மூலத்துக்கு மருந்தாகும் மரமஞ்சள்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மாதவிலக்கு, வெள்ளைப்போக்கு பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கொண்டதும், தேமல், சொரி, சிரங்கு படை போன்ற தோல்நோய்களை குணப்படுத்த கூடியதும், மூல நோய்க்கு மருந்தாக அமைவதும், காய்ச்சலை தணிக்க கூடியதுமான மரமஞ்சளின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது மரமஞ்சள். இது மஞ்சளின் குணத்தை பெற்றது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும். உள் உறுப்புகளை தூண்டக்கூடியதாக விளங்குகிறது. ஈரலுக்கு பலம் தருகிறது. காய்ச்சலை தணிக்கும். சிறுநீர்தாரை எரிச்சலை போக்கி, சிறுநீர் பெருக்கியாக உள்ளது. மரமஞ்சளை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு, மாதவிடாய் சமயத்தில் அதிக உதிரபோக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரமஞ்சள், தேன்.
செய்முறை: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மரமஞ்சள் பொடி அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் தேன் விட்டு நன்றாக கலந்து காலை, மாலை வேளைகளில் எடுத்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். கருப்பைக்கு பலம் தரும். பல்வேறு நன்மைகளை உடைய மரமஞ்சள், பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்கும் கூடிய தன்மை உடையது.
மர மஞ்சளை பயன்படுத்தி மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரமஞ்சள், தேன். செய்முறை: மர மஞ்சள் பொடி அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் நெய்விட்டு நன்றாக கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர மூலம், ரத்த மூலம் சரியாகும். ஆசனவாயில் ஏற்படும் கடுப்பு, எரிச்சல், வெடிப்பு குணமாகும். மர மஞ்சளை தேனுடன் கலந்து சாப்பிட மஞ்சள் காமாலை சரியாகும்.
மரமஞ்சளை பயன்படுத்தி தோல்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரமஞ்சள், சீரகம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு மரமஞ்சள் பொடி, சிறிது சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் குடித்துவர காயம் ஆறும். தோல் நோய்கள் சரியாகும். அரிப்பு தரும் தோல்நோய்கள், தேமல், சொரி, படை போன்றவை குணமாகும். யானைக்கால் காய்ச்சலுக்கு காரணமான தொற்றுக்களை போக்குகிறது.
மரமஞ்சள் விஷ காய்ச்சலை விரட்டுகிறது. வாதத்தினால் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். காற்று சேர்வதால் மூட்டுகளில் வலி ஏற்படும். இப்பிரச்னைக்கு தேங்காய், விளக்கெண்ணெய் ஆகியவை மருந்தாகிறது. செய்முறை: நன்கு முற்றிய தேங்காயை நன்றாக துருவி, தூளாக்கி விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். இளஞ்சூட்டோடு துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்துவர மூட்டுகளில் சேர்ந்திருக்கும் வாயு அகலும். மூட்டு வலி வெகு விரைவில் குணமாகும்.
Average Rating