இயற்கை குளியல்!! (மகளிர் பக்கம்)
குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா? ரசாயனம் இல்லாத இயற்கை குளியலே உடலுக்கு சிறந்தது என்கிறார் சித்த மருத்துவர் சுகன்யா மகேந்திரன். “இயற்கையை மறந்து எந்திரங்களோடு எந்திரங்களாக ஓடும் இந்த வாழ்க்கையில், இயற்கையை நோக்கித் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இயற்கை முறையில் குளியலுக்கென வகுத்த சில வழிமுறைகள் உள்ளன.
‘காலை, மாலை என இரு வேளையும் குளிக்கலாம். எனினும் காலையே சிறந்தது. மேலும் நாம் குளிப்பது உடலில் உள்ள அழுக்குகள் நீங்க மட்டுமல்ல உடலில் வாத, பித்த, கப தோஷங்கள் சமநிலை அடைந்து உடல் சூடு தணியவும் காலை குளியல் சிறந்தது. இயற்கை குளியல் முறையில் எண்ணெய் குளியல், மண் குளியல் போன்ற பல முறைகள் உள்ளன. இவை அனைத்து முறைகளும் நமது தோலின் புத்துணர்வுக்கும் நச்சுத்தன்மை நீக்கி தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு நல்ல வனப்பையும் தரும்.
இதில் எல்லா முறைகளையும் எல்லோராலும் பின்பற்ற முடியாவிட்டாலும் எண்ணெய் குளியல் நம் அனைவராலும் பின்பற்றக் கூடியதே. வறண்ட தலைமுடியோடு வலம் வருவதையே நாகரிகம் என கருதுகின்றனர் பலர். ஆனால் எண்ணெய் பசையோடு இருப்பதுதான் தலைமுடிக்கும், தோலுக்கும் நல்லது. நல்லெண்ணெய், முக்கூட்டு எண்ணெய் குளியலுக்கு சிறந்தது. உயர்ந்த தைல வகைகளும் குளியலுக்கு பயன்படுத்தலாம். சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென சுக்கு தைலம், நொச்சி தைலம், பீனிச தைலம் போன்ற தைல வகைகளும், பித்த நோய், ரத்தக் கொதிப்பு, மனநோய் போன்றவற்றுக்கு அசத் தைலம், கரிசாலைத் தைலம் போன்றவைகளும், மூலநோய்க்கு குளிர்தாமரை தைலம் பயன்படுத்தலாம்.
நோய்களுக்கு ஏற்றவாறு தைல வகைகளும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. எண்ணெய் குளியல் செய்வதன் மூலம் தோல் வறட்சி நீங்கி பளபளப்பு பெறும். ரத்த ஓட்டம் சீரடையும். தோல்களுக்கு பலம் கிடைக்கும். தைலம் தேய்க்கும் விதியில் காதுகளுக்கு 3 துளியும், நாசியில் 2 துளியும் உச்சி முதல் பாதம் வரை சூடு எழும்பாமல் மிதமாக தேய்க்க வேண்டும். காதுகளில் தைலம் விடுவதால் அடிக்கடி தலைவலி ஏற்படுவது நீங்கும். பாதங்களில் தேய்ப்பதால் கண்களுக்கு பலம் உண்டாகும். மக்கள் வாசனையுள்ள சோப்புகளை அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள்.
அவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் தோல் வறண்டு விடுவதோடு மேனி நிறம் மாறி பல நோய்களுக்கும் வழி வகுக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் எண்ணெய் தேய்த்த பின்பு சோப்பு பயன்படுத்தி விடுகிறார்கள். அப்படி செய்யக்கூடாது. சோப்பிற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கக்கூடிய சில பொடிகளை பயன்படுத்தலாம். அதில் அற்புத குணங்களும் உண்டு.
நலங்குமாவு, சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும். பாசிப்பயறு மினுமினுப்பை கொடுக்கும். வெட்டி வேர், சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தரும். கோரைக்கிழங்கு, விலாமிச்சம் வேர், கிச்சிலிக் கிழங்கு போன்றவை தோல் நோய் வராமல் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குழந்தைகளுக்கு பச்சைப் பயறு மாவு, ரோஜா இதழ், ஆரஞ்சு பழத்தோல் இவற்றை பயன்படுத்தலாம். ஆவாரம் பூ, பச்சைப்பயறு சம அளவு கலந்து குளியலுக்கு பயன்படுத்தலாம்.
இது உடலில் ஏற்படும் நாற்றத்தை போக்கும். வேப்பிலை, மஞ்சள் அரைத்து பயன்படுத்தினால் முகப்பரு ஏற்படாமல் தடுத்து தோலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இவை அனைத்தும் இயற்கை முறையில் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களே. ஆகையால் இவற்றை பயன்படுத்தினால் எதிர்வினைகள் ஏற்படுமோ என்று அச்சப் பட வேண்டியது இல்லை. குளியலுக்கு தேவையான தைல வகைகள் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன. நோய்களுக்கு ஏற்றவாறு தைல வகைகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் சுகன்யா.
Average Rating