மது மீதான ஆவலை குறைக்கும் மிளகாய் செடி!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மிளகாயின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்டது மிளகாய். இதன் காரத்தன்மை உள் உறுப்புகள், ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. பசியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. வலியை குறைக்க கூடியதாக அமைகிறது.
மிளகாய் பழத்தை பயன்படுத்தி பசியை தூண்டும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மிளகாய் பழம், புளி, உப்பு, வெல்லம். செய்முறை: புளி கரைசலுடன் மிளகாய் பழம், சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். இந்த மிளாகாய் பழத்துடன் வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் நெய் விடவும். நெய் உருகியதும் அரைத்த மிளகாய் கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் பசியை தூண்டும். இதை அதிகளவில் சாப்பிட கூடாது. அதிகபட்சமாக ஒரு ஸ்பூன் மட்டுமே எடுக்கவும்.மிளகாய் இந்திய உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ, பி, சி, கே, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டது. மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. வீக்கத்தை வற்ற செய்கிறது. சாப்பிட்ட உணவை செரிமானம் செய்ய உதவி செய்கிறது.
மிளகாய் செடியை பயன்படுத்தி, மது மீதான ஆவலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மிளகாய் செடி, லவங்கப்பட்டை, பனங்கற்கண்டு.
செய்முறை: மிளகாய் செடியின் இலை, பூக்கள், தண்டு ஆகியவை ஒரு கைப்பிடி எடுக்கவும். இதனுடன் ஒரு துண்டு லவங்கப்பட்டை, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் குடித்துவர மது மீதான ஆவல் குறையும். உணவாக மட்டுமின்றி மருந்தாக பயன்படும் மிளகாய் செடியின் இலைகள் குடி மீதான ஆவலை குறைக்க கூடியதாக விளங்குகிறது.
மிளகாயை பயன்படுத்தி இடுப்பு வலி, கைகால் குடைச்சல், முதுகு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மிளகாய் வற்றல், விளக்கெண்ணெய், மிளகு, பூண்டு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில், 25 மில்லி அளவுக்கு விளக்கெண்ணெய் எடுக்கவும். இதில், பாதியளவு மிளகாய் வற்றலை துண்டுகளாக்கி போடவும். 5 மிளகு, 2 பல் பூண்டு தட்டி சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை மேல்பூச்சாக போடும்போது இடுப்பு வலி, முதுகு வலி, கைகால் வலி சரியாகும். இந்த தைலம் தயாரிக்கும்போது பூண்டு, மிளகாய், மிளகு ஆகியவை குறைவாகவே சேர்க்க வேண்டும். இல்லையென்றால் எரிச்சலை ஏற்படுத்தும்.மிளகாய் வலி நிவாரணியாக பயன்படுகிறது. உணவுக்கு சுவை சேர்க்கிறது. செரிமானத்தை சீர் செய்கிறது. பசியை தூண்டுகிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. தீராத தலைவலிக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு கொடி பசலை மருந்தாகிறது. கொடி பசலை கீரையை சமைத்து உண்ணுவதால் நரம்புகள் பலம் பெறுகிறது. கொடி பசலை கீரையை அரைத்து நெற்றி பற்றாக பொடும்போது தலைவலி வெகுவிரைவில் தணிந்து போகும்.
Average Rating