காதுவலியை குணப்படுத்தும் கைவேளை!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சளி, இருமலை போக்க கூடியதும், நோய்கிருமிகளை அழிக்கவல்லதும், கொழுப்பு சத்தை குறைக்க கூடிய தன்மை கொண்டதும், காதுவலியை குணப்படுத்த கூடியதும், வலி, வீக்கத்தை சரிசெய்யவல்லதுமான கைவேளை செடியின் நன்மைகள் குறித்து நலம்தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
வயல்வெளி, சாலை ஓரங்களில் காணப்படுவது கைவேளை செடி. இதற்கு நாய் கடுகு என்ற பெயரும் உண்டு. இது கடுகுகளை போன்ற விதைகளை உடையது. பூக்கள் மஞ்சள் நிறத்தை உடையது. பல்வேறு நன்மைகளை கொண்ட கைவேளை செடி உடலில் கட்டிகள் வராமல் தடுப்பதுடன் கட்டிகளை கரைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும். வாந்தியை நிறுத்த கூடியதாக விளங்குகிறது. வலிப்பு வராமல் தடுக்கிறது. ஈரலுக்கு பலம் தருகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும்.
கைவேளை இலைகளை பயன்படுத்தி சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கைவேளை செடி, பால். செய்முறை: கைவேளை செடி இலை சாறு 5 முதல் 10 மில்லி எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பசும்பால் சேர்த்து சிறிது தேன் விட்டு காலை, மாலை குடித்துவர சளி, இருமல் சரியாகும். தலை நீரேற்றத்தால் உண்டாகும் தலைவலி, மூக்கடைப்பு, கண்கள் வீக்கம், இருமலை குணமாக்குகிறது. கைவேளை இலைகளை பயன்படுத்தி காது வலியை குணமாக்கும் தைலம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: கைவேளை இலை, தேங்காய் எண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் கைவேளை இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து எடுக்கவும். இந்த தைலத்தை காதில் ஓரிரு சொட்டுகள் விட்டால் காதுவலி இல்லாமல் போகும். காதில் இருந்து சீல் வராமல் தடுக்கும். காதுகளில் உள்ள கிருமிகள் விலகிபோகும். கைவேளை செடியின் இலைகள் பூஞ்சை காளான்களை போக்குகிறது. நோய் கிருமிகளை அழிக்கிறது. வலி, வீக்கத்தை சரிசெய்கிறது.
கைவேளை விதைகளை பயன்படுத்தி வலி, வீக்கத்தை சரிசெய்யும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கைவேளை செடியின் விதைகள், எலுமிச்சை சாறு. செய்முறை: கைவேளை செடியின் காய், விதை அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து சூடு செய்யவும். இந்த கலவையை வலி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டிவைத்தால் வலி, வீக்கம் குறையும். கடுகை போன்ற உருவம் கொண்ட கைவேளை செடியின் விதைகளில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைக்கும்.
பித்தம் அதிகமாவதால் ஏற்படும் குமட்டல், வாய் கசப்பு, வாந்தியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை, தேன். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து ஓரிரு வேளை பருகி வந்தால் வாய் கசப்பு, குமட்டல், வாந்தி போன்றவற்றை சரிசெய்கிறது. பித்தத்தை சமன்படுத்தும் பானமாக இது விளங்குகிறது.
Average Rating