வீக்கம், வலியை போக்கும் வாகை!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாகையின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் மூலிகை வாகை. நிழல் தரும் மரமான இது வெண்ணிற பூக்களை உடையது. பூஞ்சை காளான், நோய் கிருமிகளை அழிக்க கூடியது. சர்க்கரை நோயை தணிக்கவல்லது. பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. தோல்நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. சர்க்கரை நோய், வயிற்று கோளாறுக்கு மருந்தாக விளங்குகிறது. இலை, பூக்கள், பட்டை என இம்மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாகிறது.
வாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்று வலி, வெள்ளைப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வாகை பூக்கள், தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வாகை பூக்கள், மொட்டுகளை எடுத்து நீர்விட்டு வேக வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்துவர வயிற்றுவலி, வயிற்றுபோக்கு சரியாகும். வெள்ளைப்போக்கு குணமாகும். உள் உறுப்புகளுக்கு பலம் தருவதாக அமைகிறது.பல்வேறு நன்மைகளை கொண்ட வாகை, நுரையீரல் கோளாறு, ஆஸ்மா பிரச்னையை தீர்க்கும். தொழுநோய்க்கு அற்புதமான மருந்தாகிறது.
வாகை இலையை பயன்படுத்தி கைகால், மூட்டுகளில் வலி, வீக்கத்தை சரிசெய்யும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வாகை இலை, விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் விடவும். இதில், வாகையின் துளிர் இலைகளை போட்டு வதக்கவும். ஆறவைத்து இளம் சூடாக மேல் பற்றாக கட்டி வைத்தால் கைகால் மற்றும் மூட்டு வீக்கம், வலி சரியாகும். யானைக்கால், விரைவீக்கத்துக்கும் இது மருந்தாகிறது. சாலையோரங்களில் நிழல்தரும் அற்புதமான மரமாக வாகை விளங்குகிறது. இதன் இலைகள் வாத நோய்களை குணப்படுத்துகிறது. இதன் விதை, மொட்டுகளை பயன்படுத்தி ஆறாத புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், வாகை மரத்தின் காய். செய்முறை: பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். வாகை மரத்தின் காய்களை உடைக்கும்போது கிடைக்கும் விதைகள், மொட்டுகளை எண்ணெய்யுடன் சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி எடுக்கவும். இதை வடிகட்டி ஆறவைத்து பூசிவர நாள்பட்ட புண்கள் வெகுவிரைவில் குணமாகும். வீக்கம் வற்றும்.வீக்கத்தை கரைக்கும் தன்மை கொண்டது வாகை விதைகள். இலைகள் தோல்நோய்களுக்கு மேற்பற்றாக விளங்குகிறது. வாகையின் பூக்கள் நெஞ்சக சளிக்கு மருந்தாகிறது. கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும் வாகையை பயன்படுத்தி நலம் பெறலாம்.
கோடை வெயிலினால் ஏற்படும் உடல் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். கொளுத்துகின்ற வெயில் தோலை கருமையாக்கிறது. உள் உறுப்புகளில் உஷ்ணம் ஏற்பட்டு சிறுநீர்தாரையில் எரிச்சல், குடலில் எரிச்சல், கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு நுங்கு அற்புதமான மருந்தாகிறது.நுங்குவை நசுக்கி எரிச்சல் கண்ட இடத்தில், கருமை ஏற்பட்ட இடத்தில் பூசுவதாலும், இளம் தேங்காயை அரைத்து மேல்பற்றாக போடும்போதும் கருமை மாறும், எரிச்சல் அடங்கும். கோடைகாலத்தில் இளநீர், நுங்குவை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் எரிச்சல் இல்லாமல் போகும்.
Average Rating