உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோடைகாலத்தில் விரும்பி உண்ணக்கூடிய தர்பூசணியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட தர்பூசணி நீர்ச்சத்தை அதிகம் உள்ளடக்கியது. நாவறட்சி, தாகம், உடல் உஷ்ணத்தை போக்கக்கூடியது. நோய் நீக்கியாக விளங்கும் தர்பூசணி, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. இதில், வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண்பார்வை குறைபாடுகளை களைகிறது. பார்வையை பலப்படுத்துகிறது. சிறுநீரகத்தை சீர் செய்கிறது. சிறுநீரை பெருக்கி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. தர்பூசணியை பயன்படுத்தி ரத்த அழுத்த குறைபாடினால் உண்டாகும் தலைசுற்றல், மயக்கம், உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தர்பூசணி, சீரகம், அதிமதுரம், வெல்லம். செய்முறை: தர்பூசணி பழச்சாறுடன் அரை ஸ்பூன் சீரகப் பொடி, அரை ஸ்பூன் அதிமதுர பொடி, வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் சமன்படும். தலைசுற்றல், மயக்கம் சரியாகும். தர்பூசணியை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தர்பூசணியின் வெள்ளை பகுதியை துண்டுகளாக்கி 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.
இதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு நசுக்கிய தர்பூசணி விதை, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீரக கற்கள் கரையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. தர்பூசணியின் வெண் தசை பகுதியில் அதிகளவு சத்து உள்ளது. இதை சுரைக்காய் போன்று கூட்டு வைத்து சாப்பிடலாம். தர்பூசணி விதை உடலுக்கு பலம் கொடுக்கும். கிருமிகளை அழிக்க கூடிய தன்மை கொண்டது.
தர்பூசணியை கொண்டு வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். அரிசி மாவு, பாசி பயறு மாவுடன் தர்பூசணி பழச்சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்துக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் சுரப்பு கட்டுப்படும். குளிர்ச்சி தரும் மேல்பூச்சாக தர்பூசணி விளங்குகிறது. இது, தோலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. இதனால் தோற்றப்பொலிவு ஏற்படும். உடல் எரிச்சலை தணிக்கும் தன்மை கொண்ட தர்பூசணி குடல் புண்களை ஆற்றும்.
தோலுக்கு பலம், மென்மை, பளபளப்பை தரக் கூடியது. இதை அடிக்கடி சாப்பிட்டுவர தலைமுடி நன்றாக வளரும். பார்வை கூர்மை பெறும். கோடைகாலத்தில் உஷ்ணத்தை தணிக்க கூடியதாக விளங்கும் தர்பூசணியை அடிக்கடி சாப்பிட்டுவர நன்மை ஏற்படும். அதிக வெயிலால் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். பழைய சோற்றில் தயிர் சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர உள் உறுப்புகளின் எரிச்சல் சரியாகும். இது உடலுக்கு பலம் அற்புதமான உணவாக விளங்குகிறது.
Average Rating