சிறுநீரக, பித்தப்பை கற்களை கரைக்கும் கொள்ளு!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், மிக அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய நாட்டு மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று உடலுக்கு வலுவூட்டம் சேர்ப்பதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மைகள் கொண்டதுமான கொள்ளு பற்றி பார்க்கலாம்.
கொள்ளு செடி, விதைகளை பயன்படுத்தி உடலுக்கு பயன்தரும் உணவுகளை சாப்பிடுவதால் நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். இந்த கொள்ளு தானியத்தில் புரதம், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த வகை பயறு கேன்சர் கட்டிகளை கரைக்க செய்யும் ஆற்றல் கொண்டது. அதனுடன் உடலுக்கு உஷ்ணத்தை தருகிறது. உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கிறது. இதனை அடிக்கடி சேர்த்து கொண்டால் கொள்ளுவின் நிறைவான பயன்களை பெறமுடியும்.
தசை நரம்புகளை பலப்படுத்தும் கொள்ளு சூப்/ கஞ்சி:
தேவையான பொருட்கள்: வேகவைத்த கொள்ளு(மசித்தது), சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு, மிளகுப்பொடி, கொத்தமல்லி, கடுகு, நல்லெண்ணெய், உப்பு.
வானலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதங்கியதும், இதனுடன் வேகவைத்து மசித்த கொள்ளு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அதனை சூப்பாக அருந்தலாம். வாரத்தில் 2 நாட்கள் இதனை பயன்படுத்துவதால் தசைநார், நரம்பு, எலும்புகளை பலப்படுத்துகிறது. உடலில் தேவையற்ற நச்சு கொழுப்புகளை நீக்குகிறது. மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.
மாதவிடாயை சரிசெய்யும் கொள்ளுப்பொடி:
தேவையான பொருட்கள்: கொள்ளு, உளுந்தம்பருப்பு, கருப்பு உளுந்து, தனியா, மிளகு, உப்பு.
வானலியில் ஒரு பங்கு தனியா வறுத்து கொள்ளவும். பின்னர் அதனை தனியே வைத்து விட்டு, 2 பங்கு கொள்ளுக்கு ஒரு பங்கு மிளகு என வறுக்கவும். இந்த தனியா, கொள்ளு, மிளகு, உப்பு சேர்த்த கலவையை நன்கு பொடி செய்து கொள்ளவும். இதனை நல்லெண்ணெய்யுடன் உணவில் சேர்த்து வருவதால் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள், தொப்பை ஆகியன கரையும். ஈரலை சுற்றி கொழுப்பு தேங்குவது, கருப்பையில் கொழுப்பு சேர்ந்து வீக்கத்தை ஏற்படுத்துவது, சீரற்ற மாதவிடாய் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகிறது.
பித்தப்பை கல், சிறுநீரக கல் தடுப்பதற்கான துவையல்:
தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம், வரமிளகாய், புளி, கொள்ளு, தேங்காய் துருவல், உப்பு.
வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி, வரமிளகாய், உளுந்தம் பருப்பு சேர்க்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் புளி, கொள்ளு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து துவையலாக அரைத்து உணவுடன் சாப்பிடலாம். இதனை வாரம் தோறும் எடுத்துக்கொள்ளும் போது, பித்தப்பையில் இருக்கின்ற கல்லினை நீக்குகிறது. சிறுநீரக கற்களையும் படிப்படியாக கரைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு.
Average Rating