18 வயசுலே மேக்கப் போட்டுக்கலாமா? (மகளிர் பக்கம்)
என் பெயர் கலா. எனக்கு 18 வயதாகிறது. எனக்கு மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. ஆனால், பலர் மேக்கப் போடுவதால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். ‘மேக்கப்பில் ரசாயனப் பொருட்கள் அதிகமாக உள்ளன. அதனால் சீக்கிரம் சருமத்தை பாதிக்கும் என்கிறார்கள். ஆனாலும், மேக்கப் மீது என்னைப் போன்ற இளம்பெண்களுக்கு எப்போதுமே மோகமுண்டு. அதே சமயம் எங்களில் பலருக்கு அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவதில்லை. மேக்கப் எப்படி போட வேண்டும். அதற்கு என்ன மேக்கப் பொருட்கள் அவசியம் என்பது பற்றி குறிப்பிடுங்கள்.
– சசிகலா, செங்கல்பட்டு.
‘‘மேக்கப் ஒருவரின் புறத்தோற்றத்தின் வெளிப்பாடு. அது ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும். யாருக்கு என்ன மேக்கப் நன்றாக இருக்கும் இருக்காது என்ற சட்டத்திட்டங்கள் எல்லாம் கிடையாது. ஆனால் பொதுவாக மேக்கப்பினை பொருத்தவரை என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை மேக்கப் அணியும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு டிப்ஸ்களை வாரி வழங்கினார் பிரபல மேக்கப் நிபுணர் மவுனா லால்.
* எப்போதும் மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்துவதை தவிர்க்கக்கூடாது. தினமும் குளித்துவிட்டு வந்தவுடன் உடலில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் போதே சருமத்தில் மாய்சரைசிங் லேஷன் தடவிவிட வேண்டும். மாய்சரைசிங் லோஷன் ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். அதை தேர்வு செய்து வாங்கி ’பயன்படுத்தலாம்.
* பவுண்டேஷன் பயன்படுத்தும் போது பிரைமர் உடன் பயன்படுத்துவது அவசியம். சில சமயம் பவுண்டேஷன் கிரீம் முகத்தில் திட்டு திட்டாக படியும். பிரைமர் பயன்படுத்தும் போது அது பவுண்டேஷன் கிரீமை சருமத்தில் திட்டு திட்டாக படியாமல் ஒரே மாதிரியான தோற்றம் அளிக்கும். மேலும் மேக்கப் சீக்கிரம் கலையாமல் அதிக நேரம் வரை நீடிக்கும்.
* ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்ப பவுண்டேஷன் நிறங்களை தேர்வு செய்வது அவசியம். கடையில் இருந்தது அதனால் வாங்கினேன் உபயோகப்படுத்துகிறேன் என்று சொல்லக்கூடாது. உதாரணத்திற்கு வறண்ட சருமம் உள்ளவர்கள் எந்த விதமான பவுண்டேஷன் அல்லது மாய்சரைசிங் லோஷணெய் பயன்படுத்தலாம். அதுவே எண்ணை சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக தண்ணீர் சார்ந்த பவுண்டேஷன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* இந்தியர்களை பொருத்தவரை அவர்கள் வெள்ளையாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி, அவர்களின் சரும நிறம் பரவுன். அதனால் பவுண்டேஷனும் உங்களின் சருமத்தின் நிறத்திற்கு ஈடாக இருக்கும் நிறத்தை தேர்வு செய்ய வேண்டும். அதாவது மஞ்சள் நிறமேறிய பவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும். மிதமான நிறத்தில் இருக்கும் பவுண்டேஷன் பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசையும் கலந்து இயற்கையான கிரே நிறத்திற்கு மாறும். நாம் பலர், தங்களின் சருமத்தின் நிறம் கருமையாக மாறிவிட்டது என்று கூற கேட்டு இருந்திருப்போம்.
* நாம் பவுண்டேஷனை முகத்தில் போடும் போது இரண்டு கைகளில் எடுத்து முகத்தில் பூசுவோம். அப்படி செய்யக்கூடாது. மாறாக முகத்தில் விரல் நுனியால் ஆங்காங்கே பொட்டு போல் வைக்கவும். அதன் பிறகு எல்லாவற்றையும் சருமத்துடன் பிரஷ் அல்லது கைகளால் சமநிலைப் படுத்த வேண்டும்.
* நிறைய பேருக்கு கன்சீலருக்கும் கரெக்டருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இவை இரண்டுமே மேக்கப்பிற்கு தேவையான தனித் தனி அடித்தளம். கரெக்டர் சருமத்தில் அடர்த்தியான தழும்பு இருந்தாலோ அல்லது சிவப்பு நிற பிக்மென்டேஷனுக்கு பயன்படுத்த வேண்டும். ஆரஞ்ச் நிற கரெக்டர் சருமத்தில் மிகவும் அடர்த்தியான தழும்பு அல்லது கண்களுக்கு கீழ் இருந்தால் பயன்படுத்தலாம். அதுவே சருமத்தில் சிவப்பு சிவப்பாக இருந்தால், அதற்கு பச்சை நிற கரெக்டர் பயன்படுத்த வேண்டும். கன்சீலர் திடமான தோற்றம் கொடுக்கும் என்பதால், கரெக்டர் பயன்படுத்திய பிறகு தான் கன்சீலரை பயன்படுத்த வேண்டும். கரெக்டர் ஒருவரின் சருமத்தில் உள்ள சின்ன சின்ன தழும்புகளை மறைக்கும். கன்சிலர் கரெக்ட்டர் போட்டு இருப்பதை வெளிப்படுத்தாமல் மறைக்கும். அடுத்த பவுண்டேஷன் ஒருவரின் சருமத்திற்கு சமமான தோற்றத்தை அளிக்கும்.
* செட்டிங் பவுடரை பயன்படுத்தும் போது, அது மிகவும் மிருதுவானதாகவும் மெல்லியதாகவும் இருக்க வேண்டும். அது நாம் போட்டுள்ள மேக்கப்பிற்கு ஒரு திடமான அமைப்பை தரும்.
* உடைக்கு ஏற்ப மேட்சிங் ஐஷோடோ, லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் பயன்படுத்தக்கூடாது. காரணம் நீங்கள் தலைமுதல் கால் வரை ஒரே நிறத்தில் இருப்பீர்கள். அதனால் மற்றவர்கள் உங்களை பார்க்கும் போது அவர்களின் கண்களை உறுத்தும். உதாரணத்திற்கு நீங்கள் தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட பிங்க் நிற உடை அணிந்திருந்தால், அதற்கு ஐஷேடோ பிரவுன் மற்றும் தங்க நிறம் கலந்து இருக்கலாம் அல்லது ஸ்மோக்கி எபெஃக்ட் கொடுக்கலாம். லிப்ஸ்டிக் மட்டும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். அதே சமயம் ஸ்மோக்கி ஐஷேடோ போடும் போது, அது கண்களுக்கு மேல் சமமாக படர்ந்து இருக்க வேண்டும்.
* ஐஷேடோ போட்ட பிறகு அதன் மேல் கிளிட்டர்கள் போடுவது அவரவரின் விருப்பம். கிளிட்டர் போடும் போது அத உங்களை கிளாமராக எடுத்துக் காட்டும். மேலும் இரவு நேர பார்ட்டிகளுக்கு மட்டும் தான் இதனை பயன்படுத்த வேண்டும். தரமான கிளிட்டர்களை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் அது கலையாமல் நீண்ட நேரம் இருக்கும். இல்லை என்றால், முகத்திலோ அல்லது கண்ணம் பகுதியில் அதன் துகள்கள் உலர்ந்துக் கொட்ட வாய்ப்புள்ளது. கண்களுக்கு மேல் போடப்படும் கிளிட்டர் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அதுவே கண்ணத்தில் மேல் இருந்தால் பார்க்கும் போது கண்ணத்தில் வேண்டும் என்று இதனை போட்டது போல் இருக்கும்.
* லிப்லைனர் போட்ட பிறகு தான் லிப்ஸ்டிக் போட வேண்டும். இது உதட்டிற்கு ஒரு அழகான தோற்றம் அளிக்கும். மேலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் பாதுகாக்கும். லிப்லைனர்கள் பொதுவாக நியூட் மற்றும் பீச் என இரண்டு நிறங்களில் மட்டுமே வாங்கலாம். இது எல்லா நிற லிப்ஸ்டிக்கும் செட்டாகும் என்பதால், தனித்து வித்தியாசமாக தோன்றாது.
* கண்ணத்தின் மேல் பகுதியில் அப்ளை செய்வது தான் பிளஷ். இதனை மிதமாக தான் போட வேண்டும். இல்லை என்றால் பார்பி பொம்மைக்கு போடப்பட்டு இருப்பது போல் காட்சியளிக்கும். பெரிய மிருதுவான பிரஷ் கொண்டு தான் பிளஷை முகத்தில் போட வேண்டும். அப்போது தான் உங்க கண்ணம் லோசாக சிவந்து இருப்பது போல் தோன்றும்.
* பெண்களை தங்கள் வசம் இழுக்க மார்க்கெட்டில் பல முன்னணி நிறுவனங்கள் ஏகப்பட்ட மேக்கப் பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. என்னதான் இவை அனைத்தும் தரம் வாய்ந்ததாக இருந்தாலும் மேக்கப்பினை நாம் தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது. அதே சமயம்
அவசியமாக மேக்கப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. சருமத்தை இயற்கை முறையில் பராமரித்து வந்தாலே நாம் என்றும் இளமையுடன் வாழலாம்.
Average Rating