மட்டக்களப்பு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பும் அரச அதிபரின் அதிரடியான இடமாற்றமும் சொல்லும் செய்திகள்!! (கட்டுரை)
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஒன்பது மாதகாலமாகக் கடமையாற்றிய திருமதி கலாமதி பத்மராஜா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிக்கின்றார். கிழக்கு மாகாண மேய்ச்சல் தரை விவகாரத்தில் அவரது பெயர் பரபரப்பாகப் பேசப்படும் பின்னணியில் இந்த அவசர இடமாற்றம், ஒரு அரசியல் பழிவாங்கலா? என்ற கேள்வி தமிழ் அரசியல் பரப்பில் எழுப்பப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பில் அண்மைக்காலத்தில் சிங்கள மக்களால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கும் இந்த திடீர் இடமாற்றத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகவே மட்டக்களப்பு தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். இந்தத் திடீர் இடமாற்றத்தின் பின்னர் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வியும் தமிழ் மக்களுக்கு அச்சம் தரும் வகையில் எழுகின்றது.
மட்டக்களப்பில் “மேய்ச்சல் தரை” என்றழைக்கப்படும் மயில்ந்தமடு – மாதவணை தமிழர் பிரதேசம் அண்மைக்காலத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னணியில் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டதால்தான் திருமதி கலாமதி பத்மராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இடம் மாற்றப்பட்டார் என்ற கருத்தே தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் இந்தப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பதை நேற்று சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள். இதன்போது, ஆளுநர் கடும் தொனியில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மக்களுடைய சந்தேகம் உண்மை என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றது.
இந்தச் சந்திப்பின் போது, அரச அதிபரின் திடீர் இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யத் தான் தயார் இல்லை என்று ஆளுநர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகின்றது. மேலும், வாழ்வாதாரம் இழந்த சிங்கள மக்களை தொழிலுக்காக அரசாங்கம் அழைத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாது. சிங்கள மக்கள் மட்டக்களப்பிற்கு வர முடியாது என்று உங்கள் அரச அதிபர் எப்படி கூற முடியும்?” என்றும் கடும் சீற்றத்துடன் கூட்டமைப்பினரைப் பார்த்து ஆளுநர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
கிழக்கு மாகாண சபையும் செயற்படாதிருக்கும் நிலையில், ஆளுநர் தனக்கிருக்கக்கூடிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, மட்டக்களப்பில் பரந்தளவில் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்பை முன்னெடுப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றாரா என்ற சந்தேகம் இதன்மூலம் எழுகின்றது.
மயில்ந்தமடு – மாதவணை பகுதியில் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்பால் உருவாகியிருந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காகவே மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இரண்டு தினங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்தார். இதன்போது மகாவலி அபிவிருத்தித் திட்ட அதிகாரிகளுக்கும் அரச அதிபர் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் அரச அதிபர் திடீர் இடமாற்றம் செய்யும் அளவுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மயில்ந்தமடு – மாதவணை பகுதி மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் உள்ளது. கிழக்கு மாகாண மக்கள் தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக இதனை பல தலைமுறைகளாகப் பயன்படுத்திவருகின்றார்கள். சுமார் இரண்டு இலட்சம் வரையிலான கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக இது உள்ளது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் இதன் பங்கு முக்கியமானது.
இந்தப் பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாகவும், சிலர் அத்துமீறிக் குடியேறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களை அச்சமடைச் செய்திருக்கின்றது. அவர்களுடைய பொருளாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது.
இந்தப் பின்னணியில்தான் மயில்ந்தமடு – மாதவணை பகுதியில் உருவாகியிருந்த பதற்றநிலை குறித்து ஆராய்வதற்காக அரச அதிபர் என்ற முறையில், கலாமதி பத்மராஜா, அதிகாரிகளுடன் அங்கு சென்றிருந்தார். திட்டமிட்ட குடியேற்றத்தை முன்னெடுக்கும் மகாவலி அபிவிருத்தித் திட்ட அதிகாரிகளுடன் இதன்போது அவர்களுக்குக் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகின்றது.
கால்நடைகள் அங்கு நிற்கத்தக்கதாகவே இங்கு நில ஆக்கிரமிப்பு இடம்பெறுவது கிழக்கில் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுடைய நலன்களைப் பேணுவதற்காக அரசாங்க அதிபர் எடுத்த நடவடிக்கைதான் அவருக்கு எதிராகப் பாய்ந்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஒருவர் இருக்கின்றார். தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் பொருளாதாரத்தையும், இருப்பையும் பாதுகாக்க அவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்?
Average Rating