சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் கோவக்காய்!! (மருத்துவம்)
நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிகிறோம். அந்தவகையில், சர்க்கரை நோயை தணிக்கவல்லதும், உடல் எடையை குறைக்க கூடியதுமான கோவக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். உணவாக பயன்படும் கோவக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலைகள், பழங்கள் அனைத்தும் மருந்தாகிறது. சிவந்த நிற பழங்களை கொண்டது. கோவை இலை சாறு நெஞ்சக சளியை வெளியேற்றும். இருமலை போக்கும். சர்க்கரை நோயை தணிக்கும். வயிற்றில் சேர்ந்த வாயுவை அகற்றும். வயிற்று புண்களை ஆற்றும். எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டுவலியை போக்கும். தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
கோவக்காயை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, கொழுப்பு சத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோவக்காய், நல்லெண்ணெய், உப்பு, மிளகு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதில், நறுக்கி வைத்த கோவக்காயை போட்டு லேசாக வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகு சேர்க்கவும். இதை சர்க்கரை நோயாளிகள் காலை நேரத்தில் சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடலில் தேவையில்லாத கொழுப்பு சத்து கரையும். உடல் பருமன் குறையும். வயிற்றில் உள்ள வாயுவை வெளித்தள்ளும்.
கோவை பழத்தை பயன்படுத்தி சளி, காய்ச்சலை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோவப்பழம், உப்பு, மஞ்சள் பொடி.
செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு, 2 கோவைப்பழம் சேர்க்கவும். சிறிது மிளகுப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி எடுக்கவும். காய்ச்சல், சளி இருக்கும்போது காலை, மாலை வேளைகளில் 50 முதல் 100 மில்லி குடித்துவர காய்ச்சல், சளி குணமாகும். இது, உடல் வலியை போக்குகிறது. உள் உறுப்புகளை தூண்டுவதாக அமைகிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட கோவப்பழம் ஒவ்வாமைக்கு அற்புதமான மருந்தாகிறது. காய்ச்சலை தணிக்க கூடியது. வியர்வையை தூண்டும். உடல் சூட்டை தணிக்கும். நோய் நீக்கியாக பயன்தருகிறது. கோவை இலை, பூக்களை பயன்படுத்தி தோல்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோவ பூக்கள், இலைகள், பனங்கற்கண்டு.செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு கோவை பூக்கள், 5 கோவை இலைகள், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர தோலில் ஏற்படும் சொரி, சிரங்கு சரியாகும். கோவைக்காய் உள்மருந்தாகி, உணவாகி பயன்படுகிறது. வெள்ளரி இனத்தை சேர்ந்த கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்பெறலாம். முகப்பருக்களை போக்கும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா சூரணத்தை வாங்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, 200 மில்லி நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி முகத்தை கழுவிவர முகப்பரு மறையும். முகம் பொலிவு பெறும்.
Average Rating