மாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி! (மகளிர் பக்கம்)
உலகமெங்கும் உள்ள மக்களின் பிரச்னைகளை எடுத்துரைக்க ஆண்டுதோறும் கல்லூரி, பள்ளி மாணவர்களைக் கொண்டு மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான மாதிரி ஐ.நா. சபை சர்வதேச மாநாடு சிங்கப்பூரில் உள்ள நன்யாங் டெக்னாலஜிகல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்’ஸ் எஞ்சினியரிங் கல்லூரி பி.டெக். பயோ டெக்னாலஜி மாணவி பவித்ரா கலந்துகொண்டு வறுமை மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான தனது கருத்துக்களை எடுத்துவைத்து வந்துள்ளார். இந்தியாவிலிருந்து சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் பவித்ரா.
‘‘மாதிரி ஐக்கிய நாடுகள் சபை-Model United Nations (MUN) என்பது சர்வதேச மட்டத்தில் பரவலாக நடத்தப்படும் ஒரு மாநாடு. ஐக்கிய நாடுகள் சபை பற்றிய அறிவை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்துவதற்கும், சபை நடவடிக்கை முறைகளை அறிமுகம்
செய்து அதற்கு மாணவர்களை தயார்படுத்தவே இது போன்ற மாதிரி ஐக்கிய நாடுகள் சபைகள் நடத்தப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து முதல் மாதிரி ஐ.நா. சபை மாநாடு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நாடுகளில் இந்த மாதிரி ஐ. நா சபை மாநாட்டினை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் நடத்தப்பட்டது. இன்று உலகில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு என்பது வழக்கமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் பங்குகொள்ளும் மாணவர்கள் உண்மை யான ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளாக (Delegates) கலந்து கொள்வர்.
ஐ.நா வில் பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு சபை (Security Council), மனித உரிமைக்கான ஐ.நா பேரவை (UNHRC) மற்றும் உலக சுகாதார சபை (World Health Assembly) என பல குழுக்கள் உள்ளன. இதன் அடிப்படை யில் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் உலகில் உள்ள நாடுகளில் காணப்படும் பிரச்னைகள் பற்றி ஆராய்ந்து, விவாதித்து அவற்றுக்கான சிறந்த தீர்வை முன்வைப்பர். இதுவரை நடைபெற்று வரும் மாதிரி ஐ.நா. மாநாட்டில் நமது இந்தியாவின் சார்பில் யாரும் கலந்துகொண்டதில்லை. முதன் முதலாக நான்தான் கலந்து கொண்டுள்ளேன் என்பதைச் சொல்வதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.
உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்கும் ஐ.நா. சபையைப் போன்று மாதிரி ஐ.நா. சபை கல்லூரி, பள்ளி மாணவர்களைக் கொண்டு கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் நாடுகளில் உள்ள பிரச்னை, அதற்கான தீர்வு குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். நான் இந்த மாதிரி ஐ.நா. சபை நடவடிக்கைகள் குறித்து கவனித்து வந்தேன். நம்நாட்டில் உள்ள வறுமை, தீவிரவாதம் குறித்த பிரச்னைகளையும் அதற்கு தீர்வாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உலகநாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானித்தேன்.
பல்வேறு பொருளாதார மற்றும் சமூக அமைப்புகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியபோது கிடைத்த பரிசுகளும் உற்சாகமும்தான் என்னை ஊக்கப்படுத்தியது. விண்ணப்பித்தேன், தேர்ச்சியும் பெற்றேன். விண்ணப்பம், பயணச் செலவு உள்ளிட்ட அனைத்துக்கும் எங்கள் கல்லூரி நிறுவனத் தலைவர் பாபு மனோகரன் நிதியுதவி செய்து பெரிதும் ஊக்கப்படுத்தினார். பேராசிரியர்களும் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். மாதிரி ஐ.நா. சபை மாநாட்டில் 93 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில் நம் நாட்டில் உள்ள வறுமை மற்றும் அதனை பயன்படுத்தி தீவிரவாதத்தை உருவாக்கும் செயல் போன்றவற்றைக் குறித்து எடுத்துரைத்தேன். பொதுவாக எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே வறுமை அதிகமாக உள்ளது. அவர்களின் வறுமையை பயன்படுத்தி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக்கி விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் வறுமையில் உள்ள மக்களுக்கு இந்தியாவில் எங்கு சென்றாலும் இலவசக் கல்வி கொடுக்க வேண்டும் என எடுத்துரைத்தேன்.
கல்வி அறிவு மற்றும் பொருளாதார நிறைவு பெற்றுவிட்டால் தீவிரவாதம் தலைதூக்காது என்ற கருத்தை வலியுறுத்தினேன். என் போன்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்த 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்து (2019 ஆம் ஆண்டு) ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள மாதிரி ஐ.நா. சபை மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கான கருத்துகளை எடுத்துரைப்பேன். மேலும் என்னைப் போன்றே மற்ற மாணவர்களும் இந்த மாதிரி ஐ.நா. சபை மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை எடுத் துரைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றார் நிறைவான புன்னகை யுடன் பவித்ரா.
Average Rating