யாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி!! (கட்டுரை)
அரசியற்சட்ட யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தத்தைப் புகுத்தி இறுதியில் ஒரு புதிய யாப்பையே உருவாக்கும் முயற்சி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் மிகத்துரிதமாக நடைபெறுகின்றது. இந்தத் திருத்தங்களின் இன்னோர் அங்கமாக, சிறுபான்மை இனங்களின் நலன்கருதி இந்தியா கொடுத்த அழுத்தங்களினால் நுழைக்கப்பட்ட 13ஆவது திருத்தமும் ஒரு சாறற்ற சக்கையாக மாற்றப்படுவது உறுதி. ஆனாலும், 20 ஆவது திருத்தம் சட்டமாதவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதிலே சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் எதிரணியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளின் அங்கத்தவர்கள் இம்மாற்றங்களுக்கு ஆதரவு வழங்கத் தயாராவதாக செய்திகள் கசிகின்றன.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இதைவிடக் கேவலமான ஒரு தலைமைத்துவம் இனியும் உருவாகுமா என்பது சந்தேகம். இக்கட்டுரையை மேலும் தொடருமுன் மகாகவி பாரதி பாஞ்சாலி சபதம் என்ற அவரது நீள் கவிதையிலே பிரயோகித்த சில வார்த்கைளை வாசகர்களுக்கு ஞாபாகமூட்ட விரும்புகிறேன். மகாபாரதத்தில் துரியோதனன் சபையிலே அவன் தம்பி துச்சாதனன், “போரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச் சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோ(க)”, அதனை “நெட்டை மரங்களென நின்று புலம்பிய” பாண்டவரை, “வீரமிலா நாய்கள்”, என்று வருணித்தான். இன்றைய முஸ்லிம் தலைமைத்துவத்தின் நிலையை நினைத்தபோது இந்தக் காட்சி என் ஞாபகத்துக்கு வந்தது.
மொத்த முஸ்லிம் சமூகமுமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும், அதன்பின் வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும், அதற்குப்பின் இடம்பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இடைக்கால ஆட்சியிலும், இப்போது நடைபெறும் பொதுஜன முன்னணி ஆட்சியிலும் அனுபவித்த பல கொடூரமான துன்பங்களையும், கஷ்டங்களையும், இடையூறுகளையும் பட்டியல்போட்டு விபரிக்க முடியாது. ஆனால் அவை எதற்குமே நிரந்தரமான ஒரு பரிகாரத்தை இதுவரை பெறத்தவறிய முஸ்லிம் தவைர்கள், இப்போது ராஜபக்சவின் குடும்ப ஆட்சி அடுத்த பல ஆண்டுகளுக்கு, ஏன் பல தசாப்தங்களுக்கு, நிலைபெறுவதற்கும் அது ஒரு சர்வாதிகார ஆட்சியாக மலர்வதற்கும் அந்த மலர்ச்சியின் அழகில் பௌத்த பேராதிக்கவாதம் நிரந்தரமாக மணம் வீசுவதற்கும் வழிவகுக்கும் யாப்பு மாற்றங்களுக்கு ஆதரவு வழங்குவதை என்ன வார்த்தைகளால் வருணிப்பதோ! சீ சீ என்ன பரிதாபம்! முஸ்லிம்களுக்கு இப்படிப்பட்ட தலைமைத்துவம் தேவைதானா? இவர்களைவிட இம்மாற்றங்களை எதிர்த்துப் போராடும் சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்கள் எவ்வளவோ கண்ணியமானவர்கள். அவர்களுக்குப் பின்னால் ஏன் இச்சமூகம் இனியும் திரளக்கூடாது?
திருத்தங்களின் விளைவுகள்
யாப்புத் திருத்தங்கள் சாதிக்கப்போவதென்ன? மிகச் சுருக்கமாகக் கூறினால் அவை ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரியாகவும், அதேவேளை பிரதமரை ஒரு தபாற் சேவகனாகவும், நாடாளுமன்றத்தை ஓர் அஞ்சல் அலுவலகமாகவும் மாற்றப்போகின்றன. அன்று ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் யாப்பு ஜனாதிபதிக்கு ஓர் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றும் வலுவைத்தவிர மற்ற எதையும் சாதிக்கக்கூடிய அதிகாரங்களை வழங்கியது. அந்த நிலையை மாற்றிய 19 ஆவது திருத்தத்தை இன்று நீக்கி 20 ஆவது திருத்தம் மூலம் மீண்டும் அந்த அதிகாரங்களை ஜனாதிபதி கோத்தாபயவுக்கு வழங்கப் போகிறது.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இந்தமாற்றங்களை அனுபவிக்கப்போவது ஒரே குடும்பத்தைச் சோந்த எழுபது வயதைக்கடந்த இரு சகோதார்கள். அவர்களுள் மூத்தோன் அதிகாரங்களை இழக்க இளையோன் அவற்றைக் கைப்பற்றுகிறான். இந்த இழப்பும் கைப்பற்றுதலும் வேறு இரு குடும்பத்தவருக்கிடையே ஏற்பட்டிருந்தால் அது நாடாளுமன்றத்தையே ஒரு போர்க்களமாக்கி நாட்டையும் இதுவரை சீர்குலைத்திருக்கும். ஆனால் நடைபெறுவதோ ஒரே குடும்பத்தின் பிரச்சினையாக இருப்பதாலும் அந்தக் குடும்பத்திலே இன்னும் பலர் ஆட்சியில் உயர்பீடமேற வரிசையாக நிற்பதாலும் ராஜபக்ச குடும்ப ஆட்சியின் நீண்டகால ஆதிக்கத்தை மனதிற்கொண்டு மூத்தோன் இளையோனிடம் சரணடைந்தான். ஒரு ஜனநாயக நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையினூடாக வம்சாவழி ஆட்சியொன்றை நவீனகாலத்தில் நிறுவிய முதல் நாடு இலங்கையாகத்தான் இருக்க வேண்டும்.
குடும்ப ஆட்சி
இந்த அரசாங்கத்தில் ஏற்கனவே ஐந்து ராஜபக்ச குடும்பத்தினர் அமைச்சர்களாகவும் அரசாங்கத்தின் பிரதான துறைகளான பாதுகாப்பு, நகர்ப்புற அபிவிருத்தி, சட்டமும் ஒழுங்கும், பொருளாதார அபிவிருத்தி, நிதியும் திட்டமிடலும், நெடுஞ்சாலைகளும் துறைமுகங்களும், போன்றவற்றிற்குப் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றனர். அரசின் வரவு செலவில் சுமார் எழுபது வீதம் இவர்களின் பிடிக்குள் இருக்கின்றதெனவும் முன்னர் கூறப்பட்டு அதை அவர்கள் நிராகரித்ததும் உண்டு.
இருந்தும் இக்குடும்பத்தினரின் அதிகாரத்துக்கும் செல்வாக்கினுக்கும் மகுடமாய் அமையப்போகின்றது ஜனாதிபதி கோத்தாபயவுக்குக் கிடைக்கவிருக்கும் புதிய அதிகாரங்கள். ஏற்கனவே இவரின் கடும்போக்கான ஆட்சிமுறையைப்பற்றிப் பல விமர்சனங்களுண்டு. இவர் ஜனாதிபதியாகிச் சுமார் ஒன்பது மாங்களாக இராணுவத்தைத் தன்னுடன் அணைத்துக்கொண்டு இராணுவத் தளபதிகளின் தலைமையின்கீழ் பல செயலணிகளை உருவாக்கி அவற்றின் மூலம் நாட்டை நிர்வாகித்தவர். அவ்வாறு அவர் நிர்வகித்தமைக்கு கொரோனா கொள்ளை நோய் ஒரு சிறந்த வாய்ப்பையும் அளித்தது. ஆனால் அது ஓர் அவசர காலம். ஆதலால் அந்த நிர்வாகத்தின் கடும்போக்கினை மக்கள் பொறுத்துக் கொண்டனர். அதே கடும்போக்கினை சாதாரண காலங்களிலும் தாங்குவார்களா என்பது சந்தேகம். இருந்தும் இவருடைய தலைமையின்கீழேயே ராஜபக்ச வம்சம் அடுத்த பல ஆண்டுகளுக்கு இலங்கையை ஆளப்போகிறது.
இந்தக் குடும்பத்தின் அதிகாரக் கோட்டை மூன்று முக்கிய தூண்களின்மேல் கட்டப்படும்: ஒன்று, பௌத்த சங்கம், இரண்டாவது முப்படைகள், மூன்றாவது சிங்கள பௌத்த முதலாளி வர்க்கம்.
பண்டைக் காலத்திலிருந்தே பௌத்த சங்கத்தினர் இலங்கை மன்னர்களின் ஆட்சியில் தர்மம் நிலைப்பதற்கு ஆலோசனை வழங்கி அதனைக் கண்காணிக்கவும் செய்தனர். அதனால் பௌத்தத்தின் புகழும் நாட்டின் நல்லாட்சியும் ஒருங்கே வளர்ந்தன. இன்றைய பௌத்த சங்கத்தினரோ அதற்கப்பாற் சென்று இந்த நாட்டையே தனிச் சிங்கள பௌத்தர்களின் நாடெனப் பிரகடனப்படுத்தி அதன் நீதி, நிர்வாகம், சட்டம் என்பன யாவும் பௌத்தமயமாக வேண்டுமெனவும் போராடுகின்றனர். பல்லின மக்கள் வாழும் இந்நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தம், மற்றைய இனங்களெல்லாம் விருந்தாளிகளென்பது அவர்களின் பேராதிக்கவாதத்தின் சாராம்சம். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஒரு மந்திரத்தையும் அண்மைக்காலங்களில் பௌத்த சங்கத்தினர் ஒலித்து வருகின்றனர்.
ஆனால் அவர்களின் ஆதரவால் ஆட்சிக்குக்கு வந்த ராஜபக்ச குடும்பத்தினர் இப்பேராதிக்க வாதிகளின் கருத்துக்களை பகிரங்கத்தில் கண்டிக்க முடியாமல் கிளிப்பிள்ளை போன்று எல்லா இனங்களுக்கும் இந்நாட்டில் சமவுரிமையுண்டு என்ற பல்லவியையே பாடிக்கொண்டிருக்கின்றனர். காரணம் என்னவெனில் இந்தப் பேராதிக்கவாதிகளின் ஆதரவில்லாமல் ராஜபக்ச வம்சம் ஆட்சியிலிருக்க முடியாது. சிங்கள பௌத்த மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு இந்த போராதிக்கவாதத் துறவிகளின் பிரச்சாரம் மிகமிக அவசியம். பௌத்த தர்மம் வேறு, பௌத்த பேராதிக்கம் வேறு. நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் செழிப்புக்கும் மகத்துவத்துக்கும் தேவை பௌத்த தர்மமேயன்றி பௌத்த பேராதிக்கமல்ல.
அதேபோன்று முப்படைகளின் ஆதரவும் குடும்ப ஆட்சிக்கு அவசியம். எனவேதான் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததும் முதலில் அவர்செய்த வேலை இராணுவத் தளபதிகளை நண்பர்களாக்கி அவர்களுக்கு வேண்டிய சலுகைகளையும் வழங்கி தனது ஆட்சி நிர்வாகத்தின் இன்றியமையாத ஓர் அங்கமாக அவர்களை உள்வாங்கியமை. இப்பொழுது தனக்குக் கிடைத்துள்ள சர்வ அதிகாரங்களைக் கொண்டு அவர்கள் மூலமே நாட்டை ஆளுவார் என்பதில் ஐயமில்லை. அந்தப் படையினரும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவாவது ராஜபக்ச குடும்பத்துக்குப் பாதுகாப்பாகவும் அக்குடும்ப ஆட்சியின் காவலரணாகவும் செயற்படுவர்.
இவ்வாட்சியின் மூன்றாவது தூண் சிங்கள பௌத்த முதலாளி வர்க்கம். இவ்வர்க்கம் ஜெயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கை வளர்த்துவிட்ட செல்வச் சீமான்களுள் ஒரு பகுதியினர். அந்தக் கொள்கை ஏனைய இனத்தவரிடையேயும் குறிப்பாக முஸ்லிம்களிடையே சிறிமாவோ பண்டாரநாயகாவின் இடதுசாரி ஆட்சிக்காலத்தில் முடக்கப்பட்டிருந்த அவர்களின் வாத்தக உணர்வுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. அதன் விளைவாக மீண்டும் முஸ்லிம்கள் தமது பிரதான தொழிலாக வாத்தகத்தை நாடலாயினர். அவர்களின் வாத்தகத்திறமையும் அதனால் வியத்தகு வளர்ச்சியடைந்த ஒரு சில வியாபார நிறுவனங்களும் பௌத்த முதலாளிகளின் பொறாமையை வளர்த்துவிட்டன. பௌத்தர்களே இலங்கையின் சகல துறைகளையும் கட்டியாள வேண்டும் என்ற பேராதிக்க வெறியில் முஸ்லிம்களுக்கெதிரான ஒரு பிரச்சாரத்தை பௌத்த சங்கத்தினரும் பௌத்த முதலாளி வாக்கமும் சேர்ந்து போருக்குப் பின்னர் அவிழ்த்துவிட்டனர். அதன் விளைவுதான் 2009க்குப் பின்னர் ஆரம்பமான முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களும் இனக் குழப்பங்களும்.
அத்தனை குழப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருள் எவருமே முஸ்லிம்களுக்காகக் குரலெழுப்பாதது பௌத்த முதலாளி வர்க்கத்தின் ஆதரவை அக்குடும்பம் இழக்க விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டவில்லையா? அந்த வர்க்கத்தின் ஆதரவால் ஆட்சிபீடமேறிய அக்குடும்பம் அந்த வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் தடையாய் இருப்பார்களா?
ஆகவே, யாப்புத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியும் சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஒரு தலைவனாக மாறினால் பௌத்த சங்கத்தினதும் முப்படைகளினதும் பௌத்த சிங்கள முதலாளிகளினதும் முழு ஆதரவுடன் அடுத்த பத்து ஆண்டுகளுக்காவது ராஜபக்ச வம்சம் தொடர்ந்து ஆட்சியிலிருக்குமென நம்ப இடமுண்டு. இன்றைய எதிர்க்கட்சிகளின் சீர்குலைவும் பலஹீனங்களும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்குச் சாதகமாய் அமைவது ஒரு புறமிருக்க, வேறு ஒரு முக்கிய காரணியும் அந்த ஆட்சிக்கு ஆதரவாய் அமைகின்றது.
வல்லரசுகளின் நிலைப்பாடு
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்துசமுத்திரக் கெடுபிடி யுத்தத்தின் மையமாகத் திகழ்கிறது இலங்கை. சீனம், பாரதம் ஆகிய பிராந்திய வல்லரசுகளும் அமெரிக்க உலக வல்லரசும் எப்படியாவது இலங்கைக்குள் தமது செல்வாக்கையும் அதிகாரத்தையும்; பலப்படுத்தத் துடிக்கின்றன. சீனா முந்திக் கொண்டது. இந்தியா நுழைந்துவிட்டது. அமெரிக்கா நுழையத் துடிக்கிறது. இவ்;வல்லரசுகள் நீண்டகாலத்துக்கு இலங்கைக்குள் நிலைபெற வேண்டுமானால் அதற்கு அடிப்படையாக இலங்கையிலும் உண்ணாட்டு அரசு நிலையானதாகவும் அதிகாரம் வாய்ந்ததாகவும் அமைய வேண்டும். அடிக்கடி மாறும் அரசாங்கங்களுடன் எந்த வல்லரசுக்கும் நீண்டகால உறவுகளை வளர்ப்பது கடினம். எனவேதான் ராஜபக்ச ஆட்சி நீண்டகாலம் நீடிக்குமென வல்லரசுகள் நினைத்தால் அந்த ஆட்சியை அவை வரவேற்கும். அந்த ஆட்சி நிலைப்பதற்கான உதவிகளையும் அவை தயங்காமல் செய்யும்.
துரதிஷ்டவசமாக இதனால் நட்டம் அடையப்போவது தமிழினம். தமிழினம் தனது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இந்தியாவை நம்பியிருக்கிறது. கோத்தாபய ஜனாதிபதியாகியவுடன் முதன்முதலாக அவர் மேற்கொண்ட பயணம் இந்தியப் பிரதமர் மோடியை சந்திப்பதற்கே. அச்சந்திப்பில் பிரதமர் 13ஆம் திருத்தத்தை அமுலாக்க வேண்டுமென ஜனாதிபதியை வற்புறுத்தியதும் அதற்கு அவர் இணங்கியதும் தமிழினத்துக்குப் பால்வார்த்ததுபோல் இருந்தது. ஆனால் புதிய யாப்பு மாற்றங்களுக்குப் பிறகு ராஜபக்ச குடும்பமே தொடர்ந்து ஆட்சிசெய்யப்போவது உறுதியாகிய பின்னரும் மோடி அதேவற்புறுத்தலைச் செய்வாரா? அல்லது, இலங்கையில் இந்திய முதலீடுகளைப் பெருக்கி இயலுமானால் இலங்கையின் கேந்திரச் சொத்துக்களிற் சிலவற்றுக்கும் பங்காளியாகி இந்தியப் பொருளாதாரத்தையும் இந்திய ராஜரீக வலுவையும் பெருக்க முனைவாரா? தமிழ் நாட்டின் ஆதரவில்லாமலேயே பிரதமரான மோடி இலங்கைத் தமிழரின் சார்பாக தமிழ் நாடு கொடுக்கும் அழுத்தங்களையும் பொருட்படுத்த மாட்டார். எனவேதான் 13ஆம் திருத்தம் புதிய திருத்தங்களால் புதைக்கப்படுவது உறுதி.
ஓர் எதிரி
இதுவரை கூறியவை யாவும் ராஜபக்ச வம்சத்தின் நீண்டகால ஆட்சிக்கு அனுகூலமாய் அமைந்தாலும், ஒரு காரணி மட்டும் அவ்வாட்சிக்குப் பரம எதிரியாய் மாறலாம். அதுதான் இலங்கையின் பொருளாதார நெருக்கடி. இலங்கையின் பொருளாதாரம் நல்லாட்சி அரசின் காலத்திலிருந்தே சரியத் தொடங்கினாலும் கொவிட் கொள்ளை நோயின் ஆக்கிரமிப்பும் அதனாலேற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தமும் அந்தச் சரிவின் வேகத்தைப் பெருக்கிற்று. நாட்டின் ஏற்றுமதிகளின் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் புறக்கணிப்பு, சென்மதி நிலுவைப் பற்றாக்குறையின் அதிகரிப்பு, அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு, சுற்றுலாத் துறையின் வரட்சி, நாடுகடந்து உழைப்போர் அனுப்பும் பணக்குறைவு, சர்வதேசக் கடன் பழு என்றவாறு பல நெருக்கடிகள் ஒருங்கிணைந்து பொருளாதார வளர்ச்சியை வெகுவாக மட்டுப்படுத்தியுள்ளன. இதனால் மக்களின் வாழ்க்கைச்செலவு விஷம்போல் ஏறுகிறது. வறுமை கோடிக்கணக்கான குடும்பங்களை தவிக்கவிட்டுள்ளது. அதைத் தாங்கொணாத சிலர் தமது உயிரையே மாய்த்துள்ளனர். இதற்குப் பரிகாரமென்ன?
இராணுவத்தைக் கொண்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தியதுபோன்று இராணுவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை வளர்க்க முடியாது. சர்வ அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி செய், செய்யாதே என்றவாறு கட்டளைகள் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க முனைகிறார். இந்த வழியில் இறக்குமதித்தடை, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, கைத்தொழில் உற்பத்திக்கு ஊக்குவிப்பு, தொழில்வாய்ப்பை நோக்கிய கல்வி வளாச்சி என்றவாறு அவர் விடுக்கும் கொள்கை அறிவிப்புகளைச் சில்லறையாக நோக்கும்போது ஒவ்வொன்றும் நன்மை பயப்பனவாகத் தோன்றினாலும் அவற்றை மொத்தமாகக் கோர்வை செய்து ஒரு பொதுவான திட்டத்தின் அடிப்படையிற் செயற்படுத்தாவிடின் எதிர்பார்த்த பயனைத் தரமாட்டா. வங்குறோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இப்பொருளாதாரத்தை அவர் கனவுகாணும் “செழிப்பும் மகோன்னதமும்” என்ற நிலைக்குக் கொண்டுவருவதற்கு என்ன திட்டத்தை வகுத்தாலும் இன ஒற்றுமையின்றி வெற்றிகாண முடியாது. இது இன்றைய அடிப்படைத் தேவை. தமிழரின் பிரச்சினைக்கு பொருளாதார வளாச்சியே ஒரே வழி அதிகாரப் பகிர்வல்ல என்று கண்மூடித்தானமாகக் கூறுவது இலங்கைபோன்ற மற்றைய பல்லினச் சமூகங்களின் பொருளாதார வரலாற்றை ஜனாதிபதி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது.
பொருளாதாரமும் வளர்ச்சியடையாமல் இனவேற்றுமையும் வளர்க்கப்பட்டால் இரண்டும் சேர்ந்து ராஜபக்ச அரசின் முதலாவது எதிரியாக மாறும். அமைதியின்மையும் வறுமையும் ஒன்றுசேரும்போது மக்கள் அரசுக்கு எதிராகத் திரண்டெழுவர். கோடிக்கணக்கான மக்கள் வீதிக்கு வரும்பொழுது இராணுவத்தின் துப்பாக்கிகள் தூங்கிவிடும். அரசும் வீழும். அதில் வளம்பெருக்கிய வம்சமும் மறையும்.
Average Rating