சமத்துவமின்மையின் முக்காடுகளை கலைந்திடுவேன்! (மகளிர் பக்கம்)
மத்திய அரசுப்பணிகளில் முக்கியமானதாக கருதப்படும் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் சுட்டியாக இருந்த அமுதா, “நான் நன்றாகப் படித்தேன். எந்தத் துறைக்கான படிப்பாக இருந்தாலும் என்னால் திறம்பட வெல்ல முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஆனால் நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். ஆக ஆசைப்பட்டேன்.
என்னுடைய 13 வயதில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று கனவு கண்டேன். 23 வயதில் ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டேன்” என்று ஒரு பேட்டியில் பதிவு
செய்திருக்கிறார்.மதுரையை பூர்விகமாக கொண்ட அமுதா 1994ஆம் ஆண்டில் தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்றார். சிறு வயதில் கபடி வீராங்கனையாக இருந்த அமுதாவின் பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். அவரது தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. கணவர் ஷம்பு கல்லோலிகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.
தர்மபுரி, காஞ்சிபுரம் கலெக்டர், தமிழக உணவுப் பாதுகாப்பு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் துறை ஆணையர், தமிழக அரசின் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர், தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை திட்ட இயக்குநர், தமிழக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் உறுப்பினர், செயலாளர், தமிழக பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர், நீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தில் திட்ட அலுவலர் என்று பல பதவிகளை வகித்த அமுதா, 2019 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூர்ன் அருகே முசூரி பகுதியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பேராசிரியராக பணிமாற்றம்செய்யப்பட்டார்.
பின் தங்கிய மாவட்டமான தர்மபுரியில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துத் திறம்பட பணிகளைச் செய்த அமுதாவிற்கு சிறந்த ஆட்சியருக்கான விருதும் கிடைத்தது. காஞ்சி கலெக்டராக இருந்தபோது மணல் கொள்ளையை கடுமையாக ஒடுக்கினார். 2015ல் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மீட்பு பணியில் சிறப்பு அலுலவராக இருந்த அமுதா களத்தில் இறங்கி கடுமையாகப் போராடி பலரைக் காப்பாற்றினார். அப்துல் கலாம், ஜெயலலிதா, கலைஞர் ஆகிய தலைவர்கள் மறைந்தபோது அவர்களின் இறுதி நிகழ்ச்சிகள் அமைதியாக ஒழுங்காக நடைபெறுவற்கு விரிவான ஏற்பாடு பொறுப்புகளை ஏற்று செயல்படுத்தியவர்.
அதுவும் குறிப்பாக கலைஞர் மறைந்தபோது எங்கே இறுதி நிகழ்ச்சி என்ற வினா எல்லார் மனதிலும் இருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பளித்த பிறகு சில மணி நேரங்களே இருந்த நிலையில் மெரினா இடத்தை தயார் செய்து இறுதி நிகழ்வை அமைதியாக நடத்த முக்கிய காரணமாக இருந்தார்.
“அனைத்தையும் படிப்படியாக ஒருங்கிணைத்தோம். 11 மணிக்கு எங்களுக்கு தீர்ப்பு தெரிய வந்தவுடன் பணிகளை தொடங்கிவிட்டோம். வெறும் ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் இதையெல்லாம் செய்தது கடினமாக இல்லை. ஆனால் பெரும் சவாலாக இருந்தது” என்று அன்று ஊடகங்களிடம் தெரிவித்த அமுதா, கலைஞர், ஜெயலலிதா பற்றி கூறும் போது, ‘‘கருணாநிதி ஒரு கடினமான உழைப்பாளி, சுறுசுறுப்பாக இயங்குவார், சாமர்த்தியமாக செயல்படக்கூடியவர். ஜெயலலிதா அறிவாற்றல் மிக்க பெண்மணி, விரைவாக முடிவெடுக்கக்கூடியவர்” என்று இவ்விரு தமிழக முதல்வர்களிடையே பணியாற்றிய அனுபவம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
“நம்முடைய சமமற்ற சமூகம், சமத்துவமின்மையின் முக்காடுகளை நீக்க விரும்பினேன். எல்லோரும் அரசாங்கத்திடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்… என்பதே ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு எனது எண்ணமாக இருந்தது” என்று அதே
பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஐ.நா.சபையின் நீர் மற்றும் சுகாதாரத்துக்கான நிதியத்தின் திட்ட அலுவலராக பணியாற்றிய சமயத்தில்தான் தமிழகத்தில் சுனாமி தாக்கியது. அந்நேரம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டு நிறுவனங்களும், பொது அமைப்புகளும் உதவிக்காக வந்தனர். அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பது, தற்காலிக வீடுகள் அமைப்பது, உடைகளை வழங்குவது ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டனரே ஒழிய, யாருமே சுனாமிக்குப் பிறகான கடலோர மக்களின் சுகாதாரம், கழிவுகளை அகற்றுதல் பற்றி பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
அந்த நேரத்தில் அமுதாவின் முதல் கவனம் சுகாதாரம் மீதுதான் திரும்பியது. இது குறித்து அவர், “சுனாமி தாக்குதலுக்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் மக்கள் பள்ளிகள், அரசுக் கட்டிடங்கள், தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு கழிவறை வசதி இல்லை. மீனவ மக்கள் இயல்பாகவே காலைக் கடன்களை கழிக்க கடலோரம் செல்வார்கள். ஆனால் சுனாமிக்குப் பிறகு கடலைப் பார்க்கவே அவர்களுக்கு பெரும் அச்சமாக இருந்தது. அதனால் தற்காலிகக் குடியிருப்புகளைச் சுற்றியே மலம் கழிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
சில நாட்களில் இது பெரும்பிரச்சினையாக மாறியது. சுனாமியால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளால் காலரா போன்ற தொற்று நோய் பரவி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் என்.ஜி.ஓ.க்களிடம் இதுபற்றிப் பேசினோம். குடியிருப்புகளைச் சுற்றியிருக்கும் மனிதக் கழிவுகளை அகற்ற உதவ வேண்டும் என்று கேட்டேன். எந்த ஒரு என்.ஜி.ஓ.வும் அதற்கு உதவ வில்லை. வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறோம், என்று மறுத்துவிட்டனர். இறந்து கிடக்கும் மனித உடல்களை அகற்றுவதற்கு தயாராக இருந்த அவர்கள், மனிதக் கழிவுகளை அகற்ற மறுத்துவிட்டனர்.
அப்போதுதான் மற்றவர்களை கேட்பதை விட நாமே இதை செயல்படுத்தி முன்னுதாரணமாக இருப்போம் என்று முடிவெடுத்தேன். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தன்னார்வலர்களை அழைத்தேன். இருபது பேர் வரை என்னுடன் வந்தார்கள். கிளவுஸ் அணிந்துகொண்டோம், முகக் கவசம் அணிந்துகொண்டோம், வாரி எடுக்கும் உபகரணங்களை எடுத்துக் கொண்டோம். நாங்களே மனிதக் கழிவுகளை அள்ளி அப்புறப்படுத்தி எரித்தோம். இந்தப் பணிதான் சுனாமிக்குப் பிறகான தொற்று நோய் மரணங்களைத் தடுத்து நிறுத்தியது. இதை என் பணியின் முன்னுதாரண அம்சமாக நான் கருதுகிறேன்” என்று இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் அமுதா கூறியுள்ளார்.
இவ்வாறு நிர்வாகத் திறமையும், அடித்தட்டு மக்கள் மீதான அக்கறையும், இயல்பான தாய்மை குணமும் ஒருங்கே அமையப்பெற்ற ஐ.ஏ.எஸ்,. அதிகாரி அமுதா, இந்திய நாட்டின் உயர்ந்த ஜனநாயக அலுவலகமான பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகள்.
Average Rating