இருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்!! (மருத்துவம்)
மருத்துவம் குறித்து ஆய்வு செய்து வந்த நம் முன்னோர்கள், மலைகள், காடுகளை கடந்து சென்று மூலிகை செடிகளை கண்டறிந்தனர். ஆனால் தற்போது அவை கடைத்தெருக்களிலே எளிதில் கிடைப்பதால், இயற்கை மருத்துவத்தின் பயன்களை உணர்ந்தவர்கள் அதனை உணவோடு எடுத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வகை உணவு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருந்தாகவே அமைந்து விடுகிறது. அத்தகைய மூலிகை பொருட்களில் ஒன்றான சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.
சுண்டைக்காயில் பால் சுண்டை மற்றும் மலை அல்லது காட்டு சுண்டை என இரண்டு வகை உள்ளது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது. குடல் புழுக்களை அகற்றி செரிமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. குறிப்பாக, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. வயிறு வீக்கம் காண்பது, வயிறு உப்புசம், வயிறு பொருமல், அஜீரண கோளாறுகளுக்கு சுண்டை வற்றல் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
பல சத்துக்களை உள்ளடக்கிய டானிக்காகவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. சுண்டைக்காயை பயன்படுத்தி வயிற்று புழுக்களை அகற்றும் துவையல் செய்யலாம். தேவையான பொருட்கள்: சுண்டைக்காய் (நசுக்கி தண்ணீரில் போட்டது), சின்ன வெங்காயம், நல்லெண்ணெய், புளி, வரமிளகாய், தேங்காய் துண்டு, பெருங்காயப்பொடி, உப்பு, சீரகம். வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்க்கவும். இதனுடன் சுண்டைக்காய், தேங்காய் துண்டு சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையுடன் பெருங்காயப்பொடி, புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்து கொள்ளவும். சுண்டைக்காயின் கசப்பு தன்மையை மறைத்து உணவுக்கு சுவை ஊட்டுவதற்கென, வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது பெருங்காயப்பொடி, சீரகம் சேர்த்து பொரிய விடவும். இதனுடன் துவையலை சேர்த்து வதக்கி எடுப்பதால் நல்ல சுவை கிடைக்கும். சுண்டைக்காயை மைய அரைத்து துவையலாக பயன்படுத்துவதால் வயிற்று கோளாறுகளை அகற்றுகிறது. பசியை தூண்டுகிறது.
இதில் உள்ள கார்பனேட்டிவ் தன்மை வயிற்றில் சேரும் காற்றினை அகற்றுகிறது. தினமும் எடுத்துக்கொள்வதால் வயிற்று கிருமிகளை வெளித்தள்ளுகிறது. இருமலை சரிசெய்யும் சுண்டை வற்றல்: தேவையான பொருட்கள்: சுண்டைக்காய், புளி, மோர், தயிர். சுண்டைக்காயை நசுக்கி தயிர் அல்லது புளி கரைசலில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின் 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காயவைத்து எடுப்பதால் சுண்டை வற்றலாக பல நாட்கள் கெடாமல் சேர்த்து வைக்கலாம்.
வற்றலை பொடி செய்து இருமலுக்கு மருந்தாகவும், வயிற்று வலி, உப்புசம் கோளாறுக்கு சிறந்த பானமாகவும் பயன்படுத்தலாம். வயிற்று கோளாறின் போது சுண்டை வற்றல் பொடியை, மோரில் உப்புடன் கலந்து குடிக்கலாம். அதேபோல் இருமல் வேளைகளில் சுண்டை வற்றல் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். நெஞ்சக சளியை வேர் அறுக்கும் சுண்டை வற்றலை தினமும் பயன்படுத்துதல் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தரவல்லதாய் இருக்கிறது.
Average Rating