மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை!! (மருத்துவம்)
நமது உடல்நலம் காப்பதிலும், ஆரோக்கியத்தை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது இயற்கை உணவுகளான பழங்கள், காய்கறிகள், கீரைகளாகும். இவைகள் பல்வேறு நோய்களைத் தீர்க்கின்றன. விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்த கீரைகளை தினமும் ஒருவர் 100 முதல் 125 கிராம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் கிடைக்கும் கீரைகளில் பல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மலேயாவைத் தாயகமாகக் கொண்ட இக்கீரை எங்கும் வளரும் தன்மை கொண்டது. கிளைகளை ஒடித்து நடுவதன் மூலம் எளிதாக இச்செடிகளை வளர்க்க முடியும். இலைகள் இனிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். மலேயா, இந்தோனேசியா நாடுகளில் இக்கீரையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
எந்த கீரைக்கும் இல்லாத சிறப்பு இக்கீரைக்கு உண்டு. இந்த கீரையில் விட்டமின்கள் ஏ, பி, பி-2, சி, டி, கே போன்றவை அடங்கியுள்ளது. தினசரி 15 இலைகள் சாப்பிட்டால், ஒரு ஸ்பூன் வைட்டமின் சிரப் சாப்பிடுவதற்கு சமம் தவசிக்கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துப் பொருட்களும், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது பொருட்களும், தயமின், ரிபோஃபிளேவின், நிகோடினிக் அமிலங்களும் அடங்கியுள்ளன.
இதன் இலைகள் இனிப்புத் தன்மை கொண்டதால், பச்சையாகவோ அல்லது சாறு எடுத்தும் உண்ணலாம். மற்ற கீரைகளைப்போல நறுக்கி, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி சாப்பிடலாம். பருப்பு சேர்த்து பொரியலாகவும், வேக வைத்து கடைந்து, துவையலாக அரைத்தும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். துவரம்பருப்போடு சேர்ந்து கீரை வடையாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மருத்துவ பயன்கள்
*உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது.
*சிறுவர்களின் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
*முதியோர்களின் எலும்பு தேய்வு, சுண்ணாம்பு பற்றாக்குறையை சீர் செய்யும்.
*கண் பார்வையை கூர்மையாக்கும்.
*உடல் களைப்பு, அசதியை நீக்கும்.
*இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை குணமாகும். ஹீமோகுளோபின் அளவு கூடும்.
*இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைகரண்டி சாறுடன் இதே அளவு தேன் சேர்த்து அருந்த உடல் வளர்ச்சி பெறும்.
*சரும பிரச்னை வராமல் தடுக்கும், பளபளப்பாக்கும்.
*நரம்புத்தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும்.
*அதிக அளவில் புரதச்சத்து உள்ளதால் உடலும், தசையும் உறுதி பெறும்.
*விட்டமின் குறைபாடால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யும்.
*மூளை வளர்ச்சி, சுறுசுறுப்பிற்கு உதவுகிறது.
*குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.
*தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்திட உடல் குளிர்ச்சி பெறும்.
*கண்களில் ஏற்படும் நீர்வடிதல், மாலைக்கண் போன்ற குறைபாடுகளை நீக்கும்.
மொத்தத்தில் தவசிக்கீரை பல்வேறு பயன்களை தரும் சிறந்த ஒரு மருத்துவக்கீரை.
Average Rating