மினியேச்சர் திருக்குறள்!! (மகளிர் பக்கம்)
வெளிநாடுகளில் திருக்குறளுக்கு இருக்கும் மதிப்புகூட நம் தமிழ்நாட்டில் இருப்பதில்லை. பள்ளி பயிலும் போது, வெறும் மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்வதோடு சரி, பள்ளிக் காலம் முடிந்தவுடன் இந்த இரண்டடிகளை நாம் அடியோடு மறந்துவிடுகிறோம். வாழ்வின் பல நீதிகளை உணர்த்தும் இந்த இரண்டு அடிகளை எப்போதும் நம் வாழ்வோடு வைத்திருப்பதற்கு அத்தனை குறள்களையும் இரண்டு அங்குலப் புத்தகமாக தந்திருக்கிறார் ஜெயந்தி கேசவராஜ். இவர் ஆசிரியராக பணிபுரிந்தவர். தற்போது ஆசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் தன் மகனுக்குத் திருக்குறள் தினமும் சொல்லி கொடுக்கும் போது, அதன் மீதான ஈர்ப்பு இருவருக்குமே அதிகரித்துள்ளது. மகன் 1330 குறள்களை மனப்பாடம் செய்துள்ளார். இவரோ, அதை எழுதிப் பார்க்க ஆரம்பித்துள்ளார். கடைகளில் கொடுக்கப்படும் ரசீதுகளில் ஆயிரம் பழமொழிகளை எழுதியுள்ளார்.
இதனையடுத்து திருக்குறளை ஏன் சிறிதாக எழுதக்கூடாது எனத் தோன்ற, முதலில் பெரிய சார்ட் பேப்பரை பாதியாக வெட்டி அதில் மொத்த திருக்குறளையும் வரிசையாக எழுதி உள்ளார். அடுத்து, அதே சார்ட் பேப்பரை இரண்டு அங்குலத்தில் வெட்டி, ஒரு காகிதத்திற்கு ஒரு அதிகாரம் என வகுத்து, மினியேச்சர் திருக்குறள் புத்தகமாகத் தயார் செய்துள்ளார். “திருக்குறளை சிறிய வடிவில் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதுமே மனதில் ஓர் உற்சாகம் கிடைத்தது. அதுதான் இரண்டே நாளில் 1330 குறளையும் மடமடவென எழுதி முடிக்க வைத்தது. 0.05 தடிமன் கொண்ட பென்சிலைக் கொண்டு தான் அனைத்து திருக்குறள்களையும் எழுதினேன். அடுத்தகட்டமாக என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்த போது, நண்பர்கள் சிலர் உதவியுடன் திருவான்மியூர் கைராலி அசோசியேஷனுக்கு நான் எழுதிய திருக்குறளை அனுப்பி வைத்தேன். அவர்கள் 2001 ஆம் ஆண்டு, ‘குறள் எழுத்துச் செம்மல்’ என்ற பட்டத்தை எனக்கு கொடுத்து கௌரவித்தார்கள்’’ என்றவர் தொடக்கப்பள்ளி ஒன்றை நிர்வகித்து வந்துள்ளார்.
“நானும் என் கணவரும் தொடக்கப் பள்ளி ஒன்றை நிர்வகித்து வந்தோம். அதில் தமிழ் ஆசிரியராகவும் நான் பணிபுரிந்து வந்தேன். ஆங்கில நீதிக் கதைகளையும், கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து பாடம் நடத்துவேன். பிள்ளைகளுக்கு எளிய நடையில் தமிழ் செய்யுள்களை சொல்லித்தருவது என்னுடைய டெக்னிக். அப்படி திருக்குறள் சொல்லிக்கொடுக்கும் போதுதான் நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துமே இதில் இருப்பதை உணர்ந்தேன். ஆங்கில நீதிக்கதைகள் சொல்லும் அனைத்து அறங்களுமே, திருக்குறளில் அழகாக வரிசைப்படுத்தி இடம் பெற்றுள்ளது. இதை ஆழமாகப் பயின்றாலே நாம் வாழ்வியலைக் கற்றுக் கொள்ளலாம். பள்ளியை பிசினஸாக நடத்தாமல், வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் அரிய வாய்ப்பும், பொறுப்பும் எங்களிடம் இருப்பதாகவே எண்ணி இதை செய்து வந்தோம். எங்கள் பள்ளியில் நடைபெறும் போட்டிகளின் போது, மாணவர் களின் ஆர்வம் அறிந்து அதற்குத் தகுந்த உதவிகளை செய்து அவர்களை தயார் செய்வது வழக்கம்.
இப்போது இருப்பது போல பிராஜக்ட்டை(project) கடையில் வாங்கிக் கொடுக்காமல், கூடவே இருந்து மாணவர்கள் அவர்களாகவே செய்து முடிக்கத் துணையிருப்போம். ஆனால் எங்களால் தொடர்ந்து பள்ளியினை நடத்த முடியவில்லை. காரணம் அரசு நிர்ணயித்த அளவிற்கு எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. போதிய இடம் எங்களிடம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து பள்ளியை நடத்த முடியாமல் போனது. எங்கள் பள்ளி மாணவர்களை நாங்களே வேறு பள்ளிகளில் சேர்த்து விட்டோம். இப்போது, பள்ளிக் குழந்தைகளின் போக்குவரத்திற்காக வேன் சர்வீஸ் நடத்தி வருகிறோம். நான் ஏற்கனவே பள்ளியை நிர்வகித்து வந்ததால், எங்கள் வேனில் வரும் குழந்தைகளிடம் அவர்கள் பாடத்திட்டங்கள் குறித்து பேசுவது வழக்கம்.
அந்த சமயத்தில் அவர்களுக்கு படிப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதை சொல்லித் தருவேன். பாடங்களை தாண்டி எங்கள் வேனில் வரும் மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறேன்” என்றவர் அடுத்தடுத்து பல திட்டங்களை வைத்துள்ளார். ‘‘என் அடுத்த குறிக்கோள் 10,000 புள்ளிகள் வைத்து கோலம் போட வேண்டும். கிடைக்கும் இடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிய கோலம், அதுவும் குறைந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். நாம் வாசலில் இடும் தினசரி கோலங்கள் மூலம் கிரியேட்டிவிட்டியும், கணிதமும் நன்றாக வரும். இளைய தலைமுறை, இதை ஓல்ட் ஃபேஷன் எனச் சொல்லி புறக்கணிக்காமல், பெரியோர்கள் இதெல்லாம் எதற்காக வழக்கில் கொண்டுவந்தனர் என்பதை ஆராய்ந்து பின்பற்ற வேண்டும்” என்கிறார் ஜெயந்தி கேசவராஜ்.
Average Rating