ரத்த அழுத்தத்தை குறைக்கும் தேன்பழம்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தேன் பழம் என்று அழைக்கப்படும் ஜமைக்கன் செர்ரியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். சாலையோரங்களில் காணப்படும் குறு மரம் ஜமைக்கன் செர்ரி. இனிமையான சுவையை கொண்ட பழங்களை உடையது. இது கோடை காலத்தில் பழுத்து பயன் தரக்கூடியது. தேன்பழம் மரத்தின் இலைகள், பூக்கள், கனிகள், வேர், பட்டை என அனைத்தும் மருந்தாகிறது.
இதன் பழங்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. இதில், வைட்டமின் சி, இரும்பு சத்து, கால்சியம், நீர்ச்சத்து ஆகியவை உள்ளன. தேன் பழங்கள் செர்ரி போன்று சிவந்த நிறத்தில் இருக்கும். இந்த பழம் சாப்பிடும்போது தேனை போல இனிக்கும். இதை பயன்படுத்தி உயர் ரத்தத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேன் பழம், சீரகம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேன் பழங்கள் 20 வரை எடுத்து நசுக்கி போடவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர உயர் ரத்த அழுத்தம் குறையும். ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலம் குறையும். இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
தேன் பழத்தின் இலைகளை பயன்படுத்தி வயிற்று வலி, மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தேன் பழத்தின் இலைகள், சீரகம், நெய்.செய்முறை: தேன் பழத்தின் இலைகளை அரைத்து சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் சிறிது சீரகம் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி நெய் சேர்க்கவும். இதை குடித்துவர தசை பிடிப்பு, குடல் இறுக்கம், வயிற்று வலி குணமாகும். மூட்டுவலி இருப்பவர்கள் காலை, மாலை குடித்துவர மூட்டுவலி சரியாகும்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தேன் பழத்தின் இலைகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகையாக விளங்குகிறது.
தேன் பழத்தின் இலைகளை பயன்படுத்தி தசை, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்துக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேன் பழத்தின் இலைகள், விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் தேன் பழத்தின் இலை பசை சேர்த்து லேசாக வதக்கவும். இதை இளம் சூடாக எடுத்து மேல்பற்றாக போட்டு சிறிது நேரம் கழித்து கழுவினால் தசை, மூட்டுகளில் ஏற்படும் வலி குணமாகும்.
தேன் பழத்தின் இலைகளை நீரில் இட்டு காய்ச்சி குடித்துவர வயிற்று வலி சரியாகிறது. இது தலைவலி, காய்ச்சலுக்கு அற்புதமான மருந்தாகிறது. எளிதாக கிடைக்கும் இந்த மூலிகையை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இளநரையை தடுக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், நல்லெண்ணெய். செய்முறை: நெல்லி சாறுடன், நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுக்கவும். இதை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர இளநரை மறையும்.
Average Rating