கால்களே என் சிறகுகள்!! (மகளிர் பக்கம்)
வாழ்க்கையில் நம்பிக்கையற்று இருக்கிறீர்களா? ஜெஸிகா காக்ஸ் வாழ்க்கையை புரட்டிப் பாருங்கள்.
அமெரிக்க நாட்டின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஜெஸிகா காக்ஸ்!! இவர் பியானோ வாசிக்கிறார்.. கார் ஓட்டுகிறார்… அலைகளுக்கு நடுவே ஸர்ஃபிங்(surfing) செய்கிறார்.. கடலுக்குள் ஸ்கூப்பா டைவிங்(scuba diving) அடிக்கிறார்.. எல்லாவற்றுக்கும் மேலாக காற்றை கிழித்துக்கொண்டு விமானத்தையே இயக்கி வானத்தில் வட்டமடிக்கிறார்… இத்தனை சாகசத்தையும் கைகளால் அல்ல தனது இரண்டு கால்களால் நிகழ்த்துகிறார். ஏன் என்று கேட்கத் தோன்றுகிறதா?
பிறக்கும்போதே தோள் பட்டையில் இருந்து இரண்டு கைகளும் முழுமையாக இல்லாத நிலையில் பிறந்தவர் ஜெஸிகா. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெற்றோர் இவருக்கு செயற்கைக் கைகளைப் பொருத்தினர். பதினான்கு வயது வரை செயற்கை கரங்களோடு வலம் வந்தவர், ஒரு கட்டத்தில் தன்னைப் பற்றி ரொம்பவும் யோசிக்கத் தொடங்கினார்.
தனது அம்மாவிடம், கடவுள் ஏன் என்னை கைகள் இல்லாமல் படைத்தார் என கேள்வி எழுப்பினார். பிறவியிலேயே கைகள் இன்றிப் பிறந்ததால் செயற்கைக் கைகள் தனக்குத் தேவையில்லை என்கிற முடிவிற்கு வருகிறார். அவரின் விருப்பம் போலவே செயற்கை கரங்கள் ஜெஸிகாவிடம் இருந்து நீக்கப்படுகின்றன. தொடர்ந்து தனது இரண்டு கால்களைப் பயன்படுத்தி தனக்கான வேலைகளைச் செய்யத் தன்னைப் பழக்கப்படுத்த முயல்கிறார் இவர்.
கால்கள் இரண்டையும் பயன்படுத்தி பல் துலக்குவது, சீப்பால் கூந்தலை நேர்த்தி செய்வது, தன்னை அழகுபடுத்திக்கொள்வது, உணவு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கண்களில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது, ஷூ லேஸ்களை கட்டுவது, சாகச விளையாட்டுக்களில் ஈடுபடுவது என்று காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறார் கொஞ்சமும் புன்னகை மாறாமல் துள்ளல் நடைபோடும் இந்த நம்பிக்கைப் பெண்.
துவக்கத்தில் கால்களால் தனது தேவைகளை நிறைவேற்ற பயிற்சி எடுத்தபோது நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார். நாட்கள் செல்லச் செல்ல தன்னை அதற்கென சுலபமாகப் பழக்கப்படுத்திக் கொண்டார். தனது பத்தாவது வயதில் தாயாரின் ஒத்துழைப்போடு டேக்வாண்டோ விளையாட விரும்பி பயிற்சி எடுக்கிறார். சிறந்த பயிற்சியாளர் ஒருவர் ஜெஸிகாவிற்கு நம்பிக்கை கொடுக்கவே, கைகளைப் பயன்படுத்தி செய்யும் சண்டைப் பயிற்சிக்கு,
கால்களால் மூர்க்கமாக பயிற்சி எடுக்கிறார். பயிற்சியின் வேகத்தை ஒவ்வொரு பெல்டாகத் தாண்டுவதன் மூலம் நிகழ்த்திக் காட்டிய ஜெஸிகா இறுதியாக ப்ளாக் பெல்ட்டை பெறுகிறார். இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம், டேக்வாண்டோவில் கைகள் இல்லாமல் ப்ளாக் பெல்ட் வாங்கிய முதல் பெண்மணி என்கிற புகழையும் ஜெஸிகா தட்டிச் சென்றுள்ளார்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும், பறப்பதில் ஆர்வம் மேலிட ஏன் விமானத்தை இயக்க கற்றுக்கொள்ளக்கூடாது என்ற கேள்வியோடு அந்த முயற்சியிலும் நம்பிக்கையோட இறங்குகிறார். கைகளால் விமானத்தை இயக்கினாலே சிக்கல்கள் ஏற்படும். ஆனால் ஜெஸிகா தனது இரு கால்களைப் பயன்படுத்தி விமானத்தை இயக்குவதை அனைவரும் ஆச்சரியம் மேலிட வியந்து பார்த்தனர். விமானம் இயக்குவதில் நன்றாக தேர்ச்சி அடைந்தவர், தொடர்ந்து அதற்கான உரிமமும் (licence) பெறுகிறார். 2008ம் ஆண்டில் லைட்ஸ் கோட் விமானத்தை இயக்கும் சான்றிதழைப் பெறுகிறார். கால்களால் விமானத்தை இயக்கும் முதல் பெண் எனும் அடிப்படையில் கின்னஸிலும் இடம் பெற்றுள்ளார் ஜெஸிகா.
தன்னுடைய 14 வயதில் செயற்கை கைகளை நீக்கச் சொல்லியதே தனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப் பெரும் மாற்றம் என நினைவுகூறும் இவர், அரிசோனா பல்கலைக்கழகத்தின் உளவியல் பட்டதாரியும், தனது முன்னாள் டேக்வாண்டோ பயிற்றுவிப்பு மேலாளருமான பேட்ரிக் சேம்பர்லேனை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
புதுப்புது விசயங்களைச் செய்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தயங்காத ஜெஸிகா காக்ஸ், கண்டங்களைக் கடந்து 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சுற்றி நம்பிக்கையூட்டு பேச்சாளராகச் செயல்படுகிறார். இணைய உலகிலும் வலம் வருபவர், மாற்றுத் திறனாளிகளின் அன்றாட வேலை பளுவை குறைக்கும் சுலபமான வழிகளையும், ஆலோசனைகளையும் யூ டியூப் சேனல் வழியாக காணொளியாக வழங்கி வருகிறார்.
ஜெஸிகா குறித்த ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு இதுவரை 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகியுள்ளது. அவரின் வாழ்க்கையைப் பற்றிய சுயசரிதை நூலான disarm your limits எனும் நூல் இதுவரை 6000ம் பிரதிகளைக் கடந்து விற்றுத் தீர்ந்துள்ளது.பெண் தனக்கென ஒரு இடத்தை தக்கவைப்பதே சவாலான நிலையில், ஜெஸிகா இரண்டு கைகளும் இல்லாமல் சாதிப்பது மாபெரும் சாதனை.
Average Rating