சிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்!! (மகளிர் பக்கம்)
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பது சாதனை கிடையாது. அம்மாவாக இருந்து என்ன சாதித்தேன் என்பதுதான் முக்கியம்’’ என்கிறார் ஃபேஷன் டிசைனர் சாந்தினி கண்ணா. பொதுவாக பெண்கள் அவர்களது திருமண வாழ்க்கைக்குப் பிறகு எல்லாமே முடிந்து விடுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையிலே திருமணத்திற்குப் பிறகு சாதித்த பெண்கள் நம் கண் முன் ஏராளம் உள்ளனர். அந்த இடத்தில் தனது பெயரையும் பதிவு செய்திருக்கிறார், ஃபேஷன் துறையில் பிரபலமாகி வரும் சாந்தினி கண்ணா. ‘‘சொந்த ஊர் நாக்பூர். சிறு வயதிலிருந்தே தாத்தா, பாட்டி கூடதான் வளர்ந்தேன். தஞ்சாவூரில் கல்லூரி படிப்பை முடித்தேன்.
படிக்கும் போதே ஃபேஷன் டிசைன் மீதும் ஒரு கண் இருந்தது. அதற்கு டைலரிங் தெரியணும்னு அதை பெரிசா எடுத்துக்கல. படிப்பு முடிச்ச கையோடு கல்யாணம், இரண்டு குழந்தைகள், குடும்பம் என என் நாட்களும் கழிந்தது. என்னுடைய கனவு எல்லாம் அவ்வளவுதானு நினைச்சேன். ஒரு நாள் எனக்கு ஃபேஷன் டிசைனிங்கில் இருக்கும் ஆர்வத்தை கணவரிடம் பகிர்ந்தேன். அவர், இனிமேல் எதற்கு படிப்பு என்றில்லாமல், என் ஆர்வத்தை புரிந்து கொண்டு என்னை ஃபேஷன் டிசைன் படிக்க வைத்தார். தையல், எம்ப்ராய்டிங், கலரிங், கலம்காரி வொர்க், பிளாக் பிரின்ட்டிங், ஸ்கிரீன் பிரின்ட்டிங் என்று சகலத்தையும் மிக ஆர்வமாகவும், வேகமாகவும் கற்றுக்கொண்டேன்” என்று கூறும் சாந்தினி, தனக்கு ஃபேஷன் துறையில் கிடைத்த முதல் வாய்ப்பு பற்றி பகிர்ந்து கொண்டார்.
“பெங்களூரில் மாடல்களுக்கு டிசைனிங் பண்ணுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. என் பல நாள் கனவு நிறைவேறும் அந்த நேரத்தில் எப்படி தூக்கம் வரும். இரவு, பகல் பாராமல் இரண்டு நாட்கள் வேலையில் தீவிரமானேன். அதை பார்த்து அடுத்தடுத்த வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது. டிசைன் செய்வதோடு மட்டுமல்லாமல், அதை நானே தைக்கவும் செய்தேன். என் வேலை எப்போதும் தனித்துவமாகவும், மற்றவர்களை விட சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து செய்வேன். ஃபேஷன் ஷோவில் ஆரம்பித்த பயணம், பொட்டிக் உரிமையாளராக அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அடுத்த இடம், நடிகைகளுக்கு பர்சனல் டிசைனராக்கியது. இரண்டு வருடங்களுக்கு மேல் எனக்கென தனி வாடிக்கையாளர்களை உருவாக்கி, அவர்கள் மூலமாக பலரை கவர்ந்து சூடுபிடித்து போய்க் கொண்டிருக்கிறது என் பிசினஸ்.
நடிகை சுனைனா, சாக்க்ஷி அகர்வால், பிரியங்கா தேஷ்பாண்டே, மீரா மிதுன், ரசித்த மகாலட்சுமி, நடிகர் ஜெய், ரோஷன்… போன்று பலருக்கு பர்சனல் டிசைனராக இருக்கிறேன்” என்கிறார் சாந்தினி. ‘சவுத் இந்திய பெண்மணி’ என்கிற விருது பெற்றிருக்கும் சாந்தினி, தனது டிசைனிங் எல்லாம் தொகுத்து உருவாக்கிய காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஃபேஷன் துறைக்காக பல விருதுகள் பெற்றிருக்கும் சாந்தினி, பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘லட்சுமி’ திரைப் படத்தில் காஸ்டியூம் டிசைனராகவும் வேலை பார்த்துள்ளார். ‘‘கஃபா என்ற ஃபேஷன் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறேன். இதில், பிரபல ஈவென்ட் மேனேஜரான ஜோயல் மைக்கேல் உடன் இணைந்து பிசினஸும் செய்து வருகிறேன். இங்கு படிக்க வரும் அனைவரும் டிசைனிங் கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களுக்கான வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்துகிறோம்.
அதனோடு மாணவர்களை பல ஃபேஷன் ஷோக்களுக்கும் நேரில் அழைத்து சென்று அதன் அனுபவத்தையும் கொடுக்கிறோம். கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொண்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பார்கள். அதே போல் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருக்கதான் செய்கிறார்கள். அப்படித்தான் என் வெற்றிக்கு பின் என் கணவர் இருக்கிறார். ஆடை அலங்காரம் என்பது ஓர் அழகுக் கலை. அதனால் தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே ஆடை அலங்காரத்தில் அதிக அக்கறை காட்டுகிறோம். இன்றைய நவநாகரீக உலகில், விதவிதமான ஆடைகளை ஸ்டைலாக உடுத்தி மகிழ வேண்டுமென்கிற ஆசை கிட்டதட்ட எல்லோரிடமும் இருக்கிறது. இப்படி அவர்களின் ஆடைகளை அவர்களுக்கு பிடித்தது மாதிரி பூர்த்தி செய்ய வேண்டும்” என்கிறார் சாந்தினி கண்ணா.
Average Rating