வெள்ளைப்போக்கை குணமாக்கும் நெல்லிக்காய்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய மூலிகைகள், வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் உணவுக்கு பயன்படும் பொருட்களை கொண்டு பாதுகாப்பும் பக்கவிளைவும் இல்லாத மருத்துவத்தால் பயன்பெற்று வருகிறோம். அந்த வரிசையில் இன்று நெல்லிக்காயின் மகத்துவம் மற்றும் மருத்துவம் குறித்து அறிந்து கொள்ளலாம். நெல்லி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்தும் அருமருந்தாகிறது. மேலும் நெல்லிக்காய் எலும்புகளை பலப்படுத்தி அஜீரண கோளாறுகளை போக்கி செரிமானத்தை தூண்டக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. கல்லீரலை பலப்படுத்துகிறது. ஆயுளை அதிகரிக்கக்கூடியதாகவும் நெல்லி விளங்குகிறது. மொத்தத்தில் ஆரோக்கிய உணவாக பயன்படுகிறது. பதப்படுத்தி வைத்து கொண்டும் பயன்படுத்தலாம். இயற்கையின் கொடையான நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோயின்றி வாழமுடியும்.
நெல்லிக்காய் அபரிமிதமான சத்துக்களை உள்ளடக்கியது. குறிப்பாக வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டது. பசியை தூண்டக்கூடியது. எளிதில் கிடைக்கக்கூடியது. பல்வேறு பயன்களை தரும் இந்த நெல்லிக்கனியின் பசியை தூண்ட உதவும் மருத்துவம் குறித்து தெரிந்து கொள்வோம். இதற்கு தேவையான பொருட்கள்: முழுநெல்லிக்காய், நல்லெண்ணெய், கடுகு, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கடுகுபொடி, காய்ந்தமிளகாய், உப்பு. செய்முறை: தேவையான அளவு நெல்லிக்காய் எடுத்து கழுவி சுத்தம் செய்தபின் அதனை வேகவைத்து கொட்டை நீக்கி அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் அதில் கடுகு பெருங்காயம் போட்டு வெடித்ததும் நெல்லி விழுது சேர்த்து கிளறவும். அதில் மஞ்சள், வெந்தயம், கடுகு, மிளகாய் பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். நெல்லிக்காயின் ஈரப்பசை போய் எண்ணெய் வெளியேறும் பதம் சரியானது.
இதை ஆறவைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். தினமும் இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டுவர பசியை தூண்டும். செரிமானக்கோளாறுகளை போக்கும். மேலும் இது கல்லீரலை பலப்படுத்தும் சிறந்த மருந்தாகும். இதனை இனிப்பு சேர்த்தும் செய்யலாம். அதற்கு தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், வெல்லம், சுக்குபொடி, ஜாதிக்காய். செய்முறை: நெல்லிக்காய்களை சுத்தம் செய்து வேகவைத்து கொட்டை நீக்கி எடுத்து அரைத்தோ அல்லது அப்படியே துண்டுகளாகவோ பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை மிதமான தீயில் வைத்து சிறிது நீர் சேர்த்து கரைந்த பின் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். மீண்டும் ஒரு பாத்திரத்தில் இந்த வெல்லத்தை ஊற்றி பாகுபதம் வரும்போது அதில் வேகவைத்த நெல்லித்துண்டுகள் அல்லது அரைத்த விழுதை போட்டு கிளறவும். அதில் சுக்குபொடி, ஜாதிக்காய் பொடி, சேர்த்து கிளறி ஆறவைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தலாம்.
இதனை அப்படியே விழுதாகவோ அல்லது சிறிது தண்ணீரில் கலந்து ஜூஸாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கவல்லது. நெல்லிக்காய் ஊறுகாய் தயாரித்தும் பயன்படுத்தலாம். தேனில் ஊறவைத்து தேன்நெல்லிக்காய்களாகவும் குழந்தைகளுக்கு கொடுத்துவரலாம். உடனடித்தேவையாக நெல்லிக்காயை பயன்படுத்த இதனை வேகவைத்து மசித்து கெட்டி தயிருடன் கலந்து அதில் உப்பு சேர்த்து கடுகு, உளுந்து, பச்சை அல்லது காய்ந்த மிளகாய் தாளித்து பச்சடியாக உணவுடன் சேர்த்து கொள்ளலாம். இதனால் வயிற்று போக்கு கட்டுப்படும். வெள்ளைப்போக்கையும் இது கட்டுப்படுத்துகிறது. இத்தனை பயன்களை உள்ளடக்கிய நெல்லிக்காயை அன்றாடம் உணவில் சேர்த்து எளிய முறையில் மிகுந்த பயன் பெறுவோம்.அவல் மருத்துவத்தின் மூலம் வயிற்றுப்போக்கு மற்றும் நாட்பட்ட கழிச்சலை குணப்படுத்த முடியும். அவலை கழுவி நீர் விட்டு பச்சையாகவோ அல்லது சிறிது வேகவைத்தோ பயன்படுத்தலாம். இந்த அவலுடன் உப்பு, புளிப்பில்லாத கெட்டி தயிர்சேர்த்து சாப்பிட வயிற்றுவலி மற்றும் சீதக்கழிச்சல் உடனடியாக கட்டுப்படும்.
Average Rating