதிக்கப்பட்டவர் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்ப இயன்முறை மருத்துவம் மட்டுமே அவசியம் ஆகிறது.
*தினமும் தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் தசைகள் பலம் பெற்று கை கால்கள் பலம் பெறும்.
*பக்கவாதம் திரும்பி வரவும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
*பொதுவாக நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் முற்றிலும் குணமாக நேரம் எடுக்கும். பக்கவாதத்திலும் அதேபோலத்தான். எந்தப் பகுதி பாதித்திருக்கிறது, எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதைப் பொருத்து குணமாகும் காலம் வேறுபடலாம். எழுந்து நடந்து, முற்றிலும் யார் துணையும் இல்லாமல் தன் வேலைகளை தானே செய்துகொள்ள சில மாதம் முதல் ஒரு வருடம் கூட ஆகலாம்.
முன்னெச்சரிக்கையாக…
*அதிக காய் கனி வகைகள் எடுத்துக்கொள்வது
*மது மற்றும் புகை பழக்கத்தை தவிர்ப்பது
*தினமும் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வது
*50 வயதைக் கடந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது.
*ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றின் அளவுகளை எப்போதும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது.
எனவே திடீரென பக்கவாதம் வந்தால் பயம் கொள்ளாமல் கூடிய விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பின் இயன்முறை மருத்துவரின் ஆலோசனைகள் மூலம் தொடர் பயிற்சிகள் செய்துகொண்டு வந்தால் பக்கவாதத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாக விடுபடலாம்.
Average Rating