கலையால் எங்களை வெளிப்படுத்துகிறோம்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 56 Second

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பேஸஸ் கலை மையத்தில், கவின் கலைக்கல்லூரியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் ஒருங்கிணைத்த கலைக்கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பெரும் பங்கு பெண்களுடையது. சமகாலத்தில் தன்னை உள ரீதியாகப் பாதிக்கின்ற சம்பவங்கள், நினைவுகளின் வெளிப்பாடாக தங்கள் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

சிந்துஜா

‘‘நான் என்னவாக இருக்கிறேன் என்பதை வெளிக் கொணர்வதற்கு இந்தக் கலை உதவுகிறது. அதில் என்னுடைய கோவங்கள், கேள்விகள், வலிகள் வெளிப்படுகின்றன” என்று பேச துவங்கினார் சிந்துஜா. “பாதுகாப்பான இடத்தில் இருக்கும் என்னை, என் குடும்பம் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், பெண் என்று வரும் போது, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, ‘நீ இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற கட்டுப்பாடு சேர்ந்து கொள்கிறது. இந்த தீர்மானத்தை யார் விதித்தது? அதை எதிர்த்து நான் சண்டை போடும் போது, ‘நீ ஏன் இப்படி இருக்கிறாய்’ என்ற கேள்விகள் மட்டுமே வருகிறது. நான் ஒரு கலைஞராக இருக்க ஆசைப்படுகிறேன். கல்யாணம் வேண்டாம் என்கிறேன். அதை ஏன் என்னால் செய்ய முடியவில்லை. ஆண்களின் திருமணத்திற்கு, பெண்களை போல் தீவிரம் காட்டுவதில்லை. பெண்கள் திருமணம் செய்தால்தான் செட்டில் ஆக முடியும். செட்டில் என்றால் என்ன?” என்று தனது கேள்விகளை முன்வைத்த சிந்துஜா தான் வரைந்த ஓவியங்கள் பற்றி விளக்கினார்.

“பெண்ணின் பிறப்புறுப்பை எனது கலையின் மூலம் காண்பித்திருக்கிறேன். எல்லா கெட்ட வார்த்தைகளும் பெண்ணுடைய பிறப்புறுப்பு சார்ந்திருக்கிறது. அம்மா, அக்கா, தங்கச்சி… உயிர் கொடுக்கும் ஒரு விஷயத்தை இவ்வளவு இழிவா சித்தரிக்கிறார்கள். அது ஒன்றுமில்லை எல்லோருமே பார்க்க வேண்டும் என்பதற்காக வரைந்திருக்கிறேன். அதே போல் பெண்களின் மாதவிடாயை பாசிமணியில் சித்தரித்திருக்கேன். பாசிமணிக்கு கூட ஒரு மதிப்பு இருக்கிறது. மாதவிடாய் என்று வரும் போது தீண்டாமை தான் முன் வருகிறது. பெண்களுக்கு இயற்கையாக நடக்கும் விஷயத்தை கேவலமா பேச வேண்டுமா? மற்றொரு ஓவியத்தில், பெண்ணின் மார்பில் கண்ணாடி பதித்திருக்கேன். அதைப் பார்க்கும் எல்லோருமே அவர்களாகவே பிரதிபலிக்கிறார்கள்” என்றார்.

ரோஜா, தாமரை போன்ற மலர்களையே ஓவியங்களாகப் பார்த்து வந்த நமக்கு, சங்குப்பூ, கள்ளிப் பூ, செம்பருத்திப் பூக்களும் இருக்கின்றன என்று தனது படைப்பில் காட்டியுள்ள சிந்துஜா, பெண்ணியம் பேசுபவர்களின் மனநிலை பற்றியும் கூறுகிறார், “பெண்களை ரசிப்பவர்கள், அவர்களின் தேவையை புரிந்து கொள்வதில்லை. நிறையப் பேர் பெண்ணியம் பேசுகிறார்கள். அவர்களின் உண்மையான சுயரூபம் என்ன என்பதை அவரை சார்ந்திருக்கும் பெண்ணிடம் பேசினால்தான் தெரியும். கேள்விகள் மட்டுமே தொடுக்கிறோம். அதற்கான பதில்கள் இல்லை. அதை கொடுக்கவும் யாரும் தயாராக இல்லை. பெண்ணை மதிப்பவர்கள் பெரிய எழுத்தாளராகவோ, படிப்பாளியாகவோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. சாதாரணமாக அவர்களை புரிந்து கொண்டாலே போதும். புரிதல் குறைவாகவும், அடக்குமுறை அதிகமாகவும் இருக்கிறது. இன்று பல பெண்கள் சுதந்திரமாக வெளியில் வந்திருக்கிறார்கள். இருந்தும் அவர்களுக்கான பிரச்சினைகள் இன்னும் ஓயவில்லை’’ என்று கூறும் சிந்துஜா, ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் பிரச்னையை தன் ஓவியம் மூலம் வெளிப்படுத்தி இருப்பதோடு, தன்னையே மாதிரியாக சித்தரித்துள்ளார்.

சாய்பிரசன்னா

‘‘பெண்களால் நிறைய விஷயங்கள் வெளியில் சொல்லக் கூடியதாகவும், சிலவற்றை சொல்ல முடியாததாகவும் இருக்கிறது. அதை என் கலை மூலம் சொல்லி இருக்கிறேன். சிறு வயதில் நான் கேள்விப்படாத விஷயங்களை, இந்தத் தலைமுறை குழந்தைகள் அறிந்து வைத்துள்ளனர். ஊடகங்களின் பங்கு இதற்கு முக்கிய காரணம். எந்தெந்த வயதில் என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிந்து கொண்டால் இயற்கை. சிறு வயதிலேயே காதல் தோல்வியால் தற்கொலைக்கு போகும் அளவிற்கு அதன் தாக்கம்ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளை அந்த நேரம் சமாளித்தால் போதும் என்ற மனநிலையில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் உள்ளனர். பெண்களைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு பெற்றோரும், அவள் சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள், இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் மனம் திறந்து தனது மகளோடு பேச வேண்டும்.

பல துறைகளில் பெண்கள் இன்று முன்னேறி இருக்கிறார்கள். ஆனால், எவ்வளவு பேர் அதன் இறுதி வரை சென்றிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. அவளை சூழ்ந்து இருக்கும் பிரச்னைகளால், மூச்சு திணறுகிறாள். வெளியே வரவேண்டும் என முயற்சி செய்தும் முடியவில்லை. அந்த நேரத்தில் உதவ ஒரு கை வருகிறது. அதுவும் வலியை கொடுப்பது தான் வேதனை. பெண் என்றால் அடக்கம், ஒடுக்கமா ஒரு வட்டத்துக்குள் தான் இருக்க வேண்டும் என்ற வரையறை இங்குள்ளது’’ என்ற சாய்பிரசன்னா பெண்களின் போராட்டமான வாழ்வைத் தனது கலைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

பத்மபிரியா

‘‘மற்ற உயிரினங்கள், பொருட்கள் மீது எந்த அளவு தொடர்பில் இருக்கிறேன். அதனுடன் இருக்கும் என் உறவினை எப்படி வெளிப்படுத்துகிறேன்” என்று பேச ஆரம்பித்த பத்மபிரியா, இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் இழந்திருக்கும் வாழ்வை நம் கண் முன் நிறுத்தியுள்ளார். தனக்கும், தன் பாட்டிக்கும் இடையே இருக்கும் உறவு பற்றிய நினைவுகளை தன் கலை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். “பாட்டி இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அம்மா சொல்லுவாங்க நான் பாட்டி மாதிரி இருக்கேன்னு. அதை இப்போது உணர்கிறேன். அவங்க கூட வாழ்ந்த வாழ்க்கையை யோசித்து பார்க்கிறேன். இன்றைக்கு இருக்கும் தலைமுறையினரில் பெரும்பாலும் தாத்தா, பாட்டியுடன் தொடர்பில்லாமல்தான் இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். காரணம் பாட்டி ஊரில் இருந்தாங்க. அதனால் தான் இன்றைய தலைமுறையினர் ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று தடுமாறுகிறார்கள்.

பாட்டியுடன் நான் அதிகம் பேசியதில்லை. ஆனால், அவங்க எப்படி யோசிப்பாங்க, வெளிப்படுத்துவாங்கன்னு தெரியும். அன்றிருந்த பாட்டிகளின் உடல் பலம், மன தைரியம் இன்றிருக்கும் பெண்களுக்கு குறைந்துவிட்டது” என்றார்.“நான் பயன்படுத்தியிருக்கிற வண்ணங் களில், பேப்பரில் பாட்டியுடைய நினைவு கள் உள்ளது. முறத்தில் பூசும் காகிதக் கூழ் மற்றும் வெந்தயம் கொண்டு பேப்பர் செய்திருக்கிறேன். சின்ன வயதில் பாட்டி எனக்குக் கற்றுக் கொடுத்தது. வெற்றிலை, சுண்ணாம்பு, கொட்டப் பாக்கு மூன்றையும் அரைத்து அதிலிருந்து வண்ணங்களை உருவாக்கியிருக்கேன்” என்றவர் தன் ஓவியங்களை பற்றி விவரித்தார். “இந்த கோலம் பாட்டி போட்டது. ஊரிலேயே கோலத்துக்கு ஃபேமஸான ஆள் பாட்டி. ரோட்டில் போகும் போது ஏதாவது ஒரு கோலத்தை பார்த்தால், உடனே வீட்டிற்கு வந்து அதை அப்படியே வரைந்து பார்ப்பாங்க.

திருவாரூர் மாவட்டம் விளக்குடி தான் பாட்டி வாழ்ந்து மறைந்த ஊர். அதைச் சுற்றியுள்ள ஓவியங்கள், அவரது பிள்ளைகள் மணம் முடித்துச் சென்ற ஊர். அதைக் குறிப்பதற்காகவே தொப்புள் கொடி போன்று வரைந்தேன். அதே நேரத்தில் கால மாற்றத்தில் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் விதமாக தனித்தனி ஓவியங்களாக வரைந்தேன்” என்றவரிடம் மண்டையோட்டு ஓவியம் பற்றி கேட்டபோது…“பாட்டி இறந்தாங்க, சுடுகாட்டுக்குக் கொண்டு போனாங்க அதன் பிறகு… மண்டை ஓடெல்லாம் அங்கே பார்த்ததாக அண்ணன் சொன்னது நினைவு. சமீபத்தில் அடிக்கடி யோசிக்கும் போது கனவில் அந்த மண்டை ஓடெல்லாம் வந்தது. இதை பாட்டியோடதாக உருவகித்து வரைந்துள்ளேன்” என்றவர் இந்த ஓவியங்களை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களின் பாட்டியின் நினைவுகளை அசை போட்டது அவரின் கலைக்கான அங்கீகாரம் என்றார்.

தீபிகா

‘‘அடிப்படையில் நான் ஒரு பெயிண்டர். கவின் கல்லூரியில் படித்த போது சிலை வடிவமைப்பில் ஆர்வம் அதிகமானது. இந்த சமூகத்தில் நான் என்னவாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக எனது கலையை பயன்படுத்துகிறேன்’’ என்று கூறும் தீபிகா தன்னை ஒரு ஆந்தையாக பாவிக்கிறார். ‘‘இரவில்தான் அதிக வேலைகள் செய்கிறேன். ஆந்தை இருட்டிலிருந்து ஒளியைப் பார்க்கும் என்பார்கள். அந்த மாதிரியான விஷயம்தான் எனக்குள் பார்த்தேன். பொதுவாக இங்கு ஆந்தையை அபசகுனமாகவும் அதன் உருவத்தை அருவெறுப்பாகப் பார்க்கிறார்கள்” என்ற தீபிகா, தனது படைப்பை பற்றி விவரித்தார். “ இந்த ஆந்தையை மரகட்டையில் உளியால் செதுக்கி இருக்கேன். இரவில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அந்த உளி சத்தம் மட்டும் கேட்பது அவ்வளவு சுகம். இரவின் நிசப்தத்தில் இருளை உணர்வது சொர்க்கம்’’ என்றார்.

இவரின் பறக்கும் பெண் சிற்பம் பற்றி சொன்னபோது, “பெண்கள் கனவில் எப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த கனவுகள் நிஜத்தில் வரும் போது தடைகள் பல. எந்த ஒரு பிரச்சினையை பற்றியும் சிந்திக்காமல், அந்த இடத்திலிருந்து பறந்து விடுங்கள்” என்கிறார் தீபிகா.இங்குள்ள ஒவ்வொரு பெண் கலைஞர்களும் தங்கள் கலையின் மூலம் முன் வைப்பது புரிதல், உரையாடல். சமூகம், குடும்பம், பொருளாதாரம்… “நாங்கள் தடைகளை தாண்டி எங்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அதை தடுக்காதீர்கள்” என்றனர் நால்வரும் கோரசாக.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இந்தியாவின் 38,000 சதுர கி.மீ நிலத்தை கபளீகரம் செய்த சீனா!! (கட்டுரை)