பெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்!! (மருத்துவம்)
நமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், உணவு பொருட்களை கொண்டு வீட்டிலே இருந்தபடி நோய்க்கான மருந்து தயாரிப்பது பற்றியும், இயற்கையாகவே மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவது குறித்தும் பார்த்து வருகிறோம். அந்தவகையில், பெண்களின் முகம் மற்றும் சருமப்பொலிவை மெருகேற்றி தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் அழகு குறிப்பு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
முகம் பொலிவு பெறுதல், முகச்சுருக்கம் இன்மை, நகங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வது, தலைமுடியை மென்மையாக, கருமையாக பராமரிப்பது, உடல் நிறத்தை பேணி செழுமையுடன் வைத்துக்கொள்வது ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் சோற்றுக்கற்றாழை, மருதாணி இலை, கதம்பப்பூ ஆகியவற்றின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். கற்றாழையை கொண்டு முகத்தை அழகுற செய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்- மஞ்சள் கிழங்கு அல்லது பொடி, சோற்றுக்கற்றாழை ஜூஸ்.
பசுமையான மஞ்சள் கிழங்கை சிறிதாக நறுக்கி அரைத்து கொள்ளவும், அதனுடன் கற்றாழை ஜூஸ் சேர்த்து கலக்கி மாஸ்க் போல் முகம் மற்றும் வெயில் படும் இடங்களில் வாரம் ஒரு முறை பயன்படுத்தி வர, உடலின் கருமை நிறம் மறைந்து பளபளப்பு ஏற்படும். இந்த மாஸ்க் சருமத்தை மென்மையாகவும், தொற்று கிருமிகளில் இருந்தும் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சளை முகத்தில் பயன்படுத்தி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியன மறையும்.
கதம்ப பூவை கொண்டு கண்களுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வாசனைக்காக பூக்களுடன் இணைத்து கட்டப்படும் இரண்டு வகை மூலிகைகள் திருநீறு பச்சிலை மற்றும் மரிக்கொழுந்து. இவ்விரு இலைகளையும் தலையில் தனித்தும் சூடலாம் அல்லது கதம்பப்பூ என்று கூறப்படும் மல்லிப்பூ(முல்லை), கனகாமரம் ஆகியவற்றுடன் இணைத்தும் தலையில் சூடலாம். இதனால் பேன், பொடுகு, தலைவலி பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண்கள் மற்றும் தலை குளிர்ச்சி அடைவதோடு, மன அமைதி பெற்று கண் நரம்புகள் வலுப்பெருகின்றன.
விழாக்களில் கைகளை அலங்கரிக்கும் மருதாணியை கொண்டு மருந்து தயாரிக்கலாம். விழாக்களின்போது பெண்கள் கைகளில் மருதாணியிட்டு கொள்வது வழக்கம். அவ்வாறு மருதாணி அரைக்கும்போது, எலுமிச்சை சாறு கலந்து பூசுவதால் செம்மை நிறத்தை அதிகரிக்க செய்யும். இதனை நகங்களில் பூசுவதால் நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, கிருமி தாக்குதல் தவிர்க்கப்படும். கையில் பூசும்போது பித்தம், வாதம் ஆகியவற்றை சமன் செய்து மனதுக்கு அமைதியை தருகிறது. வெயிலுக்கு இதமான தலையை குளிர்ச்சி செய்யும் ஹேர் ஆயில் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் வற்றல் பொடி, மருதாணி இலை விழுது, சோற்றுக்கற்றாழை சாறு. தேங்காய் எண்ணெய்யில் நெல்லிக்காய் பொடி, மருதாணி இலை விழுது, சோற்றுக்கற்றாழை, எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக்கவும். அவை தைலப்பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதனை வெயில் காலங்களில் தலையில் தேய்த்து வர உடல் சூடு, கண் சிவப்பு, முடிகொட்டுதல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
Average Rating