இலங்கையின் இனப்பிரச்சினையும் சர்வதேச அரங்கும் -கலாநிதி அமீரலி!! (கட்டுரை)
இலங்கையின் இனப்பிரச்சினை கடந்த சுமார் எழுபது ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் வளர்ந்து வரும் ஓர் உள்நாட்டுப் பிரச்சினை. உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகளும் சர்வதேச அரங்குகளும் தலையிட்டால் அது ஒரு நாட்டின் இறைமையை மீறிய செயற்பாடு என்பதை அரசறிவியலாளர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்வர். அவ்வாறு தலையிட்டதால் எத்தனையோ உள்நாட்டுப் பிரச்சினைகள் சிக்கலாகிப் பூதாகரமெடுத்து நாடுகளையே சீரழித்ததை வரலாறு உணர்த்தும். மத்திய கிழக்கில் சிரியாவின் அழிவு இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு.
அதுமட்டுமல்லாமல், இலங்கையின் இனப்பிரச்சினை தமிழினத்துடன் சம்பந்தப்பட்டதொன்று என்பதாலும், அந்த இனம் அண்டை நாடான இந்தியாவுடன், அதிலும் குறிப்பாக தென் இந்தியாவுடன், நெருங்கிய தொடர்புடையது என்பதாலும் அப்பிரச்சினையை இந்தியாவே ராஜதந்திரத்தடன் தீர்த்துவைக்கும் என்று கருதியும் சர்வதேச அரங்கு அதைப்பற்றி மிக அண்மைக் காலம்வரை பாராமுகமாக இருந்தது. அந்த நிலை இப்போது மாறத் தொடங்குவதை உணரலாம். அதை விளக்குவதற்குமுன், இந்தியாவுக்கு இப்பிரச்சினையில் எவ்வளவுதூரம் சிரத்தை இருக்கிறதென்பதை புரிந்துகொள்வது அவசியம்.
புவிஇயல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இந்திய உபகண்டத்தின் ஒரு பகுதியாகவே இலங்கை விளங்கியபோதும் இந்திய அரசியல் தலையீடுகளிலிருந்து இலங்கை விலகியே இருந்துள்ளது. இந்த நீண்ட வரலாற்றில் மத்தியகாலத்தில் நடைபெற்ற பாண்டிய சோழர் படையெடுப்புகளை ஒரு புறனடையெனவே கருதவேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவையும் இலங்கையையும் கட்டியாண்ட பிரத்தானியர்கூட இலங்கையை ஒரு தனி நாடாகவே பிரித்து ஆண்டனர். சுதந்திரம் கிடைத்தபின்னரும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை இலங்கையைப்பற்றி அதிகம் கரிசனை கொள்ளவில்லை. ஏனெனில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அதன் வடபுற எல்லையே எப்போதும் ஒரு தலையிடியாக இருந்ததால் அந்த எல்லையின் பாதுகாப்பை மையமாகவைத்தே இந்திய வெளிநாட்டுக் கொள்கைகள் சுழன்றன. இந்து சமுத்திரமும் இந்தியாவினுடையதே என்ற ஒரு கருத்தும் அக்காலத்திலே உலக அரங்குகளிற் பொதுவாக நிலவியதாலும் இந்தியாவும் அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அதிகதூரம் கவனம் செலுத்தவில்லை. இருந்தம், இலங்கையால் எந்தவொரு பாதுகாப்புத் தொல்லையும் இந்தியாவுக்கு இருக்கவில்லை.
அத்துடன் இந்தியாவின் ஜவஹர்லால் நேருவினதும் அவரின் மகள் இந்திரா காந்தியினதும் அரசாங்கங்களும், இலங்கையின் பண்டாரநாயகாவினதும் அவரது மனைவி சிறிமாவினதும் அரசாங்கங்களும் பனிப்போர் காலத்திலே சோவியத் குடையின்கீழ் இணைந்து நின்றதால் இலங்கைத் தமிழினத்தின் பிரச்சினைளைப்பற்றி அதிகதூரம் இருநாடுகளும் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
ஆனால் 1980களுளிலிருந்து விடுதலைப் புலிகள் ஆயுதப்போராட்டத்திற் குதித்து தமிழ்நாட்டின் ஆதரவைப் பெரிதும் வேண்டியதால் இலங்கையின் இனப் பிரச்சினை தமிழ்நாட்டின் அரசியலுக்குட் புகுந்தது. ஆனாலும் அந்தப் பிரச்சினை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தேர்தல் வெற்றிக்கு ஒரு துரும்பாகப் பாவிக்கப்பட்டதால் அப்பிரச்சினை தில்லியை எட்டவில்லை. அந்த நிலை இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசு ஆட்டங்காணத் தொடங்கியவுடன் படிப்படியாக மாற்றங்கண்டது. தில்லிக்குச் சென்னையின் ஆதரவு மிகவும் தேவைப்பட்டதாலும், தமிழ்நாட்டின் எம். ஜி. ஆர் அரசு புலிகளுக்கோர் புகலிடமாய் அமைந்ததாலும் இலங்கைத் தமிழரின் பிரச்சினை இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கலாயிற்று. இருந்தபோதும், மத்திய அரசோ மாநில அரசோ தமிழீழம் ஒன்று உருவாகித் தனிநாடாவதை என்றுமே விரும்பியதில்லை, இனிமேலும் விரும்பப் போவதில்லை. அதற்குரிய காரணங்களை வேறொரு கட்டுரையில் நான் விளக்கியுள்ளேன்.
ஆயினும், தமிழரின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் இந்தியா பாடுபட்டதை மறுக்க முடியாது. 1980களில் இருந்து அந்த நிலைப்பாடு காணப்பட்டது. இலங்கை அரசும் இந்தியாவின் நியாயமான அழுத்தங்களுக்குச் செவிமடுக்க ஆயத்தமாக இருந்தது. சுருங்கக் கூறின் புலிகளின் பலம் கையோங்கி இருந்த காலம் அது. அந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி கௌரவமான ஒரு தீர்வைப் பெற்றெடுக்கப் புலிகளின் தலைமைப்பீடம் தவறியமையை வரலாறு என்றுமே மன்னிக்காது. பல மகாநாடுகளைக் கூட்டி இலங்கை அரசையும் புலிகளையும் அழைத்துப் பல தீர்வுகளையும் இந்தியா சமர்ப்பித்தவேளையில் எதற்குமே இணங்க மறுத்த புலிகளுக்கு வயசுக் கோளாறும் அதனால் சாணக்கிய முதிர்ச்சியின்மையும காரணங்களாகலாம். அதையடுத்து தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் துயரங்களையும் இங்கே மீட்கவேண்டியதில்லை.
இன்றைய நிலையோ முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு இலங்கைத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. போரிலே ஈட்டிய வெற்றியின் மமதை பெரும்பான்மைத் தலைவர்களின் மனோநிலையை, குறிப்பாகத் தமிழர்மேலும் பொதுவாக சிறுபான்மை இனங்கள்மீதும், கடினமாக்கி உள்ளது. இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, மற்ற இனங்களெல்லாம் வாடகைக் குடிகளே என்ற கருத்தும், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கமும் தமிழினத்துக்கு இனி எந்தச் சலுகைகளும் கிடைக்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. கும்பிட்டு வாழ்ந்தால் குபேரர்களாகலாமென்ற ஆசை வார்த்ததைகளையும் இன்றைய ஆட்சியாளர்கள் அள்ளி வீசுகின்றனர்.
இதேவேளை இந்தியாவின் நிலைப்பாடும் முற்றிலும் நேர்மாறானதொன்று. 1980க்குப் பிறகு அங்கே ஏற்பட்ட பொருளாதார, தொழில்நுட்ப, அரசியற் கொள்கை மாற்றங்கள் அதனை ஒரு பிராந்திய வல்லரசாக மாற்றியுள்ளது. சீனாவும் இந்தியாவும் இந்துசமுத்திரத்தை மையமாகக்கொண்டு அதற்குள் உலக வல்லரசு அமெரிக்காவையும் இழுத்து மும்முனைப் பனிப்போரொன்றை ஆரம்பித்துள்ளன. இந்தப் போரிலே இலங்கை ஒரு மூலோபாய இடத்தை வகிக்கிறது. மூன்று வல்லரசுகளும் இலங்கையைத் தமது தூண்டிலிற் சிக்கவைக்கப் பாடுபடுகின்றன. இவ்வாறு முழு இலங்கையையுமே குறிவைத்து நடக்கும் போராட்டத்தில் தமிழரின் கூக்குரலுக்கு யார்தான் செவிமடுப்பார்? எனவேதான் 13ஆம் திருத்தத்துக்கு இந்தியா பூரண அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்ப்பது வெறும் பகற்கனவெனக் கூறுவேன். இதைப்பற்றி ஏற்கனவே இப்பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் நான் விளக்கியுள்ளேன்.
அவ்வாறாயின் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேறு வழியுண்டா? இங்கேதான் உலக அரங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. இதை நன்றாக உணர்ந்ததனாலேதான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அண்மையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆற்றிய உரையில் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் அச்சபையைத் தலையிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். இதிலிருந்து தமிழினத்தின் சர்வதேச நிலைப்பாட்டை இவர் சரியாக விளங்கிக் கொள்ளவில்லைபோல் தெரிகிறது. அதை விளங்குவதற்கு யூதர்களின் வரலாற்றைச் சற்று அறிந்துகொள்வது பொருத்தமாய் இருக்கும்.
ஐரோப்பிய வரலாற்றில் யூதர்கள் பழமையும் பெருமையும் கொண்ட ஓர் இனம். அவர்களின் மொழி தொன்மையானது. அவர்களின் அறிவியல், விஞ்ஞான சாதனைகள் வியக்கத்தக்கவை. இருந்தும் தமக்கென ஒரு தாய்நாடற்று உலகெலாம் துரத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அலைந்து திரிந்தனர். ஹிட்லரின் ஜேர்மனியில் அவர்கள்பட்ட துயரத்தை வரலாறு என்றுதான் மறக்குமோ? நிச்சயம் மறக்காது. எனினும், அத்தனை கொடுமைகளின் மத்தியிலும் தமது மொழியையும் கலாசாரத்தையும் கட்டிக்காத்து, அறிவையும் அரசியல் சாணக்கியத்தையும் ஆயுதங்களாகக்கொண்டு தமக்கென ஒரு தாயகத்தை உருவாக்க அயராது பாடுபட்டனர். அதன் விளைவுதான் இன்றைய இஸ்ரவேல் நாடு.
1948க்கு முன்னர் யூதர்கள் எந்த நிலையிலிருந்தார்களோ அதே நிலையிலேதான் தமிழினம் இன்றுள்ளது. யூதர்களைவிடவும் மொழியின் தொன்மையிலும், அதன் வளத்திலும் மேம்பட்டது தமிழ். அதன் இலக்கியப் பொக்கிஷங்களுக்கு நேரான வேற்றுமொழித் திரட்டுகள் கிடையாது. யூதர்களைப்போன்று தமிழர்களும் அறிவியலிலும் விஞ்ஞானக் கலைகளிலும் வேறு பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். 1948க்குமுன்பு யூதர்கள் செயற்பட்டதுபோன்று தமிழர்களும் இன்று பல நாடுகளின் அரசாங்கங்களிலும் சர்வதேச ஸ்தாபனங்களிலும் நிபுணர்களாகவும் ஆலோசகர்களாகவும் பொறுப்புள்ள அதிகாரிகளாகவும் இடம் வகிக்கின்றனர். 1984க்குப்பின்னர் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது மொழியையும் கலாசாரத்தையும் தாம் சென்ற இடங்களிலெல்லாம் வளர்க்கின்றனர். இருந்தும் அன்றைய யூதர்களைப்போன்று இன்றையத் தமிழர்களுக்கும் தாய்நாடென்று ஒன்றில்லை. இந்தியாவின் தமிழ்நாடு ஒரு மாநில அரசேயன்றித் தனிநாடல்ல. தனிநாடு வேண்டுமென்ற தணியாத தாகத்தின் வெளிப்பாடே விடுதலைப் புலிகளின் தமிழீழப் போராட்டம். அது தோல்வியில் முடிந்துவிட்டாலும் இலங்கைத் தமிழரின் செல்வாக்கு உலக அரங்கில் வளரத்தொடங்கியுள்ளது. 1984 யூலை கலவரம் தந்த வரப்பிரசாதமே இது எனலாம். இருள்மேகத்தின் விழிம்பிலே தெரியும் ஒளிக்கோடு போன்று இது அமைந்துள்ளது.
இவ்வாறான செல்வாக்கைத்தான் யூத இனம் அன்று பயன்படுத்தியது. அதே உத்தியை புலம்பெயர்ந்த தமிழர்களும் செவ்வனே பயன்படுத்த வேண்டும். இலங்கையோ சிங்கள பௌத்த பேராதிக்கவாதத்தைத் தழுவிய ஒரு சர்வாதிகார நாடாக மாறத் துடிக்கின்ற நிலையில், இந்தியாவும் தமிழரின் பிரச்சினைகளைப்பற்றி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இயங்குகின்ற ஒரு சூழலில் மேற்கு நாடுகள் இலங்கைத் தமிழரின் சார்பாக உலக அரங்கில் கொடுக்கும் அழுத்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கையை இன்று பீடித்திருக்கும் பொருளாதாரப் பிணி உலக அரங்கின் அழுத்தங்களை உதாசீனம் செய்ய முடியாத நிலைக்கு இலங்கை அரசை உறுத்துகிறது.
ஏற்கனவே கூறியதுபோன்று இலங்கையின் இனப்பிரச்சினை ஓர் உண்ணாட்டுப் பிரச்சினையே. ஆனால் அதை ஒரு நாடுகடந்த பிரச்சினையகப் பரிணமிக்கவிட்டதே உள்நாட்டு ஆட்சியாளர்கள்தானே. இப்போது உலகின் வாயையே மூடுவதற்கு ஜனாதிபதி கோத்தாபய எத்தனிப்பது அவரின் முதிர்ச்சியற்ற அரசியல் அனுபவத்தையே காட்டுகிறது. உலக அரங்கே இன்று தமிழருக்குள்ள ஒரே தஞ்சம். அதன் மூலமாகத்தான் இந்தியாவைக்கூட தமிழரின் பிரச்சினையைப்பற்றிக் கூடிய கவனம் செலுத்தவைக்கலாம்.
Average Rating