மீதமிருக்கின்ற ஜனநாயகம் !! (கட்டுரை)
இலங்கையின் அரசமைப்பின் சில விடயங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், ஆட்சியாளர்களின் அதிகார வேட்கை மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி பற்றிய கேள்விகளும் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் தொடர்பிலான ஐயப்பாடுகளும் மேலெழுந்துள்ளன.
புதிய திருத்தச் சட்டமூலமானது, ‘ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடு’ என்று, பிரதான எதிர்க்கட்சிகளும் சில சிறுபான்மைக் கட்சிகளும் கூறிவருகின்றன. ஆனபோதிலும், ஆளும் பொதுஜன பெரமுன, மேற்குறிப்பிட்ட விமர்சனங்களை எல்லாம் கணக்கிலெடுக்காமல், நாட்டின் ஸ்திரத்தன்மையை இது உறுதிப்படுத்துவதற்கான திருத்தமே என்றும் இச்சட்டமூலத்தை நிறைவேற்றியே தீருவோம் என்ற தோரணையில், அடுத்தகட்ட நகர்வுகளைச் செய்யத் தொடங்கியிருக்கின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று கூறி, 2015இல் ஆட்சிபீடமேறிய மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம், உண்மையில் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக இல்லாமலாக்கியதாகக் கூறமுடியாது. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரங்கள், ஓரளவுக்குக் குறைக்கப்பட்டன. பின்வந்த காலத்தில், வினைத்திறனற்றதும் கோமாளித்தனமானதுமான ஓர் அரசியல் போக்கை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கடைப்பிடித்ததாக விமர்சனங்கள் எழுந்தாலும் கூட, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர், தனக்குள்ள அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்வந்தமை அபூர்மான ஒன்றாகவே கருதப்பட்டது.
ஆனாலும், நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்விகரமான அரசியல் எவ்வாறு பொதுஜன பெரமுனவுக்கு சாதகமாக அமைந்ததோ, அவ்வாறே 19ஆவது திருத்தத்தின் பலாபலன்களை நாட்டு மக்களுக்காக சரியாகப் பயன்படுத்தாமல் விட்டதும் அதேபோன்று, 19ஆவது திருத்தமே ஸ்திரமற்ற ஆட்சிக்கு வழிகோலியது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியதுமே, 20ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிய சாதகமான மனோநிலையை அல்லது எதிர்ப்பற்ற நிலையை பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.
எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகமான திருத்தங்கள், 20ஆவது திருத்தச் சட்டமூலம் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தத்தை நிறைவேற்றிய குறுகிய காலத்துக்குள்ளேயே புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கும் பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, தமக்கு விரும்பிய உள்ளடக்கங்களைக் கொண்ட புதிய அரசமைப்பு வருவதற்கிடையிலேயே நடைமுறையில் இருக்கின்ற 2ஆம் குடியரசு யாப்பில் திருத்தமொன்றை மேற்கொள்ள அவதிப்படுகின்றமையானது, பல்வேறு செய்திகளை உணர்த்தி நிற்கின்றது.
செப்டெம்பர் 2 வெளியிடப்பட்டுள்ள 42 பக்கங்களைக் கொண்ட வர்த்தமானி, பல்வேறு திருத்த முன்மொழிவுகளை உள்ளடக்கியிருக்கின்றது. 2019இன் ஊடாக, பிரதான ஆட்சியாளர் தாம் இழந்ததாகக் கருதுகின்ற முக்கிய அதிகாரங்கள், இதனூடாக மீளப் பெறப்படவுள்ளதாகச் சொல்லலாம். இது, ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் என அவதானிகள் கூறுகின்றனர்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தம் அறிமுகப்படுத்திய பல விடயங்களிலும் அதற்கு முன்பிருந்த ஒரு சில சட்ட ஏற்பாடுகளிலும், தமக்கு விரும்பியவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எத்தனம் செய்துள்ளதைக் காணமுடிகின்றது.
இத்திருத்தமானது, ஜனாதிபதியை நோக்கி அதிகாரங்கள் குவிக்கப்படுவதற்கு வழிகோலும் என்ற தோற்றப்பாடு, பரவலாகவே ஏற்பட்டிருக்கின்றது. இருப்பினும், ஆணைக்குழுக்கள் (சில மாற்றங்களுடன்) தொடர்ந்து இயங்குவதற்கும் தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறையில் இருப்பதற்கும், உத்தேச திருத்தத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் 2 தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்ற கட்டுப்பாட்டை மாற்றியமைக்கும் யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
20ஆவது திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சில திருத்தங்களை, உத்தேச வரைபு உள்ளடக்கி இருக்கவில்லை என்பது ஆறுதலான விடயம்தான். ஆயினும், எல்லா அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவிப்பதற்கான ஒரு முன்னேற்பாடாகத் தோன்றும் உத்தேச திருத்தம், கொஞ்சமாவது மீதமிருக்கின்ற ஜனநாயக நடைமுறைகளில் பின்னடைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.
உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாகவும் இதனைத் தோற்கடிக்க முன்னிற்கப் போவதாகவும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆனால், திருத்தங்கள் எதுவுமின்றி இந்தத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் தினேஸ் குணவர்தன அடித்துக் கூறியிருக்கின்றார்.
ஜனாநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி என்று இதனை வர்ணித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஏனைய கட்சிகளுடன் இணைந்து, 20ஐ தோற்கடிக்க முன்னிற்கப் போவதாக அறிவித்துள்ளது. இதேவேளை, இத்திருத்தத்தின் ஊடாக, தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பில்லை என்று, சிறுபான்மைக் கட்சி ஒன்றின் தலைவரான டக்லஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார்.
ஆயினும், பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், இன்னும் மௌனம் கலைக்கவில்லை. கடந்த காலங்களில், முஸ்லிம்களுக்கு பாதகமான எத்தனையோ சட்டமூலங்களும் திருத்தச் சட்டமூலமும் கொண்டுவரப்பட்ட வேளையில், நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பில் அதிகாரத்துடன் இருந்தபோதே, அதனைத் தடுத்து நிறுத்தாத அல்லது கூட்டத்துடன் கையுயர்த்திய வரலாறு, முஸ்லிம் கட்சிகளுக்கு இருக்கின்றது.
எனவே, உத்தேச 20ஆவது திருத்தத்தில், ஆளும் தரப்பில் இருக்கின்ற முஸ்லிம்
எம்.பி.க்கள், வழக்கம்போல ‘ஒத்து ஊதுவார்கள்’ என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. எதிரணியில் உள்ள கணிசமான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உத்தேச திருத்தச் சட்டமூல விடயத்தில் “பாம்புக்கும் நோகாமல் பாம்புஅடித்த கம்புக்கும் நோகாமல்” செயற்படலாம். ஓரிருவர் ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலம், மிகவும் நுட்பமாக வரைபு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கின்ற சாதாரண சிங்கள மக்களுக்கு, இது ஒரு பாரதூரமான, ஆபத்தான திருத்தமாகத் தெரியாது. நல்லாட்சி காலத்தைப் போலன்றி, ஒரு ஸ்திரமான ஆட்சியை நிலைத்திருக்கச் செய்வதற்காகவே ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதாக சிங்கள மக்களிடத்தில் பரப்புரை மேற்கொள்ளப்படுமிடத்து, அதனை அவர்கள் நம்புவார்கள். இதிலுள்ள பாதகமான விடயங்கள் பற்றி, படித்த, முற்போக்குச் சிங்கள சக்திகளே வெளிப்படையாகப் பேசும்.
எனவே, சிறுபான்மை முஸ்லிம்களும் தமிழர்களும் பார்க்கின்ற கோணத்தில், பெரும்பான்மைச் சிங்கள மக்கள் இதனைப் பார்ப்பார்கள் என்று நம்ப முடியாது. 19ஆவது திருத்தத்தின் அதிகப்படியான அனுகூலங்கள், சிங்கள மக்களைச் சென்றடைய வழிசெய்திருந்தால், ஒருவேளை அவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சிங்கள மக்களது வரவேற்பைப் பெற்ற தகவலறியும் சட்டம், ஆணைக்குழுக்கள் போன்ற விடயங்களில் கை வைக்காமலேயே, அரசாங்கம் 20ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ளமை இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.
20ஆவது திருத்தச் சட்டமூலம், இதற்கு முன்னர் இரு தடவைகள் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதன் முன்மொழிவுகள் வேறுபட்டவை என்பதுடன், அது நிறைவேற்றப்படவும் இல்லை. எனவே, புதிய 20ஆவது திருத்தமும் நிறைவேற்றப்படாமல் விடக்கூடும் என்றாலும், அதற்கான நிகழ்தகவுகள் மிகக் குறைவாகும்.
இந்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு விடப்படுவதுடன், வழக்கம்போல திருத்தங்களுக்கும் உட்படலாம். ஆயினும், திருத்தங்கள் இல்லாமல் அதனை நிறைவேற்றுவதற்கே ஆளும் பொதுஜன பெரமுன பிரயாசைப்படுகின்றது. அதற்கான பலமும் திட்டங்களும், ராஜபக்ஷர்களிடம் இருக்கின்றன. ஆளும்கட்சி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை பெற்றிருக்கின்றது. சுதந்திரக் கட்சிக்காரர்கள் அல்லது வேறு யாரும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் விடயத்தில் முரண்டுபிடிக்கலாம் என்ற அனுமானங்கள் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 9 பேர் ஆதரவளிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், ஏற்கெனவே அரசாங்கத்துடன் இரகசியத் தொடர்புகளைப் பேணி வருகின்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓரிரு முஸ்லிம் எம்.பி.க்களும் ஆதரவளிக்கலாம்.
இந்தப் பின்னணியில், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும், பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகள் ஏற்பட்டாலும்கூட, உத்தேச திருத்தச் சட்டமூலத்தை எவ்வாறு வெற்றிபெறச் செய்வது, அதன்பின்னர் எவ்வாறு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது என்பதற்கான சூட்சுமங்களை, ஆளும் தரப்பு அறியும். தனது இலக்கை அடைவதற்கான எந்த எல்லைவரையும், இந்த ஆட்சியாளர்கள் போவார்கள் என்பதும் நாடறிந்த விடயம்தான்.
உண்மையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அல்லது ஜனாதிபதியிடம் அதிக அதிகாரங்கள் இருக்கும் விதத்திலான ஆட்சி முறைமை என்பது சிறுபான்மை மக்களுக்கு ஒரு காப்பீடாகவும் கருதப்படுகின்றது. நாடாளுமன்றத்திலோ அதற்கு வெளியிலோ, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஏதேனும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஜனாதிபதி நினைத்தால், சிறுபான்மையினருக்கு சாதகமான முடிவுகளை எடுக்க இவ்வதிகாரம் வசதியளிக்கும்.
ஆனால் கடந்த காலங்களில், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அநியாயங்கள் இழைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், நிறைவேற்றதிகாரம் சிறுபான்மையினருக்கு சார்பாகச் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். அவ்வாறே, 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அதிகார மாற்றங்களாலும், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.
ஆக மொத்தத்தில், அரசமைப்பில் என்ன திருத்தம் வந்தாலும், அல்லது புதிய யாப்பே கொண்டு வரப்பட்டாலும், எல்லா ஆட்சியாளர்களும் பொதுவாகச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதையே முதன்மைத் தெரிவாகக் கொள்வர். சிறுபான்மையினருக்கு சார்பாகத் தமது அதிகாரங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்காத வரை, எழுத்தில் என்னதான் சட்ட ஏற்பாடுகள் இருந்தாலும் நமக்குப் பயனில்லை.
இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, 20ஆவது திருத்தச் சட்டமூலத்திலும் அதற்குப் பின்னரான உத்தேச அரசமைப்பிலும், கூடுமானவரை தமது அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கான வியூகங்கள், தமிழ், முஸ்லிம் கட்சிகள் வகுக்க வேண்டியுள்ளது.
Average Rating