அக்கியை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அக்கி கொப்புளங்களை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு பருப்புக்கீரை, கொத்துமல்லி, சீரகம், பூங்காவி, ஊமத்தன் இலை போன்றவை மருந்தாகிறது. மிக கடுமையான நோயாக கருதப்படுவது அக்கி. இதனால், தோலில் அரிப்பு, வீக்கம், திட்டு திட்டான கொப்புளங்கள் ஏற்படும். இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல், தோலில் எரிச்சல், வலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். உதட்டு பகுதியில் பற்றிக்கொண்டு துன்புறுத்தும். நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும். அக்கி நோய்க்கான மருத்துவத்தை காணலாம்.
பருப்புக்கீரை, கொத்துமல்லி இலைகளை கொண்டு அக்கியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய், சீரகம், பருப்பு கீரை, கொத்துமல்லி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் எடுக்கவும். இது உருகியதும் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். இதனுடன் 2 ஸ்பூன் பருப்பு கீரை பசை, ஒருபிடி கொத்துமல்லி இலைகளை சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர அக்கியின் தாக்கம் தணியும். காய்ச்சல் சரியாகும். அக்கி புண்கள், கொப்புளங்கள் குணமாகும். நரம்புகளில் ஏற்படும் வலி குறையும்.
பூங்காவியை பயன்படுத்தி அக்கி புண்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூங்காவி, பன்னீர்.செய்முறை: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூங்காவியுடன், பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து அக்கி கொப்புளங்களுக்கு மேல் பூச வேண்டும். சுமார் 3 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்துவர அக்கி கொப்புளங்கள் சரியாகும். அக்கியால் ஏற்படும் எரிச்சல், வலி சரியாகும். செம்மண் வகையை சேர்ந்த பூங்காவி பல்வேறு மருத்துவ குணங்களை உடையது.
ஊமத்தன் இலையை பயன்படுத்தி அக்கிக்கான மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய், ஊமத்தன் இலை.
செய்முறை: பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் எடுக்கவும். இது உறுகியதும் ஊமத்தன் இலையை போட்டு லேசாக வதக்கவும். இலைகளை இளஞ்சூடாக எடுத்து அக்கி புண்கள் மீது போட்டுவர அக்கி புண்கள் சரியாகும். ஊமத்தன் இலையை எக்காரணத்தை கொண்டும் உள் மருந்தாக எடுத்துக்கொள்ள கூடாது. வறட்டு இருமலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடை, குளிர் காலத்திலும் வறட்டு இருமல் ஏற்படும். இப்பிரச்னைக்கு சீரகம் மருந்தாகிறது. அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் சீரகத்துடன் சம அளவு சர்க்கரை சேர்த்து பொடித்து வைத்துகொண்டு இருமல் இருக்கும்போது ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர வறட்டு இருமல் சரியாகும்.
Average Rating