பிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன? (கட்டுரை)

Read Time:24 Minute, 2 Second

இந்தக் கட்டுரையை நாம் எழுதி நிறைவு செய்கின்ற நேரத்தில் 20 தொடர்பில் புதிய பல அதிரடித் தீர்மானங்களுக்கு அரசு வந்திருக்கின்றது. அதனால் பிரதமர் நியமித்த குழுவால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அவர்களது எந்த சிபார்சுகளும் அதில் உள்வாங்கப்படவில்லை. அது எப்படி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதோ அதே போன்று தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது என்று ஆளும் தரப்பினர் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள். எனவே ஜனாதிபதி விரும்பியவாறுதான் அது தற்போது பாராளுமன்றத்துக்கு விரைவில் வருகின்றது.

திருத்தங்கள் இருப்பின் அங்கே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி கடும் தெனியில் கட்டளை போட்டதால் பிரதமர் நியமித்த 9 பேர் கொண்ட குழு வாயடைத்து நிற்க்கின்றது என்று நாங்கள் அறிகின்றோம். ஊடகச் சந்திப்பில் இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது விளக்கமளிக்க வந்தவர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாகி இருந்தார்கள். சில இடங்களில் கேள்விகள் தெளிவில்லை என்று அவர்கள் அதனைத் தட்டிக் கழிக்கவும் முயன்றதை நாம் அங்கு பார்த்தோம். எனவே நாமும் கடைசி நேரத்தில் எமது விமர்சனத்தில் புதிய பல செருகள்களை இணைக்க வேண்டி வந்தது. எனவே 20 தொடர்ப்பில் முன்னய பின்னய கதைகளை நாம் வாசர்களுடன் பகிர்ந்து கொள்க்கின்றோம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ தந்தை யார் என்று தெரியாது சமூகத்தில் குழந்தைப் பிறப்புக்கள் நடந்து விடுவதுண்டு. அப்படியான நிலைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்தக் குழந்தைக்கு தந்தை யார் என்று தெரிந்திருக்கும். அதே நேரம் குறித்த பெண் நடத்தை கெட்டவளாக இருந்தால் கதை சற்று வேறு. தந்தை அவனாக இருப்பானோ இவனாக இருப்பானோ என்று அவளும் ஆளை அடையாளம் காண்பதில் நெருக்கடிக்கு ஆளாவாள். அவ்வாறான குழந்தைகள் தலைமறைவாவதும் சகஜம். அதேபோன்று தற்போது இந்த அரசு பதவியேற்றதுடன் மிகவும் ஆர்வமாக 20 அரசியல் சீர்திருத்தம் என்ற குழந்தையை அவசர அவசரமாகப் பெற்றெடுக்க முனைந்தது.

குறைமாதக் குழந்தைபோல் 20ம் பிறந்தது. வர்த்தமானியில் கூட அது வெளிவந்தது. ஆனால் நாம் முன்சென்ன குழந்தையைப் போல் இப்போது இந்தக் குழந்தையையும் காணவில்லை. அவமானம் காரணமாக அந்தக் குழந்தை இப்போது பெற்றவளே மறைத்து வைப்பது போல் ஒரு நிலை. 20தை அவர்களே நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் சுருட்டிக் கொண்டார்கள். மக்களின் கண்களுக்குத் தெரியாமல் ஒரு கட்டத்தில் மறைத்து விட்டனர். (ஆனால் அது வருகின்றது)

20ல் பல குறைபாடுகள் இருக்கின்றது என்று அவர்களே ஒரு கட்டத்தில் பகிரங்கமாகவும் பேசினார்கள். அதனால் அரசு மூக்குடைபட்டிருக்கின்றது. திருத்தங்களுடன் புதிய 20வதை பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்தார் பிழையான 20 யார் பெற்ற பிள்ளை என்று கேட்டால் அது அப்பன் யாரென்று அவர்களுக்கே தெரியாதாம். இது என்ன வேடிக்கை. பிரதமர் எம்.ஆர் நாம் முன்வைத்த காலை ஒரு போதும் பின்னெடுக்கமாட்டடோம் என்று கூறி இருக்கின்றார். ஆனால் 20 தொடர்பான வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் சிலவாரங்கள் பின்னெடுத்து ஏனோ தெரியாது.

20 ல் உள்ள அடுத்த வேடிக்கை என்ன வென்றால் அதனை உத்தியோகபூர்வமாக சபையில் சமர்ப்பிக்க இருக்கின்ற நீதி அமைச்சர் அலி சப்ரி இப்படி ஒரு கருத்தைக் கூறி வருகின்றார். நீதி அமைச்சர் என்ற வகையில் இந்த 20ஐ நான் தான் சமர்ப்பிக்க வேண்டும். அதனை நான் செய்வேன். ஆனால் அதில் அடங்கி இருக்கின்ற விடயங்கள் எனது தயாரிப்பு அல்ல அதனைத் தயாரித்தவர்கள் வேறு ஆட்கள். எனவே புதிதாக வருகின்ற 20க்கும் துறைக்கான அமைச்சர் பொறுப்பேற்கத் தயாரில்லை என்ற கதை மூலம் நாங்கள் புரிந்து கொள்ளக் கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. 20ல் பல சர்ச்சைக்குறிய விடயங்களும் சிறுபன்மை சமூகத்துக்குப் பாதகமான பல விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக அமைச்சர் சார்ந்த சமூகத்துக்குக் கூட நோவினைகள் வர இருக்கின்றது என்பதாகத்தான் இது இருக்க வேண்டும்.

அதே நேரம் பேராசிரியர் ஜீ.எல்லும் இது தனது தயாரிப்பு அல்ல என்று கூறுகின்றார் 1972 ஆண்டு ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க காலத்தில் வந்த குடியரசு அரசியல் யாப்பு கொல்வின் ஆர்.டி.சில்வாவின் குழந்தை. அதே போன்று 1978 யாப்பை யார் தயாரித்தாலும் அதற்குத் தந்தை ஜே.ஆர். ஆனால் புதிய இருபது நாம் முகப்பில் சென்னது போல் அப்பன் இல்லாத குழந்தையாகத்தான் இது வரை இருக்கின்றது. இதனைத் தயாரித்தவர்கள் ஏன் தமது முகங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளத் தயங்குகின்றார்களோ தெரியாது. இதன் பின்னணியில் கடும் போக்கு பௌத்த குருமாரின் செல்வாக்கு கனிசமாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜனாதிபதி ஜீ.ஆர். பெருத்த மக்கள் ஆணையுடன் பதவிக்கு வந்திருக்கின்றார் இந்த நாட்டை சரியாக கட்டியெழுப்ப அவருக்கு சில அமைச்சுக்கள் தேவைப்படுகின்றது. எனவே இதற்காக எமக்குக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கமுடியாது அதனால் 20வது திருத்தத்தை அவசரமாக செய்து முடிக்க வேண்டி இருக்கின்றது. என்று கூறி இருந்தார். இதன் மூலம் தற்போது ஜனாதிபதி ஜீ.ஆர். வகிக்கின்ற அமைச்சும் சட்டத்துக்கு முறனானது என்று பேராசிரியரே ஏற்றுக் கொள்கின்றார்.

20வது திருத்தம் பாராளுமன்றத்தில் அமுலாகுமாக இருந்தால் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தால் அரசாங்கம் பாராளுமன்றத்தை ஒரு தபால் நிலையம் என்றவகையில்தால் வைத்திருக்கும். அனைத்துக் கடிதங்களுக்கும் தபாலகத்தில் முத்திரிகுத்துவது போல் இனிவரும் எல்லாப் பிரேரணைகளும் அமுலாகிவிடும். இதனால் பாராளுமன்றம் நம்பிக்கை இல்லாத ஒரு இடமாக மாறி விடும். இப்படியான ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றார் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

புதிய மாகாணசபைகள்!

புதிய மாகாண சபைகளை ருகுனு, பிஹிட்டி, மாயா என நிபுணர்கள் குழுவால் தனக்கு சிபார்சு செய்யப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சரத் விஜேசேக்கர தெரிவிக்கின்றார். இதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சிங்களப் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டு தமிழ் மக்கள் அங்கு சிறுபான்மையாக்கப்படுகின்றார்கள். அவர்களின் இந்த எதிர்பார்ப்பை அடைந்து கொள்வதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்ட அவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் இது சாத்தியமானால் தமிழ் மக்கள் மிகவும் வேதனைக்கும் காயத்துக்கும் உள்ளாகுவார்கள். இதுவரை இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. அமைச்சர் ஜீ.எல். பீரிசிடம் மாகாணங்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்ப்பில் கேள்வி எழுப்பினால் அது பற்றி நாம் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை என்று பேராசிரியர் ஜீ.எல். கூறுகின்றார்.

இதற்கிடையில் ஆளும் தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அதிகாரத்துக்கு வந்திருப்பது குறித்து சீனா தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கின்றது. எனவே இலங்கையுடன் சீனா நம்பிக்கையுடன் அரசியல் பொருளாதார இராணுவ உறவுகளை இதன் மூலம் மேலும் வளர்க்க முடியும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் சீனா இந்தியாவுக்குத் தெற்கில் குறிப்பாக இலங்கையில் தனது இரணுவப் பிடியையும் தளபாடங்களையும் வைத்திருக்கும் ஒரு மையத்தை அமைக்க இருக்கின்றது என்று அமெரிக்க கூறுகின்றது. தார்மீக ரீதியில் இது விடத்தில் சீனாவின் நடவடிக்கை சரியோ பிழையோ அதனை விமர்சிக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதுதானே உலகம் பூராவிலும் இராணுவ மையங்களை அமைத்திருக்கின்றது. ஆனால் இதனை இந்தியா எவ்வளவுதூரம் பார்த்துக் கொண்டிருக்கும் என்றும் தெரியவில்லை.

பௌதீகம் வரலாறு மொழி!

அப்படியாகவே இவர்களுக்கு மாகாணசபைகளை ஒரு நீதி நியாயத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டுமாக இருந்தால் அதனை நான்காக பிரிக்க முடியும். மொழி ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் வகைப்படுத்தி எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு நியாயமான தீர்வை வழங்க முடியும். என்பது எமது கருத்து.

1.வடக்கு கிழக்கு (மொழி)
2.மத்திய,ஊவா,சப்ரகமுவ (மலையகம்)
3.வட மத்தி, வட மேல் (வரலாறு மக்கள் வாழ்வு)
4.மேல், தென் (கரையோரம்)

எமது பார்வையில் யதார்த்தமானதும் கூட இதுபற்றி கடந்த காலங்களில் புதிய எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்ட போது நாம் அந்தக் குழு முன் இப்படி ஒரு 4 மாகாணசபைகள் பற்றிய பணிந்துறையை முன்மொழிந்திருந்தோம். ஆனால் தற்போது இனவாத உணர்வுகளை முன்னிருத்தி ஆளும் தரப்பு நாம் முன் சொன்ன அடிப்படையில் மாகாணசபைகளை ஏற்படுத்த முனைவது தெரிகின்றது.

ஐ.நா. மனித உரிமையகம் அரசங்கத்தின் இந்த நடவடிக்கைகளை வன்மையகக் கண்டிக்கின்றது. ஆனால் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களே இது விடயத்தில் நாம் யாருடைய சிபார்சுகளையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எவரும் நாமக்கு பாடம் கற்றுத்தரத் தேவை இல்லை என்றும் பகிரங்கமாகவே கூறி இருக்கின்றார்கள். குறிப்பாக ஐ.நா.மற்றும் இந்தியாவோ இது விடயத்தில் எமக்கு எந்த சிபார்சுகளை முன்வைக்கத் தேவையில்லை என்ற நிலைப்பட்டில் உறுதியாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இதனை ருகுனு, பிஹிட்டி, மாயா என்று வரலாற்று ரீதியில் இதனை மூன்றாகப் பிரிப்பதற்கு மிகுந்த ஆர்வத்தடன் இருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதனை இந்த அரசாங்கம் ஒரு போதும் முன்வைக்க மாட்டாது என்பது தெளிவு. அத்துடன் நாட்டில் சிறுபான்மை மக்களை பிராந்திய ரீதியில் பிளவு படுத்தி அதிக்கம் செலுத்துவதில்தான் ஆளும் தரப்பும் இனவாதிகளும் ஐக்கியப்பட்டு இருக்கின்றார்கள்.

கபட நாடகமா
இராஜதந்திரமா!

20வது திருத்தம் என்பது 19ஐ இல்லாமல் செய்து அந்த இடத்துக்கு ஜே.ஆர். அதிகாரங்களையும் விஞ்சிய ஒரு ஹிட்லர் பணியிலான ஒரு ஜனாதிபதியை நாட்டில் உருவாக்குவதுதான் இதன் அடிப்படை நோக்கம். ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்களையும் பீதியையும் ஏற்படுத்துவதும் இதன் அடுத்த இலக்காக இருக்க வேண்டும். அதிகாரப் பகிர் என்று நீங்கள் கேட்டால் தற்போது தமிழர்களின் இறுதி எச்சங்களாக இருக்கின்ற வடக்கு கிழக்கைக் கூட நாங்கள் ஆக்கிரமிப்புச் செய்து விடுவோம் என்று எச்சரிக்கையைக் கொடுத்து அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகின்றவர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடுகின்ற ஒரு ஏற்பாடாகவும் இது இருக்கலாம்.

எனவேதான் சரத் விஜேசேக்கர வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் பற்றி அச்சுறுத்தி வருகின்றார். அதே போன்று பேராசிரியர் ஜீ.எல் . தமிழ் தலைவர்களின் பேச்சால்தான் நாம் இப்படி யோசிக்க வேண்டி வருகின்றது என்ற கதைகளையெல்லாம் முடிச்சுப்போட்டுப் பார்க்கும் போது எமது வாதத்தில் ஒரு நியாயம் இருப்பதை வாசகர்கள் ஏற்றுக் கொள்ள முடியும். அதே நேரம் இந்தியாவும் இருக்கின்ற அதிகாரங்களைக் கூட அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கே இலங்கையில் ஆபத்து, இதற்கு மேல் நாமும் அதிகாரப் பரவல் பற்றி அதிகம் பேசாமல் இருந்தது கொண்டால் நல்லது என்று நிலையை உருவாக்குகின்ற ஒரு உளவியல் இராஜதந்திர நகர்வாகக் கூட இந்த 13 எதிரான அழுத்தங்களும் அச்சுருத்தல்களும் இருக்கக் கூடும் என நாம் நினைக்கின்றோம்.

மாகாண சபைத் தேர்தல்
கேள்விக்குறியாகியுள்ளது

தற்போது இரண்டு வருடங்களாக மாகாணசபைகள் இன்றியே நாடு இயங்கிகக் கொண்டிருக்கின்றது. அதனால் எந்தப் பாதிப்புக்களும் இல்லை. எனவே அது இருந்தாலும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று என்ற நியாயமான கருத்து ஒருபக்கம் இருக்க, இந்த மாகாணசபைகள் வடக்கு கிழக்கு இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக முன்வைப்பட்ட ஒரு விடயம் என்பது தெரிந்ததே. ஆனால் அரசாங்கம் இப்போது மாகாணசபைகள் விடயத்தில் ஆர்வமாக இல்லை. மாகாணசபைகள் தொடர்ப்hன விவகாரங்களை இந்த 20 திருத்தில் உள்வாங்காமல் புதிய அரசியல் யாப்பு வருகின்ற போது அது பற்றிப் பார்க்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அதன் மூலம் கடும் போக்கு பௌத்த குழுக்களைத் திருப்திப்படுத்துவது. புதிய அரசியல் யாப்பு வரையப்படும் வரை இந்தியாவும் ஈழத் தமிழர்களும் இளவுகாக்கின்ற கிளிகளைப் போல் வைத்திருப்பது அரசாங்கத்தின் மற்றுமொரு திட்டமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

ஆனால் ஆளும் தரப்பிலும் எதிரணியிலும் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகள் மற்று உறவுக்காரர்களை இந்த மாகாணசபை ஊடாக அரசியல் ரீதியில் வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்கள் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். ஆனால் மேல் மட்டமும் ஜனாதிபதி ஜீ.ஆரும் அவருக்கு நெருக்கமானவர்களும் மாகாணசபைகள் விடயத்தில் அக்கரையாக இல்லை. இதனால் உடனடியாக மாகாணசபைத் தேர்தலுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதுதான் எமது கருத்து.

இதனால் இரண்டம் மட்ட அரசியல் வாதிகளும் பொதுத் தேர்தலில் தோற்றுப் போனவர்களும் பெரும் ஏமாற்றமடைவார்கள். புதிய அரசியல் யாப்பு வரைவதற்கு நெடுங்காலம் எடுக்கும். அதில் கூட இந்த மாகாணசபைகள் உள்வாங்கப்படுமா என்று தெரியாது. இதற்கிடையில் மாகாண சபைகளுக்குப் பதிலாக உள்@ராட்சி சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக அரசங்கம் ஆர்வமாக இருக்கின்றது என்று ஒரு கதை கடந்த வாரம் சொல்லப்பட்டது. இப்போது பசில் ராஜபக்ஸ தான் அப்படியான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று இப்போது மறுத்திருக்கின்றார். எனவே இந்தியா மீது ஒரு அச்சம் இருக்கின்றதோ என்றும் நாம் சந்தேகிக்கலாம்.

ஜனாதிபதி ஜே.ஆர். இந்தியாவுக்குப் பயந்து 13 ஐக் கொண்டு வந்தார். ஆனால் ஜனாதிபதி ஜீ.ஆர். இந்தியாவுக்கும் அஞ்சமாட்டார் என்றுதான் அவரது சகாக்களின் கதைகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்களோ தாங்கள் எப்படியும் 13 ஐ நீக்கியே தீர்வது என்று பிடியாக இருக்கின்றார்கள். பெரும்பாலும் மாகாண சபைகள் தற்போது செய்படாத நிலையில் இருந்து வருகின்றன. அதனை அப்படியே வைத்துக் கொண்டு அரசு காலத்தை ஓட்டவும் இடமிருக்கின்றது. அப்போது மாகாண சபைகள் ஒரு மாயை அல்லது உண்டு இல்லை என்ற நிலைக்கு வரும்.

20து பிந்திய தகவல்கள்!

20 தொடர்பில் மிகப் பிந்திய தகவல்களை முகப்பில் சொல்லி இருந்தோம். அது பற்றிய எமது சில கணிப்புகளையும் விமர்சனங்களையும் இப்போது பார்ப்போம். 20 சில குறைபாடுகள் இருந்தது. அதனால் அதiனை 9பேர் குழுவை அமைத்து பிரதமர் சரி செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றது என்று பேசி அதே ஆளும் தரப்பினர், இல்லை இல்லை பழைய 20தான் வருகின்றது. திருத்தங்கள் இருந்தால் பாராளுமன்றத்தில் அது நடக்கும் என்று சுருதியை மாற்றி இப்போது பேசி வருகின்றார்கள்.

இதிலிருந்து இந்த 20 தொடர்ப்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் லடாய் என்ற கருத்துக்கு நாம் வர முடியும். இதனால் பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் முன்வைக்கப்படுகின்ற போது ஆளும் தரப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மசங்கடங்களுக்கு ஆளாவார்கள். அதில் திருத்தங்களைக் கொண்டுவந்து ஜனாதிபதியை பகைத்துக் கொள்வதா? மௌனமாக இருந்து பிரதமரின் கோபத்துக்கு ஆளாவதா என்ற நிலை அவர்களுக்கு வரும்.

19ல் பிரதமருக்கே அதிகாரம் என்றிருந்தது. புதிய 20ல் ஜனாதிபதி ஜீ.ஆருக்கு ஜே.ஆரையும் விஞ்சிய அதிகாரம். பிரதமருக்கு எந்த அதிகாரங்களும் கிடையாது. அவர் அமைச்சரவைக்கு தலைமை தாங்குகின்ற ஒரு நெறியாளர் மட்டுமே. மறுபுறத்தில் 19 மூலம் எந்த விதமான அதிகாரமும் இல்லாமல் ஆக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மிகப் பெரிய அதிகாரங்கள் மீண்டும் கிடைக்கின்றது. இதனை பிரதமர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தேர்தல் மேடைகளில் கூட 19ல் அவர் பிரதமர் ஒருவருக்குள்ள அதிகாரங்கள் பற்றிப் பேசி வந்தார். பிரதமர் அமைத்த குழு ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே அதிகாரப் பகிர்வு பற்றிய முயற்சியில் இறங்கி இருக்க வேண்டும். அதனால் ஜனாதிபதி ஆத்திரமடைந்ததால்தான் அதிரடியாக பழைய 20 வது மீண்டும் வெற்றிக் கொடியைத் தூக்கி நாடளுமன்றம் வருகின்றது. எனவே இது அப்படியே மூன்றில் இரண்டை எட்டுமானால் இலங்கை அரசியலில் ஜனாதிபதி ஜீ.ஆர்தான் இதன் பின்னர் ஜம்பவான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா!! (வீடியோ)
Next post சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? (அவ்வப்போது கிளாமர்)