கோடைக்கு ஒரு குடை!! (மகளிர் பக்கம்)
கோடைக் காலம், சூரியன் தன் வெப்பத்தால் முழுமையாக சூழ்ந்து இருக்கும் காலம். மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தன் முழு சக்தியையும் நம் மேல் பயன்படுத்தும் காலம் என்று குறிப்பிடலாம். கோடை என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது விடுமுறை. குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கும், நேரம் கழிப்பதற்கும் மிகவும் உகந்தது.
எனவே கோடை எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்ப்புடனே காத்திருப்போம். ஆனால் கோடைக் காலத்தில்தான் நாம் அனைவரும் பல உடல் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கோடையில் ஏற்படும் உடல் பிரச்னைகளிலிருந்து நம்மை காத்து கோடையை சந்தோஷமாக வரவேற்கலாம் என்று விளக்கம் அளிக்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் இந்திரா தேவி.
‘‘கோடைக் காலத்தில் பொதுவாக பெண்கள் பல உடல் பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். பருவகால மாற்றத்தினால் கோடை அதிக வெப்பத்துடனே காணப்படும். இதனாலேயே உடலில் பல பிரச்னைகள் ஏற்படுவதுண்டு.சருமப் பிரச்னைகள், வயிறு உபாதைகள், உடல் சூடு, தோல் நோய்கள், முடி உதிர்தல், யோனி எரிச்சல், வெப்பத்தடிப்புகள், உடல் மற்றும் தோல் வறட்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிக்னி தடிப்புகள்… என பிரச்னைகளை பெண்கள் வெயில் காலத்தில் சந்திக்க நேரிடும். இதை எதிர் கொள்ள இயற்கை வழிமுறைகளையும் உணவுகளையும் பயன்படுத்தி நம்மைக் காத்துக் கொள்வது அவசியம்.
உடல் வறட்சி
கோடையில் உடல் மற்றும் சரும வறட்சிப் பிரச்னை நம்மை அதிகளவில் பாதிக்கும். நம் உடல் 80% நீராலானது. கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும். இதன் காரணமாகவே உடல் வறட்சி ஏற்படும். உடல் எப்போதும் போல் அல்லாமல் சற்று தளர்ந்த நிலையிலிருக்கும். உடலில் வெப்பம் அதிகரித்து சூடான நிலையில் இருக்கும் போது உடலில் கழிவுப்பொருட்களின் தேக்கம் அதிகரிக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை நோய் தொற்று உருவாக வாய்ப்பும் உள்ளது. இதைத்தடுக்க தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் பருகினால் மட்டுமே உடலின் நீர் வறட்சியிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
பிக்னி தடிப்புகள்
கோடையில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னை பிக்னி தடிப்புகள். இறுக்கமான ஆடைகள் அணிவதால் அதிக வியர்வை வெளியாகும் போது, தொடைப்பகுதிகளில் பிக்னி தடிப்புகள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பருத்தி, காட்டன் ஆடைகளை பயன்படுத்தலாம். அதோடு ஆடைகளுக்கு அதிக ரசாயனம் கலந்த சோப்பினை தவிர்ப்பது நல்லது. ரசாயனம் கொண்ட சோப்பினை பயன்
படுத்தும் போது அதில் உள்ள ரசாயனப் பொருட்கள் சருமத்தில் படும் போது அரிப்பு ஏற்படும்.
யோனி எரிச்சல்
கோடைக்காலம் என்றாலே குளிர்ந்த பொருட்களை நம்மை அறியாமல் நம்முடைய உடல் அதனை நாடும். கோடை வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாக்க குளிர்ந்த உணவுகளை உண்பதே உடலுக்கு நல்லது. காபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது உடலில் உள்ள நீர்சத்தினை குறைப்பதால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுத்தும். காபி, டீயினை தவிர்த்து, மோர் மற்றும் பழச்சாறுகளை குடித்து வந்தால் எரிச்சல் வராமல் தடுக்க முடியும்.
வெப்பத் தடிப்புகள்
கோடை காலத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் வெப்பத் தடிப்பு ஏற்படுவது இயற்கை. காலை, மாலை இருவேளையும் குளிக்க வேண்டும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பின்பற்றுவது அவசியம்.
தோல் நோய்கள்
இன்றைய நவீன உலகில் நாம் வேலை செய்யும் அலுவலகங்கள், உணவகங்கள் ஏன் எல்லாருடைய வீட்டிலும் ஏ.சி பொருத்தப்பட்டுள்ளது. ஏ.சி இல்லாத வீடுகளே இப்போது இல்லைன்னுதான் சொல்லணும். ஏ.சி. அறைக்குள் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் வெயிலில் செல்லும்போது சருமத்தில் இருந்து வெளியாகும் வியர்வை காரணமாக சரும பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க கோடைக் காலத்தில் ஜீன்ஸ் மற்றும் உடல்களை இறுக்கப்பிடிக்கும் ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தோல் நோய்கள் வராமல்
பாதுகாக்கலாம்.
சருமப் பிரச்னை
கோடைக் காலத்தில் முக்கியமாக அலுவலகம் செல்லும் பெண்கள் சருமப் பிரச்னைகளை தவிர்க்க முடியாது. சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் முகத்தில் படும்போது முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையங்கள், ேடனிங் ஏற்படும். இந்தப் பிரச்னையை இயற்கை முறையில் நாம் சமாளிக்கலாம். தர்பூசணி, மாதுளை போன்ற பழங்களை மிக்சியில் திக்கான பேஸ்ட் போல அரைத்து முகத்தில் தடவி சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கழுவினால் டேனிங் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
உருளைக்கிழங்கு, வெள்ளரி போன்றவற்றை மிக்சியில் அரைத்து முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவினால் கரும்புள்ளி மற்றும் கருவளையங்களை தடுக்கலாம். அலுவலகம் செல்லும் பெண்கள் தினமும் இரண்டு தக்காளி மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து அதிலொரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அரைத்து முகத்திலும் கழுத்திலும் கை மற்றும் கால்களிலும் தடவினால் சருமம் பொலிவடையும்.
சந்தனக் கட்டையை பன்னீர் சேர்த்து உரைக்கவும். அதனை முகத்தில் தடவினால் சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.
முடி உதிர்தல் பிரச்னைகோடைக்காலங்களில் அனைவருக்குமே முடி உதிர்வு பிரச்னை இருக்கும். வெயிலின் தாக்கத்தால், முடிகள் வறண்டு உடைந்து போகும் வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க, தலைக்கு சிறிதளவு எண்ணை தேய்ப்பது நல்லது. இன்றைய மாடர்ன் பெண்கள் தலையில் எண்ணை தேய்த்து குளிப்பது என்றாலே முகம் சுளிக்கின்றனர். தலையில் எண்ணை தேய்த்து குளிப்பதால், உடல் சூட்டைக் குறைப்பது மட்டும் இல்லாமல் முடி உதிர்தல் மற்றும் சோரியாசிஸ் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
கரிசலாங்கண்ணி பவுடர், மருதாணிப் பவுடர், நெல்லி பவுடர் இவைகளை பாலில் கலந்து தேய்த்து குளிப்பதாலும், தலைமுடி உதிர்வதை தடுக்க முடியும்.
கோடைக்கால உணவு முறைகள்
கோடைக் காலத்தில் அதிக அளவு டீஹைட்ரேஷன் ஏற்படுவது இயற்கை. அந்த சமயத்தில் அதிக அளவு நீர்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது. நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரி மற்றும் கிர்ணி பழங்களை அதிகமாக சாப்பிடலாம். இதில் 90% நீர்ச்
சத்து உள்ளது. அதோடு விட்டமின் A மற்றும் E உள்ளதால் கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் வறட்சியைப் போக்குகிறது. இதிலுள்ள பொட்டாசியம் (potassium) மற்றும் சில முக்கிய தாதுக்கள் ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுகிறது.
சன்ஸ்ட்ரோக், வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளிலிருந்து காக்கிறது.கோடைக்காலம் முடியும் வரை தர்பூசணி மற்றும் நீர்சத்துள்ள பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். கோடை வெயிலில் எங்கு சென்றாலும் கையில் ஒரு பாட்டில் தண்ணீருடன் செல்வது அவசியம். பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் ஏரியேடெட் குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையாக உள்ள பழச்சாறுகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது. உதாரணமாக எலுமிச்சை, சாத்துக்குடி, தர்பூசணி, கிர்ணி, கற்றாழை, மாதுளை போன்ற பழங்களின் சாறுகளை இயற்கை முறையில் தயாரித்து உட்கொள்ள வேண்டும்.
தண்ணீரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குடிக்காமல், மண்பானையில் வைத்து குடிக்கலாம். இது உடல் சூட்டை தணிப்பது மட்டும் இல்லாமல், கோடையிலும் நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வீட்டுக்கொரு மண்பானை அவசியம். வெறும் தண்ணீரை மட்டும் குடிக்காமல், அதில் சப்ஜா விதை மற்றும் வெட்டிவேர் சேர்த்து குடித்தால் உடலில் கழிவுகளை அகற்றி உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். கேழ்வரகு கூழ், தயிர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து குடிப்பதால், உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும். உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
ஒரு சிலருக்கு உடல் எப்போதுமே சூடான நிலையிலேயே இருக்கும். உடலுக்கு சீரான வெப்பத்தை வழங்குவது நம் உண்ணும் உணவுப் பொருட்கள். அதை நாம் முறையாக கடைப்பிடிக்காமல் இருந்தால், பல நோய்களுக்கான வாசற்படியாகவே அமையும். இதைத் தவிர்க்க மோர், தயிர் மற்றும் சிறிய வெங்காயம், மதிய உணவு வேளையில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தினமும் இரண்டு நெல்லிக்கனி, வெள்ளரி, கேரட் உணவில் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கோடையில் வெப்பத்தை எதிர்க்கவும், உடல் சூட்டை குறைக்கவும் மிக முக்கியமான ஒன்று இளநீர். அதனை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள் . பெண்களே இனி கோடையைக் கண்டு அஞ்ச வேண்டாம். கோடை விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள். கோடை வெயிலை தடையாக பார்க்காமல் இந்த குறிப்புகளை குடையாக வைத்துகொண்டு கோடையை கொண்டாடுங்கள்.
Average Rating