தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு
விடுவிக்கப்படாத பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் அடிமைகள் போன்று வாழ்ந்து வருவதாகவும், இம்மக்களை மீட்டெடுத்து அவர்கள் சுதந்திரக் காற்றை நுவர்வதற்கு வழி செய்ய வேண்டியது அவசியமென்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபாஅணி) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் இக்கருத்தைத் தெரிவித்துள்ளதாக ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.
திருகோணமலையிலிருந்து தமிழ்நாட்டுக்கு பொதுமக்கள் அகதிகளாக செல்ல வழிவகுத்த காரணிகள் குறித்தும் இந்திய விஜயத்தின்போது அந்நாட்டு அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஆனந்தசங்கரி கூறினார்.
அண்மையில் இடம்பெற்ற இந்திய விஜயம் தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈபிஆர்.எல்.எவ். (பத்மநாபாஅணி) என்பனவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நானும் த.சித்தாத்தன் மற்றும் சிறீதரன் ஆகியோரும் புதுடில்லி சென்றோம்.
இந்தியாவின் ஆலோசனையும் வழிகாட்டலும் இன்றி சமாதானத்தை அடைய முடியாது என்பதையும் இலங்கையின் சமாதான முயற்சியில் இந்தியாவுக்கு பாரியதொரு பங்கு உண்டென்பது குறித்தும் அந்நாட்டுத் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தினோம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் இலங்கையுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டதாகவும் விளங்கும் இந்தியா இலங்கை விவகாரத்தில் பங்களிப்புக்களை வழங்குவது தார்மீகக் கடமையாகும். இந்திய விஜயத்தின்போது அதிகாரபகிர்வு தொடக்கம் வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருகின்ற விடயம் வரையில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினோம்
மூதூர், சம்பூர் ஈச்சலம்பற்று போன்ற பகுதிகளில் மக்கள் சிரமங்களுக்கு உட்பட்டு வருகின்ற விடயம் குறித்தும் இந்தியத் தலைவர்களுக்கு விளக்கினோம். மாவிலாறு அணைக்கட்டை மூடி மக்களுக்கான குடிநீரையும் பயிர்ச் செய்கைக்கு நீரையும் தடுத்த புலிகளின் முட்டாள் தனமான செயல் காரணமாக அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்பட்டது.
மாவிலாறு அணைக்கட்டினை மூடியமையை எந்தவொரு காரணத்தினாலும் நியாயப்படுத்த முடியாது இந்த அணைக்கட்டினை மூடியதால் மூவின மக்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக உயிரிழப்புக்கள், இடம்பெயர்வுகள் ஏற்பட்டுள்ளமை பற்றியும் சொத்துக்களுக்கு, இழப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறித்தும் நாம் விளக்கினோம்.
தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதற்கு மிக நீண்டகாலம் தேவைப்படுவதாகவும் உணவு, தங்குமிட வசதி மற்றும் மலசலகூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவது பற்றியும் இந்திய தலைவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம்.
அதேநேரம், இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களே எமது கலந்துரையாடலின் போது முக்கியமாக ஆராயப்பட்டது இவ்வாறு ஆனந்தசங்கரி விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.