பசியை தூண்டும் நார்த்தங்காய்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் நார்த்தங்காயின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
புளிப்பு சுவையை உடைய நார்த்தங்காய், பூஞ்சை காளான்களை போக்குகிறது. நோய் வராமல் தடுக்கிறது. பசியை தூண்டக்கூடியதாக விளங்குகிறது. வயிற்று வலியை போக்க கூடியது. மணம் தருவதாக உள்ளது. கோடைகாலத்தில் எளிதில் கிடைக்க கூடிய நாரத்தங்காயை பயன்படுத்தி உள் உறுப்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நார்த்தங்காய், வெற்றிலை, லவங்கம், பனங்கற்கண்டு, ரோஜா.செய்முறை: நார்த்தங்காய் தோல் அல்லது கிச்சிலிகாய் தோல் எடுக்கவும்.
இதில், வெற்றிலையை சிறு துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ரோஜா பூக்கள், லவங்கம், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தினமும் சுமார் 100 மில்லி குடித்துவர உள் உறுப்புகளுக்கு பலம் தரும். பசியை தூண்டக் கூடியதாகிறது. நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். சிறுநீரை தாராளமாக வெளியேற்றும். ஈரலை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்ய கூடியதாக விளங்குகிறது.
நார்த்தங்காய் தோலை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நார்த்தங்காய், பனங்கற்கண்டு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி, ஏலக்காய்.செய்முறை: நார்த்தங்காய் தோலை துண்டுகளாக்கி 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்து உலர்த்தவும். இதனுடன் பனங்கற்கண்டு, ஒரு ஸ்பூன் நாரத்தை சாறு மற்றும் ஜாதிக்காய், ஜாதிபத்ரி, ஏலக்காய் சேர்ந்த கலந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை 5 நாட்கள் வெயிலில் வைத்தால் ஜாம் போன்று மாறும். இதை தினமும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர கல்லீரல், கணையம் பலமாகும்.
நம்முடைய முன்னோர்கள் கூழ், பழைய சாதம் ஆகியவற்றை சாப்பிட நார்த்தங்காய் ஊறுகாயை பயன்படுத்தினார்கள். இதனால் செரிமான கோளாறு இல்லாமல் உடல் சீராக இருந்தது. நார்த்தங்காயை பயன்படுத்தி பசியை தூண்டும் பானம் தயாரிக்கலாம். ஒரு பங்கு நார்த்தங்காய் சாறுடன், ஒன்னரை பங்கு பனங்கற்கண்டு சேர்க்கவும். இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், ஒரு பங்கு பாகு, 3 பங்கு நீர் சேர்த்து கலந்து குடித்துவர பசியை தூண்டும். வயிற்று கோளாறுகள் சரியாகும். இது, இதய செயல்பாட்டை சீர் செய்கிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுகளை போக்குகிறது. நார்த்தங்காயை எடுத்துகொள்வது உடல் நலத்துக்கு நல்லது.
தொண்டை வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். காது, மூக்கு, தொண்டை போன்றவற்றில் பிரச்னை ஏற்பட்டால், அதற்கு சளி காரணமாக அமைகிறது. சளி இருக்கும்போது தொண்டையில் தொற்று கிருமிகள் பற்றும். இதனால் தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதை தவிர்க்க குளிர்பானங்கள் குடிக்க கூடாது. பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற நீர்காய்களை தவிர்க்க வேண்டும். இனிப்புகளை குறைவாக சாப்பிட வேண்டும். பாலுடன் மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். பூண்டு எடுத்து பச்சையாக நசுக்கி தொண்டையில் பூசுவதால் வலி போகும்.
Average Rating