வந்தாச்சு மருத்துவ டாட்டூ!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 22 Second

டாட்டூ குத்திக்கொள்வது இளைய தலைமுறையினரிடம் ஃபேஷனாகி உள்ளது. தங்களுக்கு பிடித்த வாக்கியம், விரும்பும் நபர்களின் பெயர்கள் அல்லது தங்களின் குணாதிசயங்களை குறிக்கும் படங்கள் மற்றும் உருவங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குத்திக் கொள்கிறார்கள். நம் தாத்தா, பாட்டி பச்சைக் குத்தியது தான் இப்போது மார்டர்ன் உலகில் டாட்டூவாக மாறியுள்ளது.

சென்னை அண்ணாநகரில் ‘ஸ்டுடியோ ஜேட்’ என்ற பெயரில் கடந்த 15 வருடமாக டாட்டூ ஸ்டுடியோவை இயக்கி வருகிறார் சுஜாதா. இவர் டாட்டூவை தாண்டி அடுத்த கட்டமாக மருத்துவ டாட்டூவில் கால் தடம் பதித்துள்ளார். இதன் மூலம் பலரின் வாழ்வில் மீண்டும் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தி வருகிறார்.

‘‘அப்பா சுரங்க பொறியாளராக வேலைப் பார்த்ததால் இந்தியா முழுக்க என்னுடைய பள்ளிக் காலங்கள் பல ஊர்களில் கழிந்தது. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடிச்ச கையோடு, சுற்றுலா மற்றும் பயணம் குறித்து கொடைக்கானலில் படிக்கச் சென்றேன். ஆனால் என்னால் அங்கு தொடர்ந்து படிக்க முடியாத காரணத்தால் அதே பயிற்சியை சென்னையில் படிச்சேன்.

என்னவோ இது எனக்கான துறை இல்லை என்று தோன்றவே, அனிமேஷன் படிச்சிட்டு, 3டி அனிமேட்டராக வேலைப் பார்த்தேன். அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்திட்டு டாக்குமென்டரி படங்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது என்று இருந்தேன் விளம்பர துறையிலும் வேலைப்பார்த்தேன். இந்த சமயத்தில் தான் என் நண்பனை பல வருடம் கழித்து சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது.

அவன் டாட்டூ ஸ்டுடியோ ஒன்றை நிர்வகித்து வருவதாக சொன்னான். எனக்கு அது வித்தியாசமாக இருந்தது. அதனால் அவனிடமே ஒன்றரை வருடம் டாட்டூ குறித்து பயிற்சி எடுத்தேன். நம்மாளும் மற்றவங்களுக்கு டாட்டூ போட முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் முழுமூச்சாக டாட்டூ கலைஞராக களத்தில் இறங்கினேன்’’ என்றவர் அதன் பிறகு நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு டாட்டூ போட ஆரம்பித்துள்ளார்.

‘‘நண்பர்களை தொடர்ந்து வாடிக்கையாளர்களும் டாட்டூ போட என்னிடம் வர ஆரம்பித்தனர். அதனால் எனக்கான ஒரு டாட்டூ ஸ்டுடியோ அமைச்சேன். இது தவிர பெங்களூர், பாண்டிச்சேரி, ஐதராபாத் என பல ஊர்களில் இருந்தும் டாட்டூ போடுவதற்கு அழைப்பு வருகிறது.

டாட்டூ குறித்து வர்க் ஷாப்பும் செய்து வருகிறேன். இப்படியாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டாட்டூ மட்டுமே போட்டு வந்த நான், இதன் அடுத்த கட்டமாக மெடிக்கல் டாட்டூ துறையில் என்னை இணைக்க ஆரம்பிச்சேன். அதற்கு காரணம் காஸ்மடிக் சர்ஜன் டாக்டர் கிருத்திகா ரவீந்திரன்.

என் நண்பர் ஒருவர் மூலமாக கிருத்திகாவின் அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவரின் ஒரு பேஷன்டுக்கு உதட்டில் வெண்குஷ்டம் பிரச்சனை இருந்தது. அதாவது உதட்டில் ஆங்காங்கே வெள்ளைத் தழும்பு இருக்கும்.

இதனால் அந்த பெண்ணிற்கு திருமண தடை ஏற்பட்டு வந்தது. அதை மறைக்க அவர் காஸ்மடிக் சர்ஜனின் ஆலோசனை பெற, அவர் என்னை அணுகி, அதை மறைக்க டாட்டூ செய்ய முடியுமான்னு கேட்டாங்க. முதலில் சரின்னு சொல்லிட்டேன். ஆனாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

என் மேல் என்னைவிட டாக்டரும் அந்த பெண்ணும் முழு நம்பிக்கை வைத்து இருந்தாங்க. உடனே அந்த பெண்ணை சந்தித்து பேசி அவளுக்கு உதட்டில் அந்த வெள்ளை தழும்பை டாட்டூ மூலம் மறைத்தேன். அது சக்சஸ் ஆச்சி. அந்த பெண்ணுக்கும் இப்ப கல்யாணமாகிடுச்சு. அதை தொடர்ந்து, மற்ெறாரு காஸ்மெட்டிக் சர்ஜன் அழைத்து அவரின் ேநாயாளிக்கு மார்பக காம்பினை டாட்டூ அமைக்க சொல்லி கேட்டார். மார்பக புற்றுநோய் காரணமாக மார்பகத்தை நீக்கிவிட்டதால், அவர் செயற்கை முறையில் மார்பகம் அமைச்சிட்டார்.

ஆனால் அதன் காம்பின் நிறத்தை அவரால் செய்ய முடியவில்லை. அதை நான் செய்து கொடுத்தேன். இதுவும் சக்சஸ் ஆச்சி. இதை தொடர்ந்து சரும நிபுணர்கள் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜன் எல்லாரும் என்னை அணுகினாங்க. இப்படித்தான் ஆரம்பிச்சது’’ என்றவர் மைக்ரோ பிக்மென்டேஷன், ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன், ஐபிரோ பிளேடிங் மற்றும் பர்மனென்ட் மேக்கப் எல்லாம் செய்து வருகிறார்.

‘‘இப்ப நான் செய்வது மைக்ரோ பிக்மென்டேஷன். பிக்மென்டேஷன் என்பது இங்க் தான். அதை நாம் சருமத்தில் உள்ள பிரச்னைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும். இவை எல்லாமே மருத்துவ ரீதியா செய்யக்கூடிய ஒரு வகையான டாட்டூ முறைகள். இதில் என்னுடைய சிறப்பு கலர் மேட்சிங். ஒவ்வொருவருக்கும் சரும நிறம் மாறுபடும். அவங்களின் நிறத்திற்கு ஏற்ப பிக்மென்டுகளை தேர்வு செய்து தருகிறேன். அது முகத்திலோ, உதட்டிலோ அல்லது கைகளில் என உடம்பில் எங்கிருந்தாலும் செய்ய முடியும்.

இது சாதாரண டாட்டூ மாதிரி தான். ஆனால் இதற்காக பயன்படுத்தப்படும் ஊசிகள், இயந்திரங்கள், இங்குகள் மாறுபடும். இவை எல்லாவற்றையும் நான் வெளிநாட்டில் இருந்து தான் வரவழைத்து இருக்கேன். காரணம் மிகவும் நுணுக்கமாக செய்யப்படும் டெக்னிக் என்பதால் அதிர்வு இருக்கக்கூடாது. இதில் மற்றொரு பரிமாணம் ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன். பெரும்பாலான ஆண்களுக்கு தலையில் முடி கொட்டி வழுக்கை ஏற்படும். முடி இல்லை என்ற காரணத்தால் அவர்கள் முழுமையாக மொட்டை அடித்துக் கொள்வார்கள்.

இந்த முறையால், அவர்கள் தலையில் முடி இருப்பது போல் தோற்றுவிக்கலாம். அதாவது மொட்டை அடிச்சு இரண்டு நாள் தலையில் முடி வளர்ந்தா எப்படி இருக்கும் அதே போல் தான் இருக்கும். ஐபிரோ பிளேடிங்… வழுக்கை தலையை நிரப்புவது போல் புருவங்களை நிரப்புவது. ஒரு சிலருக்கு புருவ முடி அடர்த்தியாக இருக்காது அல்லது ஆங்காங்கே திட்டு திட்டாக இருக்கும். இதனை சீர் செய்யலாம்.

புருவத்தினை அதே வில் வடிவத்தில் செய்வதால், பார்க்கும் போது வித்தியாசமே தெரியாது. பர்மனென்ட் மேக்கப்பில் கண்களுக்கு மேல் ஐலைனர் எப்போதும் இருக்கும் படி வரையலாம். சிலர் தங்களின் உதட்டின் நிறம் பிங்காகவோ அல்லது சிகப்பு நிறத்தில் மாற்ற வேண்டும் என்று கேட்பார்கள். அதையும் செய்யலாம்’’ என்றவர் இதற்காக சிறப்பு பயிற்சினை மேற்கொண்டுள்ளார்.

டாட்டூ வரைவது போல்தான் பிக்மென்டேஷன் முறை என்றாலும் அதனை போடும் விதம் மாறுபடும் என்ற சுஜாதா அதைப் பற்றி விவரித்தார். ‘‘டாட்டூ போடும் போது, அந்த இடத்தினை மறத்துப் போக செய்யமாட்ேடாம். காரணம் அந்த வலியை நம்மால் பொருத்துக் கொள்ள முடியும். ஆனால் தலையிலோ, புருவத்திலோ அல்லது கண் ரப்பைகளில் போடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வலி தெரியாமல் இருக்க மறுத்துப் போக வைத்துவிட்டு தான் செய்யணும். இங்குள்ள சருமம் மிகவும் மிருதுவானது என்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

பிக்மென்டேஷன் போட்ட பிறகு அது உடனே குணமாகாது. அதாவது புருவங்களை வரையும் போது, ஒரு வாரம் அதில் தண்ணீர் படாமல் நாங்க கொடுக்கும் கிரீமினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் தண்ணீர் கொண்டு கழுவவேண்டும். அதே போல் தலைமண்டையில் செய்யும் போது ஓரிரு நாட்கள் தண்ணீர் படாமல் வைத்துவிட்டு பிறகு ஜென்டில் வாஷ் செய்யணும். மைக்ரோ பிக்மென்டேஷன் உதட்டில் செய்யும் போது, தண்ணீரை தொட்டு ஒற்றி எடுக்கணும்.

இவை எல்லாம் குணமாக குறைந்தபட்சம் ஒரு மாதமாகும். அதுவரை இந்த கிரீம் மற்றும் நாங்க கொடுக்கும் இன்ஸ்ட்ரக்‌ஷனை பின்பற்றினால் போதும். மேலும் பிக்மென்டேஷன் எல்லாம் ஒரு முறை செய்திட முடியாது. குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை செய்யணும். அது அவர்கள் செய்து கொள்ளும் சிகிச்சை முறைகளுக்கு ஏற்ப மாறுபடும்’’ என்றார் சுஜாதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரீனாவின் ஃபிட்னெஸ் ரகசியம்!! (மகளிர் பக்கம்)
Next post மாதவிலக்கு கோளாறை போக்கும் மலைவேம்பு!! (மருத்துவம்)