லிப்ஸ் ப்ளம்பர்! (மகளிர் பக்கம்)
வீட்டுக் குழாய்களை ரிப்பேர் செய்ய மட்டும்தான் ப்ளம்பரை அழைக்க வேண்டுமென்று யார் சொன்னது? இதோ, உதடுகளை சரி செய்ய… அழகுபடுத்த லிப் ப்ளம்பர் வந்தாச்சு! சில பெண்களுக்கு இயல்பாகவே கொஞ்சம் பப்ளியான, பெரிய அழகிய உதடுகள் இருக்கும். சிலருக்கு முற்றிலுமாக கோடு போட்டாற்போல் இருக்கும். இப்படியான பெண்களுக்குத் தான் இந்த லிப் ப்ளம்பர்! சின்ன வயதில் பெரும்பாலானவர்கள் இப்படிச் செய்திருப்போம். வாட்டர் பாட்டில் மூடியையோ அல்லது சோடா பாட்டில் மூடிகளையோ கொண்டு வாயை அடைப்போம். காற்றை உள்ளே இழுப்போம். அந்த மூடி அப்படியே பிடித்துக் கொள்ளும். இறுக்க இறுக்க இதழ்கள் மூடிக்குள் சிறைப்படும்.
கிட்டத்தட்ட அதே பாணிதான் லிப் ப்ளம்பர்! இப்படிச் செய்வதால் இதழ்கள் பெரிதாகி அதில் லிப்ஸ்டிக் தீட்டும்போது பார்க்க எடுப்பாக இருக்கும். முகத்தை இன்னும் அழகாகக் காட்டும். ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இதில் ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. ஒருவகையான அழுத்தம் கொடுப்பதால் கருப்பு நிறம் மறைந்து புது ரத்தம் பாய்ந்து பிங்க் நிற உதடுகளும் கிடைக்கிறது. கோவைக்கனி இதழ், ஆரஞ்சு சுளைகள் போன்ற உதடுகள்… என கவிதைகளில் குறிப்பிடப்படும் இதழ்கள் நமக்கு சொந்தமாகின்றன. ஓகே. லிப்ஸ் ப்ளம்பரை பயன்படுத்துவதால் ஏதேனும் ஆபத்துகள் வருமா?
கேள்வியை காஸ்மட்டாலஜிஸ்ட் கீதா அஷோக் (Aroma Therapist) முன்பு வைத்தோம். “இதுல நிரந்தரமான ப்ளம்பரும் இருக்கு, தற்காலிகமான ப்ளம்பரும் இருக்கு. பொதுவா அழகுக்காக நாம பயன்படுத்தற பொருட்கள்ல நிச்சயம் ஒரு சில ஆபத்துகள் இருக்கத்தான் செய்யும். லிப் ப்ளம்பர்ல கிட்டத்தட்ட சாதாரணமான உதட்டை பெரிதாக்க – அதாவது வீங்கும்படி செய்யறோம். இதனால சிலருக்கு வலி, சிலருக்கு தடிப்புகள் வரலாம். ஒரு சிலர் பெரிதாக்க அதிக நேரம் இந்த ப்ளம்பரை பயன்படுத்துவாங்க. இதனால எதிர்பார்த்ததை விட உதடுகள் இன்னும் பெரிதாகி பார்க்க அடிபட்டு காயம் ஏற்பட்ட மாதிரி தெரியும்.
ஆனா, இது மாதிரியான தற்காலிக கேட்ஜெட்ஸால பெரிய ஆபத்து இல்லை. சிலர் ட்ரீட்மென்ட் மூலமா நிரந்தரமா செய்துக்கறாங்க இல்லையா… அதுலதான் ஆபத்துகள் அதிகம். இதை தெர்மல் ஃபில்லர்னு சொல்லுவோம். கொலாஜனை ஊசி மூலமா செலுத்தி செய்துக்கற சிகிச்சை. இது உதட்டுல இருக்கிற சுருக்கங்களை எடுக்கும். குழந்தைகளுக்கு இருக்கிற மாதிரி இதழ்களைக் கொண்டுவரும். இந்த ஆபரேஷனை அனுபவம் இல்லாதவங்ககிட்ட செய்தா வீக்கம், காயம் ஏற்படும். முக்கியமான விஷயம் கொலாஜனை ஒருமுறை செலுத்திட்டா திரும்ப எடுக்கறது கஷ்டம்.
உதடுகளோட நான்கு பக்கமும் கொலாஜனை செலுத்தறப்ப தப்பான திசுக்கள்ல ஊசியை குத்திட்டா ரத்தப் போக்கு ஏற்படும். இதை நிறுத்தக் கூட முடியாது. சிலருக்கு அளவுக்கு அதிகமா வீக்கம் உண்டாகி பழைய இதழ்களே தேவலையோனு நொந்து போக வைச்சுடும். இப்படித்தான் ஹாலிவுட் நடிகையான கைலி ஜென்னர் மாட்டினாங்க. ஏஞ்சலினா ஜோலி மாதிரி சிலருக்கு சக்ஸஸ் ஆகலாம். சிலருக்கு பெரிய பிரச்னைகளையே உருவாக்கலாம். இந்த மாதிரியான உதட்டு ஆபரேஷனைத்தான் மறைந்த ஸ்ரீதேவியும் செய்துக்கிட்டாங்க. சருமத்துல எந்தவித நிரந்தர மாற்றம்னாலும் பல தடவை யோசிச்சு முடிவு செய்யுங்க…” என்கிறார் கீதா அஷோக்.
Average Rating