இணையத்தை மயக்கும் வீணா!! (மகளிர் பக்கம்)
இசைகளுக்கு எல்லாம் அரசி என்றால் வீணையை தான் குறிப்பிடுவோம். கலைவாணியின் கையில் விற்றிருக்கும் அந்த வீணையின் நாதங்கள் நம் எல்லோரையும் ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்திடும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வீணையின் இசை யாருக்கு தான் பிடிக்காது.
அந்த வீணையின் நாதத்தை யுடியூப் மற்றும் முகநூலில் பதிவு செய்து வருகிறார் வீணா ஸ்ரீவாணி. வீணையின் இழையில் இவரின் விரல்கள் மீன் போல் துள்ளி விளையாட, இசைஞானி இளையராஜா முதல் ரஹ்மான் வரை அத்தனை மேதை களின் பாடல்கள் பிரவேசிக்கின்றன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி சினிமா பாடல்கள் இவர் வீணையில் ஸ்வரமாகிறது.
‘‘என்னோட சொந்த ஊர் ஹைதராபாத். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள நந்தம்புரி கிராமம். அக்ரஹாரத்தில் தான் வளர்ந்தேன். அக்ரஹாரத்தில் பொதுவாக எல்லார் வீட்டிலும் ஏதாவது ஒரு இசை கற்றுக் கொடுப்பது வழக்கம். எங்க வீட்டிலும் என் பெற்றோர் எனக்கு இசை கற்றுக் கொடுத்தார்கள்.
பாட்டு, வீணை இரண்டும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இந்தப் பயணம் என்னுடைய ஏழு வயசில் துவங்கியது. நான் வளர்ந்தது அக்ரஹாரத்தில் என்பதால் சினிமா பாட்டுக்கெல்லாம் அங்கு இடமில்லை. கர்நாடக சங்கீதம் தவிர வேறு எதுவும் பாடக்கூடாது. பாடவும் விடமாட்டாங்க.
ஆனால் எனக்கு எப்போதும் சினிமா பாடல்கள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. காரணம் நாம் ஒரு விஷயத்தை வேண்டாம் என்று தடுக்கும் போது அதன் மேல் தான் நாட்டம் அதிகமாகும். அது மட்டுமில்லை ஒரு கலைஞனை பொறுத்தவரை ஒரே விஷயத்தில் லயிக்கமுடியாது. பல்வேறு விஷயங்களில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் அதன் ஆழம் தெரியும். அதன் தேடல் தான் சினிமா பாடல்கள்.
அப்ப நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். பதினைந்து வயசு. அந்த வயதில் தான் சினிமா பாடல்கள் மேல் மோகம் ஏற்படும். நானும் அதில் விதிவிலக்கு இல்லை. நான் இசை பயின்றதால், வீணையில் கொஞ்சம் கொஞ்சமா சினிமா பாடல்களையும் வாசிக்க ஆரம்பிச்சேன். நான் சினிமா பாடல்கள் வாசிச்சா போதும் என் தோழிகள் எல்லாம் என்னை சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் விரும்பும் பாடல்களை சொல்வார்கள். நானும் வாசிப்பேன். கிட்டத்தட்ட நேயர் விருப்பம் போல் நானும் சலிக்காமல் வாசிப்பேன்.
அப்போது எனக்கு தமிழ் பாட்டோ அல்லது ஹிந்தி பாட்டெல்லாம் தெரியாது. தெலுங்கு பாட்டு மட்டும் தான் தெரியும். அது மட்டும் தான் வாசிப்பேன். அதே சமயம் இந்த பாடல்களை எல்லாம் எங்க வீட்டில் உள்ளவர்கள் முன்னால் வாசிக்க மாட்டேன். அவர்களுக்கு நான் சினிமா பாடல்கள் வாசிப்பேன்னு தெரியாது.
அவர்களுக்கு தெரிந்தா அவ்வளவு தான். என்னை வீணையை எடுக்க கூட விடமாட்டார்கள். காரணம் அவங்க எல்லாரும் கர்நாடக சங்கீதப் பிரியர்கள். அவர்களுக்கு இந்த பாடல்கள் பிடிக்காது’’ என்றவர் சில காலம் வீணை வாசிப்பதை மறந்துவிட்டாராம்.
‘‘பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்க எனக்கு விருப்பமில்லை. ரயில்வே துறை நடத்தும் தேர்வினை எழுதினேன். அதில் தேர்ச்சியும் பெற்றேன். இரண்டு வருடம் ஹைதராபாத்தில் போஸ்டிங் கிடைச்சது. அங்கு தான் பயிற்சியும் எடுத்தேன். ஆனால் என்னவோ எனக்கு அந்த வேலையில் ஆரம்பத்தில் இருந்தே பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை. இரண்டு வருடம் பயிற்சிக் கூட நான் முழுசா முடிக்கவில்லை. பாதியிலேயே விட்டு விட்டு வந்துட்டேன்.
இதற்கிடையில் எனக்கு திருமணம் நிச்சயமாச்சு. திருமணமாகி ஹைதராபாத்தில் செட்டிலாயிட்டேன். இங்கு வந்த பிறகு குடும்பம், குழந்தைகள்ன்னு என்னுடைய வாழ்க்கை எல்லா பெண்களின் இயல்பு வாழ்க்கை போல் நகர்ந்தது. குடும்ப வேலை, குழந்தை பராமரிப்பிற்கே நேரம் சரியாக இருந்ததால், என்னால் வீணையின் மேல் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. நேரமும் கிடைக்கவில்லை. மேலும் எனக்கான குருவும் அமையவில்லை. இதற்கிடையில் 2006ம் ஆண்டு அங்கு மிசஸ் ஆந்திரா போட்டி நடைபெற்றது.
அதில் பங்கேற்றேன். வெற்றி பெற்று பரிசும் ெபற்ேறன். இந்த வெற்றி தான் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் ெகாடுத்தது. ஆந்திரா தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை கிடைச்சது. அதில் சில காலம் இருந்தேன். ஆனால் என்னால் அதை தொடர்ந்து செய்ய முடியவில்ைல. பிறகு ஒரு கட்டத்தில் அந்த வேலையையும் விட்டுவிட்டேன். அந்த சமயம் தான் வீணை பயிற்சியை மறுபடியும் ேமற்ெகாள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர் பல நாள் வீணை வாசிக்க முடியவில்ைல என்று அழுதுள்ளார்.
‘‘கல்யாணமாகி ஹைதராபாத் வந்த பிறகு, என்னால் தொடர்ந்து பயிற்சி எடுக்க முடியாமல் போன காரணம் எனக்கான குரு அமையவில்லை என்பது தான். முறையாக தொடர்ந்து என்னால் பயிற்சி எடுக்க முடியவில்லை. அதை நினைத்து பல நாள் நான் வருந்தியிருக்கேன். அந்த சமயத்தில் தான் எனக்கான குரு ஒருவர் கிடைத்தார். அவரிடம் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். அப்புறம் என் வீடு முழுதும் வீணையின் நாதம் ஒலிக்க ஆரம்பித்தது.
நான் சின்ன வயசில் இசை கற்றுக் கொள்ளும் போது நிறைய வித்வான்கள் இருந்தனர்.
வீணை, பாட்டு, மிருதங்கம், புல்லாங்குழல்… என அக்ரஹாரத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் ஏதாவது ஒரு இசையை கட்டாயமாக கற்றுக் கொள்வோம். ஆனால் இன்றைய தலைமுறைக்கு இசை மேல் குறிப்பாக கர்நாடக இசை மேல் அதிக ஆர்வம் இல்லை.
குறைந்துவிட்டதுன்னு சொல்லலாம். இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு புல்லாங்குழல் மற்றும் வீணையின் ஒலிக்கு வித்தியாசம் தெரிவதில்லை. ஒரு முறை இங்குள்ள இசைப்பள்ளிக்கு சென்றேன். அங்கிருந்த அனைத்து இசைக்கருவிகளும் பாதி உடைந்த நிலையில் இருந்தன.
அதன் நிலையை பார்த்த போது எனக்கு ெராம்பவே மனசு வலித்தது. இசைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருந்தாலும் யாரையும் நாம் வற்புறுத்தி இசையை கற்க செய்ய முடியாது. ஆனால் அதை தொடர்ந்து கேட்க வைத்தால் அவர்களுக்கு இசையின் மேல் ஆர்வத்தை தூண்ட செய்ய முடியும்.
இசைக்கு ஒருவரின் மனதை வசீகரிக்க செய்யும் தன்மை உண்டு. கண்களை மூடி ஒரு இனிமையான இசையைக் கேட்கும் போது நம்மை அறியாமல் நாம் அமைதியான நிலைக்கு செல்வோம். நம்மை அடிமையாக்கும் தன்மை இசைக்கு தவிர வேறு எதற்கும் இல்லை. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் தொழில்நுட்பம் எனக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.
வீணையில் சினிமா பாடல்களை வாசித்து அந்த வீடியோவை முதலில் என்னுடைய முகநூலில் தான் பதிவு செய்தேன். அதற்கு ஏகப்பட்ட லைக் குவிந்தது. ஒரு சிலர் நேயர் விருப்பம் போல் அவர்களுக்கு பிடித்த பாடல்களை பட்டியலிட்டு அதை வாசிக்க சொன்னார்கள். அதையும் வாசித்து பதிவு செய்தேன். ஃபேஸ்புக்கை தொடர்ந்து என்னுடைய வீடியோக்களை யூடியூப்பில் அப்லோட் செய்ய ஆரம்பிச்சேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆந்திரா என்பதால், தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் எனக்கு தெரியாது.
அதனால் தெலுங்கு பட பாடல்களை மட்டுமே வாசித்து அப்லோட் செய்து வந்தேன். சமூகவலைத்தளத்தில் பலதரப்பட்ட மக்கள் இருப்பார்கள். தெலுங்கு தவிர கன்னடம், தமிழ், மலையாளம் என பலதரப்பட்ட மக்கள் தங்களின் விருப்பங்களை தெரிவித்தனர். அதை தொடர்ந்து அந்த மொழி பாடல்களையும் வாசிக்க ஆரம்பிச்சேன்.
எந்த ஒரு பாடலாக இருந்தாலும் அதன் அர்த்தம் புரிந்தால் தான் உணர்வுடன் வெளிப்படுத்த முடியும். சாதாரணமாக வாசிக்கும் ேபாது நம்மால் பாட்டின் சுவையை கொடுக்க முடியாது. அதனால் மொழி தெரியாத பாடல்களை முதலில் திரையில் பார்ப்பேன். பாடலின் காட்சிகள் என்ன உணர்வினை வெளிப்படுத்துகிறதுன்னு தெரிந்து ெகாள்வேன். அதன் பிறகு வாசிக்க ஆரம்பிப்ேபன்.
குறைந்த பட்சம் நான்கு ஐந்து தடவை பிராக்டீஸ் செய்த பிறகு தான் வீடிேயாவை இணையத்தில் அப்லோட் செய்வேன். எனக்கு அதில் முழு திருப்தி கிடைக்கணும். அது வரை பயிற்சி எடுப்பேன். எனக்கு மெலோடி பாட்டுக்கள் தான் பிடிக்கும் என்பதால் அது போன்ற பாட்டுக்களை தான் நான் தேர்வு செய்து வாசிக்கிறேன்.
குறிப்பாக இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்களின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அதற்காக துள்ளலான பாடல்களை வாசிக்க மாட்டேன் என்றில்லை. அந்த பாடல்களையும் என் வீணையால் இசைக்க முடியும். என் கணவர் ஒரு முறை எப்போதும் மெலோடி பாட்டு வாசிக்கிற ஒரு முறை ஃபாஸ்ட் பீட் பாடலை வாசித்து பார் என்றார். அவரின் விருப்பப்படி தெலுங்கில் ஒரு ஃபாஸ்ட் பீட் பாடலை வாசித்தேன்.
ரொம்பவே கஷ்டமா இருந்தது. குறைந்தபட்சம் 50 முறையாவது அந்த பாடலுக்கு பயிற்சி எடுத்து இருப்பேன். அதன் பிறகு தான் அந்த பாடலை என்னால் சரியாக பிழையில்லாமல் வாசிக்க முடிந்தது. என் வீடியோக்கள் மூலம் பல நிகழ்ச்சிகளில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சியிலும் வாசிக்க அழைப்பு வந்தது.
வெளிநாடுகளில் இருந்தும் வாய்ப்பு வருகிறது. ஆரம்பத்தில் கல்யாணம் மற்றும் காதுகுத்து நிகழ்ச்சிக்கு வாசிக்க கூடாதுன்னு இருந்தேன். ஆனால் தற்போது ராமோஜி பிலிம் நிறுவனர் அவர்களின் பேத்தியின் திருமண அழைப்பில் வாசிக்கும் வாய்ப்பு வந்தது. அவரின் பேத்தி என்னுடைய தீவிர ரசிகை என்பதால், என்னுடைய வீணை கச்சேரி தான் இருக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது.
காரணம் இது ேபான்ற விழாக்களில் நாம் இங்கு வாசித்துக் கொண்டு இருப்போம், யாரும் நம்மை கவனிக்க மாட்டார்கள். உறவினர்களுடன் அரட்டை அடிப்பார்கள் அல்லது அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருப்பார்கள். இசை மேல் ஆர்வம் செலுத்த மாட்டார்கள்.
ஆனால் இந்த திருமண வரவேற்பில் என் வீணையில் இருந்து நாதம் எழுந்த அடுத்த நிமிடம் அரங்கமே அமைதியாகிவிட்டது. அனைவரும் வீணையின் இசையில் மூழ்கி போனார்கள். எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. இப்போது என்னுடைய கண்ணோட்டம் மாறி இருக்கிறது. நல்ல இசைக்கு எப்போதுமே மதிப்புண்டு. அதை நாம் தரமாக கொடுப்பதன் மூலம் அனைவரையும் கட்டிப்போட செய்ய முடியும்’’ என்றவர் தனக்கு வந்த விருதுகளை எல்லாம் வேண்டாம் என்று நிராகரித்துள்ளார்.
‘‘என்னுடைய நிகழ்ச்சியை பார்த்து பலர் விருது கொடுக்க முன்வந்தாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். விருதுகள் வாங்க நான் ஏதும் சாதனை செய்திடவில்லை. இன்னும் நிறைய சாதிக்கணும். அதன் பிறகு தான் விருதுகள் பற்றி யோசிக்கணும். இப்பதான் நான் வீணை கற்றுக் கொண்டு இருக்கிறேன்.
இசை என்பது பெருங்கடல். அதன் ஆழம் இன்னும் பெரியது. என்னைப் பார்த்து இப்போது நிறைய பேர் வீணை கத்துக்கிறாங்க. நம்முடைய பாரம்பரிய இசை பற்றி அடுத்த தலைமுறைக்கு தெரியணும். இப்போது நிறைய பொது மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாசிக்கிறேன். தெலுங்கு படமான ‘அங்கியாதவாசி’ படத்தின் ஆடியோ லாஞ்சில் எனக்கு வாசிக்கும் வாய்ப்பு கிடைச்சது. சினிமாவில் வாசிக்க கூடாதுன்னு இல்லை. நேரம் இருப்பதில்லை.
முன்பு பாடல்களின் பின்னணி இசையை மட்டும் டேப்ரெக்கார்டரில் பதிவு செய்து பல்லவி, சரணம் வரும் இடத்தில் நான் வாசித்து வந்தேன். இப்போது எனக்கான இசை குழுவை அமைத்திருக்கேன். மிருதங்கம், கீபோர்ட், கிடார், டிரம்ஸ் அண்ட் பேட் போன்ற வாத்தியங்கள் கொண்ட குழு என்பதால் அவர்கள் பேக்ரவுண்ட் இசையை வாசிப்பார்கள். எதிர்கால திட்டம்னு நான் எதுவுமே யோசிக்கவில்லை.
என்னை பொறுத்தவரை வீணையை பிரபலமாக்க வேண்டும். இந்த இசை பற்றி அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்தணும். இது ஒரு ஃப்ரண்ட்லியான இசைக்கருவி. விருப்பம் மற்றும் ஆர்வம் இருந்தால், எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். வரும் காலத்தில் வீணையின் இசையை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்’’ என்ற வீணாவின் லேட்டெஸ்ட் பதிவு விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்னே…’ பாடல்.
Average Rating