கோடைகால பிரச்னையை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கொடை வெயிலால் உடல் உஷ்ணம் அதிகரிப்பு, காய்ச்சல், நீர்சத்து குறைந்துபோதல், உடல் எரிச்சல், மயக்கம், சிறுநீர் தாரையில் எரிச்சல், வயிற்றுபோக்கு, மலச்சிக்கல் போன்றவை உண்டாகும். ரோஜா, திருநீற்று பச்சிலை விதை, இசப்கோல் விதை ஆகியவற்றை பயன்படுத்தி இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்வது குறித்து பார்க்கலாம்.
திருநீற்று பச்சையை விதைகளை 3 மணி நேரம் ஊறவைத்தால் ஜவ்வரிசி போன்று மாறும். இது உள் உறுப்புகளில் உஷ்ணத்தை குறைக்கும். இசப்கோல் விதை மலச்சிக்கலை போக்க கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. ரோஜா புண்களை ஆற்றும். வயிறு எரிச்சலை போக்கும். உடல் குளிர்ச்சி அடையும்.
திருநீற்று பச்சிலை விதைகளை பயன்படுத்தி சிறுநீர் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: திருநீற்று பச்சிலை விதைகள், ரோஜா, பால், கற்கண்டு பொடி.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திருநீற்று பச்சிலை விதைகளை வாங்கி கால் ஸ்பூன் எடுக்கவும். இதை சுத்தப்படுத்தி நீர்விட்டு ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் ரோஜா அல்லது மாதுளை சர்பத் எடுக்கவும். இதனுடன் ஊறவைத்த திருநீற்று பச்சிலை விதைகள் ஒரு ஸ்பூன் போடவும். இதில், சிறிது கற்கண்டு பொடி, ரோஜா பூவின் இதழ்கள், குளிர்ந்த பால் சேர்த்து கலந்து குடித்துவர கோடைகாலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் சரியாகும். சிறுநீரை தாராளமாக வெளியேற்றும். மலச்சிக்கல் சரியாகும். நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் குணமாகும்.
இசப்கோல் விதைகளை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். இசப்கோல் விதைகளை சுத்தப்படுத்தி தண்ணீரில் ஊறவைத்தால் ஜெல்லி மாதிரி வரும். இதில், ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் கற்கண்டு பொடி, காய்ச்சிய பால் சேர்த்து கலந்து குடித்துவர மலச்சிக்கல் சரியாகும். இசப்கோல் விதையுடன் உப்பு, தயிர் சேர்த்து சாப்பிட வயிற்றுபோக்கு குணமாகும். இசப்கோல் விதை வயிறு எரிச்சலை போக்கும் மருந்தாகிறது. இதனால், உடல் குளிர்ச்சி அடையும்.
ரோஜாவை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: ரோஜா பூக்கள், வெள்ளரி விதை, தேன், கற்கண்டு பொடி.
செய்முறை: ரோஜா பூவின் இதழ்களுடன் வெள்ளரி விதை, கற்கண்டு பொடி, தேன் விட்டு கலக்கவும். இதை மெல்லிய துணியால் மூடிவைத்து, 5 நாட்கள் ஊற வைக்கவும். இதை தினமும் கலந்து வைக்கவும். பின்னர் காலை உணவுக்கு பின்பு ஒரு ஸ்பூன் சாப்பிட வயிற்றுவலி குணமாகும். உடல் உஷ்ணம் குறையும். குடல் புண்கள் ஆறும். ரோஜா இதழ்களின் துவர்ப்பு தன்மை புண்களை ஆற்றும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். மலச்சிக்கலை சரிசெய்யும். கோடைகாலத்தில் ஏற்படும் உடல் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு கொத்துமல்லி சாறு மருந்தாகிறது. கை, பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் கொத்துமல்லி சாற்றை பூசும்போது எரிச்சல் அடங்கும்.
Average Rating