உடல் வலி தொல்லையா? அன்னாசி பூ போதும்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அன்னாசி பூவின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.மசாலா பொருட்களில் ஒன்றான அன்னாசி பூ நாட்டு மருந்து கடை, மளிகை கடைகளில் கிடைக்கும். உணவில் சுவை, மணத்துக்காக இது சேர்க்கப்படுகிறது. அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. காய்ச்சலை தணிக்கும் தன்மை உடையது. அன்னாசி பூ மாதவிலக்கை முறைப்படுத்த கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்குகிறது. அன்னாசி பூவை மேல்பற்றாக போடும்போது வலி நிவாரணியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
சளி இருமல் போக்க
அன்னாசி பூவை பயன்படுத்தி காய்ச்சல், சளி, இருமலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, சீரகம், மிளகு, தேன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விடவும். இதனுடன் வறுத்து பொடித்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவு சேர்க்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், 10 மிளகு தட்டி சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்துவர சளி, காய்ச்சல், இருமல் குணமாகும்.பல்வேறு நன்மைகளை கொண்ட அன்னாசி பூ நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நோய் நீக்கியாக விளங்குகிறது. நெஞ்சக சளி, இருமல், காய்ச்சல், உடல் வலிக்கு மருந்தாகிறது. பறவை காய்ச்சலை குணப்படுத்துகிறது.
ஈரல் கோளாறுக்கு மருந்து
அன்னாசி பூவை பயன்படுத்தி, ஈரலை பற்றிய வைரஸ் நோய்களுக்கு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, அதிமதுரப்பொடி, சித்தரத்தை, பனங்கற்கண்டு.செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் எடுக்கவும். இதில், அரை ஸ்பூன் அன்னாசி பூ பொடி, கால் ஸ்பூன் அதிரமதுர பொடி, கால் ஸ்பூன் சித்தரத்தை பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில், 100 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தத்தில் உள்ள வைரஸ் குறையும். கல்லீரல் நோய்களான ஹெபடிட்டிஸ் உள்ளிட்டவை குணமாகும். நுண்கிருமிகளை அழிக்கும். அக்கி நோய்க்கு மருந்தாகிறது.
வலி நிவாரணி தைலம்
அன்னாசி பூவை பயன்படுத்தி வலி நிவாரணி தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய்.
செய்முறை: விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுக்கவும். இதனுடன் அன்னாசி பூ பொடி சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை பூசிவர தசையில் ஏற்படும் வலி குணமாகிறது. தசை பிடிப்பை சரிசெய்கிறது. நெற்றியில் தடவும்போது மன இறுக்கத்தை போக்கும். அன்னாசி பூ உணவுக்கு மணம் தருவதுடன் உடலுக்கு நலத்தையும் கொடுக்கிறது.
வாயுவை வெளியேற்ற கூடியது இது ஈரலை பலப்படுத்துகிறது. உன்னதமான அன்னாசி பூவை பயன்படுத்தி நலம் பெறலாம். நகச்சுற்றுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். நகத்தை பற்றிய கிருமிகளால் இப்பிரச்னை ஏற்படுகிறது. நகச்சுற்று மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
இந்த பிரச்னைக்கு டிசம்பர் பூ மருந்தாகிறது. டிசம்பர் பூ இலைகளை எடுத்து அரைத்து பற்றாக போடும்போது நகச்சுற்று குணமாகும். வலி விலகிப்போகும்.
Average Rating