விவசாயி நினைத்தால் எதையும் உருவாக்கலாம்!! (மகளிர் பக்கம்)
விவசாயத்தில் மாதம் ரூபாய் பத்து லட்சம் சம்பாதிக்க முடியுமா?… முடியாதா?… ஏன் ரூபாய் இரண்டாயிரம், ஐந்தாயிரம், அட மாதம் ரூபாய் ஐம்பதாயிரம்… ‘எந்த காலத்தில் இருக்கிறீர்கள்… சாப்பாட்டுக்கே இல்லாமல் ஒவ்வொரு விவசாயியும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் வருமானமா?’ என்கிறீர்கள் அப்படித்தானே. ஆனால் வருடத்திற்கு ஒன்றரை முதல் இரண்டு கோடி வரை சம்பாதிக்கலாம் என்கிறார் இளம் பெண் விவசாயி ஸ்ரீலட்சுமி. அதற்கு கொஞ்சம் தற்போதைய தொழில்நுட்பங்களையும் சேர்த்து விவசாயம் செய்யவேண்டும் என்கிறார் இந்த விவசாய காதலி…‘‘சொந்த ஊரு பாண்டிச்சேரி பக்கத்துல கூடப்பாக்கம். அப்பா பத்மஸ்ரீ டாக்டர் வெங்கடபதி ரெட்டியார். மலர்கள் பயிரிடலுக்கு எப்போதுமே மவுசு உண்டு என்கிறதுல அப்பாவுக்கு அபரிமிதமான நம்பிக்கை உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை பூக்களுக்கு நம் வாழ்க்கையில பெரும்பங்கு இருக்குங்கறதை முழுமையா நம்பினார்.
அதன்படி அவருடைய ஆராய்ச்சிகள் எல்லாமே பூக்கள் சார்ந்ததா இருந்தது. நிச்சயம் விவசாயம் சார்ந்த பலருக்கும் அவரைத் தெரிஞ்சிருக்கும். அவர் விவசாயத்தில் காட்டின பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது வாங்கியவர். அப்பா நல்ல விவசாயி. ஆனால் இன்னமும் அவருக்கு உலக அளவிலான டெக்னிக்கல் முன்னேற்றங்களை கத்துக்க ஆங்கிலம் ஒரு தடையா இருந்தது. கோயம்புத்தூர் அக்ரிகல்சர் கல்லூரியில செமினார்களுக்கெல்லாம் தவறாமல் கலந்துக்குவார். அங்கே அப்பாவுக்கு ஆங்கிலம் சிக்கலைக் கொடுத்துச்சு. நான் அப்போ ஆங்கில வழிக் கல்வியிலதான் படிச்சிட்டு இருந்தேன். அப்பா சர்வதேச அக்ரிகல்சர் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் என்னை கூட்டிட்டுப்போக ஆரம்பிச்சார். அப்படி ஒரு மீட்டிங்கின் போதுதான் திசு வளர்ப்பு முறை பத்தி நானும் கத்துக்கிட்டேன். அப்பா கூடவே இருந்ததால எனக்கு சின்ன வயதுலேயே விவசாயத்துல ஆர்வம் அதிகம்.
‘அப்பாவும் என்ன வேணும்னாலும் படி, எங்கே வேணும்னாலும் வேலை செய். ஆனால் விவசாயத்தை மட்டும் விட்டுடக் கூடாதுனு’ அடிக்கடி சொல்வார். திசு வளர்ப்பு முறைக்கான செட்டப் எல்லாம் அமைக்க 1994லேயே ரூபாய் மூணு லட்சம் தேவைப்பட்டது. அதாவது திசு வளர்ப்பு செய்கிற அறைக்குள்ள எந்தவித மாசும் இருக்கக் கூடாது. சுத்தமான காற்றுதான் இருக்கணும். நாங்க ஆரம்பிக்கும் போது வெறுமனே சாதாரண அறைக்குள்ள வெச்சே மாசற்ற அறையை உருவாக்கினோம். அதாவது மண்ணெண்ணை ஸ்டவ்வை அப்படியே பத்த வெச்சு கதவை பூட்டி வெச்சுட்டா அந்த வெப்பத்துலேயே எல்லா நுண்கிருமிகளும் அழிஞ்சிடும். அதன்பிறகு அந்த அறைய திசு வளர்ப்புக்கு பயன்படுத்துவோம். அடுத்து கெமிக்கல் சுத்திகரிப்பு ஃபில்டர். அதுக்கு காற்றுப்புகாத ஒரு செட்டப் அமைக்கணும். அந்த சுத்திகரிப்பு ஃபில்டருக்கு ஒரு லட்சம் மேல ஆகும். அதுக்குப் பதில் குக்கரை பயன்படுத்தி அதுமேல மீட்டர் செட் பண்ணோம்.
இந்த திசு வளர்ப்பு முறைகள்ல ஏகப்பட்ட செடிகள் உருவாக்கியிருக் கோம். அப்படித்தான் பாண்டிச்சேரி மலர் கண் காட்சிக்கு கனகாம்பரம் கேட்டிருந்தாங்க. அப்போ ஒரு கண்டு ரூ.500. காரணம் கனகாம்பரம் பயிரிடற விவசாயிகள் குறைவு. நாங்க இந்த திசு வளர்ப்பு மூலமா ரூ.500 இருந்த கனகாம்பர செடிகளை
ரூ.5க்கு கொடுத்தோம். இது மட்டும் இல்லாமல் நெய் மிளகாயை அறிமுகம் செய்தோம். 2012ல கிராஸ் செடி வேலைகளுக் காக காட்டுக்குள்ள போயிட்டு இருக்கும் போது ஒரு சிவப்பு பழம் பார்த்தோம். அதை தெரியாம கடிச்சிட்டோம். அப்படி ஒரு காரம். அந்தச் செடியையும் சாதாரண மிளகாய் செடியையும் கலப்பினம் செய் தோம். அதாவது நீங்க சாதாரண மிளகாய் ஒரு 10 போட்டா இதுல ஒண்ணு போட்டா போதும். மேலும் நெய் வாசனையும் இதுல வரும்’’ என்னும் ஸ்ரீலட்சுமி விவசாயத்தைக் காப்பாற்ற நினைத்தால் போராட்டம் கைகொடுக்காது.
அடுத்த தலைமுறைக்கு நிகரான போட்டிதான் கைகொடுக்கும் என்கிறார். ‘‘நான் படிச்சது கம்ப்யூட்டர் சைன்ஸ் மற்றும் எம்.பி.ஏ. எங்க அப்பா மற்ற விவசாயிகள் மாதிரியே ஏதோ பயிரிட்டோம், வளர்த்தோம், மார்க்கெட்ல கொடுக்குற காசுக்கு வித்தோம்… இப்படி வாழ்க்கையை ஓட்டியிருந்தா இந்த விவசாயமே வேண்டாம்னு சொல்லிட்டு நான் இந்நேரம் ஏதோ ஒரு ஐடி கம்பெனியில உட்காந்து எவனோ சொல்ற வேலையைதான் செய்திட்டு இருந்திருப்பேன். ஆனால் அவரு இந்த வேலை மத்த வேலைய விட எவ்வளவு சிறப்பான வருமானம் கொடுக்கும்கிறதையும் மனநிம்மதி கொடுக்கும் கிறதையும் சரியா கத்துக்கொடுத்தார். தண்ணினா லிட்டர் என்ன விலைன்னு கேட்கற இஸ்ரேல் இன்னைக்கு விவ சாயத்துல இரண்டாவது இடத்துல இருக்கு. ஆனால் நாம நினைக்கவே சோகமா இருக்கு. சொட்டு நீர் பாசனம், ஒட்டு முறை, கலப்பினம், திசு வளர்ப்பு இப்படி எவ்வளவோ இருக்கு. எல்லாரும் போடுகிற கொய்யாவையே நானும் போடுவேன்.
அதை கிலோ ரூ.10க்கு விற்பேனு சொன்னா எப்படி? அதே கொய்யாவுல சிவப்பு நிற கொய்யாக்களை பயிரிட்டா கிலோ ரூ.70க்கு விற்கலாம். ஒரு இடத்துல எது அரிதா கிடைக்குமோ அதை பயிரிடணும். எல்லாத்துக்கும் அரசாங்கம் வரணும்னா நம்ம கத்துக்கிட்டேதான் இருக்கணும். இந்தியாவுல ஒரு விவசாயி 20 பேருக்கு சோறு போடுறான். ஆனா இஸ்ரேல் மாதிரி மேலை நாடுகள்ல ஒரு விவசாயி 200 பேருக்கு சோறு போடுறான். விவசாயிகள் விஞ்ஞானிகளா மாறணும். எங்களுடைய ஒட்டு முறைகள் மூலமா ஒரே செடியில கத்தரிக்காய், தக்காளி, மிளகாய்… மற்றொரு செடியில் சின்ன கத்தரிக்காய், பெரிய கத்தரிக்காய், இப்படி மூணுவிதமான கத்தரிக்காய், மேலும் ஒரு ஆப்பிள் அளவிற்கு பெரிய நவாப்பழங்களைக் கொடுக்கும் நாவல் மரத்தை எல்லாம் உருவாக்கியிருக்கோம். உங்களைத் திரும்பி பார்க்கற அளவுக்கு நீங்க சாதனை செய்தா நிச்சயம் அதே அரசாங்கம் நமக்குக் கைகொடுக்கும். நான் அப்படித்தான் சாதிச்சிட்டு இருக்கேன்.
மத்திய அரசுடைய அத்தனை அக்ரி வேலைகளிலும் என்னை இணைச்சு எனக்கும் நிறைய ஆதரவுகள் கொடுத்திட்டு இருக்காங்க…’’ தான் ஒரு விவசாயி என்பதில் பெருமையும் கர்வமும் சூழ பேசும் ஸ்ரீலட்சுமியை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்துள்ளார். நெய் மிளகாய் கண்டுபிடிப்பிற்கான பசுமை சுடர் விருது, மெர்குரி சாதனை யாளர் விருது, 2018ல் ஜெர்மன் நாட்டின் அறிவியல் மருத்துவர் விருது என பல விருதுகளையும் குவித்து வருகிறார். மேலும் ஸ்ரீலட்சுமிக்கு அடுத்த மாதம் அமெரிக்காவிலிருந்து சர்வதேச இளம் சாதனையாளர் விருதும், கோவையிலிருந்து விவசாய சாதனையாளர் விருதும் கிடைக்க இருக்கிறது. ‘விவசாயி நினைத்தால் எதையும் உருவாக்கலாம்’ என நம்பிக்கையோடு சொல்லும் ஸ்ரீலட்சுமி காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களில் விளையும் ஆப்பிள்களை இங்கே பயிரிட்டு அறுவடையும் செய்யவிருக்கிறார். அனைத்தையும் தன்னைப் போன்ற ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் சொல்லிக் கொடுக்கவும் தயார் என்கிறார்.
Average Rating