தமிழர் ஆதரவுக் கட்டமைப்பு பற்றிய மாவையின் ஆர்வம் !! (வீடியோ)
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள, தமிழர் நலன்சார் சக்திகளை ஓரணியில் திரட்டி, பரந்துபட்ட கட்டமைப்பொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில், கடந்த சில வாரங்களாக ஈடுபட்டுவந்த அவர், தற்போது வெளிநாடுகளிலுள்ள தமிழர் ஆதரவுச் சக்திகளை இணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார்.
குறிப்பாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்றிட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா உள்ளிட்டவர்களை இணைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, மாவை ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
எனினும், இவ்வாறான கட்டமைப்பொன்றில் தன்னை இணைத்துக் கொள்வது தொடர்பில், யாரும் பேசவில்லை என்றும் தான் இணையப் போவதில்லை என்றும், ருவிட்டரில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, யஸ்மின் சூக்கா பதிலளித்துவிட்டார்.
நவநீதம் பிள்ளைக்கு, இவ்வாறான தமிழர் ஆதரவுக் கட்டமைப்பு பற்றியோ, அது தொடர்பில் தன்னுடைய பெயரும் உரையாடப்படுகின்றது என்பது பற்றியோ, தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகளும் அரிதானவையே.
ஆனால், உள்ளூர் ஊடகங்களில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தைப் பிரதானப்படுத்திய ஊடகங்களில், தமிழர் ஆதரவுத் தரப்பினரை உள்ளடக்கிய பரந்து பட்ட கட்டமைப்புப் பற்றிய செய்திகள், தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டணி வெற்றி பெற்றிருக்கின்ற நிலையில், கமலாவின் தாய் வழி பின்னணி தொடர்பில் ஆராய்ந்து, தமிழர் அடையாளத்தின் ஊடாக அவரைக் கொண்டாடும் மனோபாவம் ஒன்று, (ஈழத்) தமிழர்களிடம் காணப்படுகின்றது. அவரை, யாழ்ப்பாணப் பின்னணி உடையவர் என்று, ‘வம்பு வதந்தி’ பரப்பும் அளவுக்கு, அந்தக் கொண்டாட்ட மனநிலை சென்றிருக்கின்றது.
தமிழ்ப் பின்னணியுடைய கமலா ஹரிஸ், ஈழத் தமிழ் ஆதரவு நிலைப்பாட்டுக்கு வருவார் என்று நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு, நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது, ஹிலாரி கிளின்டனின் வெற்றிக்காக, தேங்காய் உடைத்துப் பிரார்த்தித்த தலைவர், ஆதரவாளர்கள் எல்லாம் தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கிறார்கள்.
தமிழ்த் தேசிய அரசியல், உரிமையும் உணர்வும் சார்ந்து எழுந்த புனிதமான ஒன்று! ஆனால், அதிக நேரங்களில் ‘உணர்வு’ என்கிற கட்டத்தை, ‘உணர்ச்சிவசப்படுதல்’ என்கிற நிலையை நோக்கி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு நகர்த்தி விட்டிருக்கின்றது. அதுதான், அரசியல் ரீதியான தோல்விகளைச் சந்திப்பதற்கு, அதிகம் காரணமாகி விடுகின்றது.
அரசியல் செயற்பாடு என்பது, ஓர் இனமோ சனக்கூட்டமோ, ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய பிரச்சினைகள் சார்ந்து, சிந்தித்துச் செயலாற்றுவதல்ல. மாறாக, உலக ஒழுங்கு, அதன் அடுத்த கட்டப் பாய்ச்சல் பற்றியெல்லாம், சிந்தித்துச் செயலாற்றும் தன்மையாகும்.
ஆனால், தமிழர் அரசியலில், அதீத உணர்ச்சிவசப்படுதல் என்பது, ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும்’ நிலைக்குச் சென்றிருக்கின்றது. அந்த நிலையால், உலக ஒழுங்கைப் புரிந்து கொள்ளாமல், தனியாவர்த்தனம் நடத்தி, அடைந்த தோல்விகள் ஏராளம்.
அதுபோல, ஆதரவு -எதிர்ப்பு மனநிலையை, ஒரு பருமட்டான நிலையில் பேணாமல், ஒரே பக்கத்தில் பெரும் திரட்சியைக் காட்டி, மற்றவர்களைக் காலாகாலத்துக்கும் எதிராளிகள் ஆக்குவதிலும், ஈழத் தமிழர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இப்படியான கட்டத்தில், ஓர் ஆக்கபூர்வமான செயற்பாட்டை நோக்கி நகர்த்தல் என்பது, உணர்ச்சி வசப்படுதலுக்கும் குறுகிய நோக்கங்களுக்கும், அப்பாலான சிந்தனைகளோடு இருக்க வேண்டும். அது, உலக ஒழுங்கில் அனைத்துத் தரப்புகளோடு, ஊடாடும் தன்மையுள்ள திறனோடு இருக்க வேண்டும்.
இப்போது, மாவை பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கான பரந்துபட்ட ஆதரவுத் தளத்தை உருவாக்குதல் என்பதும், அப்படித்தான் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அப்படியான செயற்றிறனும் திட்டமிடலும், மாவையிடமும் அவர் தரப்பிடமும் இருக்கின்றதா என்கிற கேள்வி பலமாக எழுகின்றது.
ஏனெனில், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த பதினொரு ஆண்டுகளாக, மாவை பிரதான தலைவர்களில் ஒருவராக இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குத்தான், தமிழ் மக்கள் ஏக ஆணை வழங்கி இருந்தார்கள். அந்தக் காலப்பகுதியில், இவ்வாறான பரந்துபட்ட கட்டமைப்புப் பற்றி, அவர் ஏன் சிந்திக்கவில்லை?
ஒரு தேர்தல் தோல்விதான், இவ்வாறான பரந்துபட்ட கட்டமைப்புப் பற்றியெல்லாம் உங்களைச் சிந்திக்க வைக்குமென்றால், தேர்தலில் நீங்கள் வெற்றிபெறாமலேயே இருந்துவிடலாம் இல்லையா?
மக்கள் வழங்குகின்ற ஆணை என்பது, ஓர் அங்கிகாரம். அதை வைத்துக் கொண்டு, அரசியல் – இராஜதந்திர ரீதியாக முன்நகர வேண்டும். ஆனால், கடந்த காலம் முழுவதும், நாடாளுமன்ற ஆசனங்களுக்குப் பாரமாக இருந்துவிட்டு, தோல்வியடைந்ததும் ஞானோதயம் வருவதெல்லாம் யோசிக்க வேண்டியவையே ஆகும்.
தோல்விகளால் வரும் ஞானோதயம் தவிர்க்கப்பட வேண்டியதில்லை என்கிற அடிப்படையில், மாவையினதும் அவரது ஆதரவுத் தரப்புகளினதும், பரந்துபட்ட கட்டமைப்புக்கான முயற்சிகளை, வரவேற்பதற்குத் தயாராகவே தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
ஆனால், குறிப்பிட்ட ஒரு சில தரப்பினர் மாத்திரம் கூடிக்கூடிப் பேசுவதாலும் அதை ஊடகங்களில் செய்திகளாக்குவதாலும், உண்மையில் நன்மைகள் ஏதும் விளைந்துவிடுமா?
நீங்கள் முன்வைக்கும் சிந்தனைகளை, எப்போது, என்ன வகையில், செயல் வடிவம் கொடுக்கப் போகின்றீர்கள் என்பதுதான், முக்கியமானது.
கடந்த காலங்களிலும், இப்படி ஆயிரத்தெட்டுத் தடவைகள், பல கட்டமைப்புகள் குறித்து, தமிழ்த் தேசிய பரப்புகள் உரையாடி இருக்கின்றன. இவற்றைக் குறித்து, பல்லாயிரம் செய்திகளும் கட்டுரைகளும் வந்துமிருக்கின்றன. ஆனால், அந்தக் கட்டமைப்புகள் வளர்ந்ததாகவோ, அதனால் அரசியல் வெற்றிகள் பெறப்பட்டதாகவோ எந்தப் பதிவும் இல்லை.
கமலா ஹரிஸை, தமிழர் ஆதரவு சக்தியாக ஈழத் தமிழர்கள் சிலர், உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டாடுவது போல, உணர்ச்சிவசப்பட்டு ஆட்களுக்கு அடையாளம் கொடுத்து, அரசியல் கட்டமைப்பொன்றை உருவாக்க முடியாது.
மாவை குறிப்பிடும் பரந்துபட்ட கட்டமைப்புப் பற்றிய உரையாடலில், நவநீதம் பிள்ளை, யஸ்மின் சூக்கா உள்ளிட்டவர்களின் பெயர், உள்வாங்கப்பட்டதும் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளின் போக்கில்தான். இது, செய்திகளுக்குக் கவர்ச்சியூட்ட வேண்டுமானால் பயன்படலாம். மாறாக, ஒரு பக்கம் சாராத கட்டமைப்பாக வளர்ப்பதற்கு உதவாது.
இன்னொன்று, சம்பந்தப்பட்ட தரப்புகள், நபர்களின் அனுமதியின்றி, அவர்களின் பெயர்களை இவ்வாறான விடயங்களில் சேர்த்துப் பேசுவது அபத்தமானது. அது, ஒரு கட்டமைப்பு உருவாகுவதற்கு முன்னரேயே, படுகுழியில் தள்ளிவிடும்.
தமிழர் நலன்சார் ஆதரவுக் கட்டமைப்பு ஒன்றை, உருவாக்க வேண்டிய தேவை, தமிழ்த் தேசிய போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் காணப்படுகின்றது. அதை நோக்கி மாவை, மனப்பூர்வமாக நகர்ந்தால், அதற்கான செயற்பாடுகளை நிதானமாகவும் தெளிவாகவும் முன்னெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு படிமுறைகளிலும், அதற்கு ஒத்துழைக்கும் தரப்புகளை, அரசியல் வேறுபாடுகள் கடந்துநின்று உள்வாங்கிப் பயணிக்க வேண்டும். அதன்மூலம், நின்று நீடித்துச் செயற்படக் கூடிய கட்டமைப்பை உருவாக்க முடியும்.
மாறாக, சொந்தக் கட்சிக்குள் காணப்படும் குத்துவெட்டு, குழிபறிப்புகளைக் கையாளத் தெரியாத ஒரு தலைவராக, மாவை அடையாளம் பெற்றது போல, பரந்துபட்ட கட்டமைப்பு பற்றிய விடயத்திலும் சறுக்கிவிடக் கூடாது.
Average Rating